
தபால் தலைகளை வெளியிடும் அதிகாரம் அந்தந்த நாடுகளுக்கு மட்டுமே உண்டு. ஆனால், உலகிலேயே ஒரு நாடு அல்லாது, தபால் தலை வெளியிடும் அதிகாரம் ஒரு பொது நல அமைப்பிற்கு உண்டு என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா? அதுதான் ஐக்கிய நாடுகள் சபை. அதுவும் உலகின் மூன்று நாணயங்கள் மதிப்பில், ஒன்று டாலர்கள் மதிப்பில், இரண்டாவது சுவிஸ் நாட்டின் பிராங்க் மதிப்பில், மூன்றாவது ஆஸ்திரியா நாட்டின் ஷில்லாங் மதிப்பில்.
1947ம் ஆண்டு ஐ.நா. சபை கூட்டத்தில் இந்த மாதிரியான தபால் தலையை வெளியிடும் யோசனையை அர்ஜென்டினா நாடு தெரிவித்தது. அதனை மற்ற நாடுகளும் ஏற்றுக்கொண்டன. அதன் பின்னர் 1951ம் ஆண்டு அமெரிக்க தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 1951ம் ஆண்டு ஐ.நா. சபை நாளான அக்டோபர் 24ம் தேதி டாலர்கள் மதிப்பில் முதல் முறையாக தபால் தலைகளை வெளியிட்டது. வெளியிட்ட அன்றே எல்லா தபால் தலைகளும் விற்றுத் தீர்ந்தன.
அமெரிக்க தபால் துறை, ஐக்கிய நாடுகள் சபை இரண்டு முக்கிய விதிகளுடன் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கலாம் என்று அனுமதித்தது. முதலாவதாக, தயாரிக்கப்படும் எந்தத் தபால் முத்திரைகளும் அமெரிக்க டாலர்களில் குறிப்பிடப்பட வேண்டும். இரண்டாவதாக, இந்த தபால் தலைகளை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை, தனது சொந்த தபால் தலைகளை வெளியிடும் அதிகாரத்துடன், ஐக்கிய நாடுகள் தபால் நிர்வாகம் (United Nations Postal Administration - UNPA) என்ற அமைப்பின் மூலம் தபால் தலைகளை வெளியிடுகிறது. UNPA மூன்று வெவ்வேறு நாணயங்களில் தபால் தலைகளை வெளியிடும் ஒரே ஒரு தபால் ஆணையம் ஆகும்.
மனித சமூகம் அமைதியான முறையில் வாழ்க்கையை மேற்கொள்ளவும், மக்கள் மனநிறைவுடன் வாழவும் ஐ.நா. பொது சபையால் முதன் முதலில் 1981ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத 3வது செவ்வாய்க்கிழமையில் உலக அமைதி தினத்தை கொண்டாடத் தொடங்கியது. பின் இதுவே ஐ.நா. உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் 2002ம் ஆண்டு முதல் செப்டம்பர் 21ந் தேதியை உலக அமைதி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிலைப்படுத்தி ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் உலக சமாதான தினமான செப்டம்பர் 21ம் தேதி ஏதாவது ஒரு பொதுநல கருத்தை மையமாக வைத்து தபால் தலையை வெளியிடுகிறது. மனித உரிமை, மனிதவள மேம்பாடு, தொழிலாளர்கள் ஒழுக்க நெறி, அனைவருக்கும் உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக சமத்துவம், சுகாதாரம் போன்ற உலகின் பொது நலத்தை மையப்படுத்தி தபால் தலைகள் வெளியிடப்படுகின்றன.
உலக சமாதான தூதுவராக ஐ.நா. சபை செயல்படுவதுடன் சமாதான கருத்துகளையும் தபால் தலைகள் மூலம் வெளியிடுகிறது. அதேவேளையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தபால் இலாகாக்களையும் அதே கருத்தை வலியுறுத்தி தபால் தலைகளை வெளியிட வேண்டுகோள் விடுக்கிறது. தபால் தலைகளை வெளியிடும் முன் அந்த ஆண்டின் மைய கருத்தை ஐ.நா. வெளியிடுகிறது. அதனையொட்டி போஸ்டர் போட்டி உலக பள்ளி மற்றும் பொது ஜன மக்கள் இடையே நடத்தி பரிசுகள் வழங்கி அதிலிருந்து சிறந்ததை தபால் தலையாக வெளியிடுகிறது.
UNPAயின் முக்கியப் பணி ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் சிறப்பு தபால் தலைகளை வெளியிடுவது. சர்வதேச யோகா தினம், தீபாவளி போன்ற உலக நிகழ்வுகள் மற்றும் கலாசாரங்களுக்காக நினைவூட்டல் தபால் தலைகளை வெளியிடுகிறது. உலகின் தனிப்பட்ட ஆளுமைகளின் நினைவாகவும் தபால் தலைகளை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளுக்கிடையில் அமைதியை கொண்டுவர கலை, இலக்கியம், சினிமா, இசை, விளையாட்டு ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்ற பிரமுகர்களை ஐக்கிய நாடுகள் சபை அமைதித் தூதுவர்களாக நியமித்து அமைதிச் செய்திகளை நாடுகளின் அனைத்து பகுதியிலும் கொண்டு சேர்க்கிறது.