தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11). நினைவு நாள் விழாக்களில் பேசும் பலரும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை தாக்கியதில் பாரதியார் இறந்தார் என்று சொல்வது வழக்கம். ஆனால் பாரதியார் யானை தாக்கி இறக்கவில்லை.
யானை தாக்கிய சம்பவம் 1921 ஜூன் மாதத்தில் நடந்தது. அதன் பின்னர் பாரதியார், சுதேசமித்திரன் அலுவலக வேலைக்கு சென்று வந்துள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதுடன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அது பற்றி கட்டுரையும் கொடுத்துள்ளார். திருவல்லிக்கேணி கோயிலில் இருந்த அர்ஜுனன் என்ற யானைக்கு பாரதியார் எப்போதும் பழம் கொடுப்பது வழக்கம். அவ்வாறே அந்த சம்பவ நாளிலும் பழம் கொடுத்தார். மதம் பிடித்திருந்த யானை, அவரை தன் காலடியில் இழுத்துப் போட்டுக் கொண்டது. பாரதியார் யானையின் காலுக்கு அடியில் கிடந்தார். நெருங்கி செல்ல யாருக்கும் துணிச்சல் இல்லை. செய்தி கேட்டு ஓடி வந்த குவளைக்கண்ணன், யானை கட்டப்பட்டிருந்த இடத்தின் கம்பி வேலியைத் தாண்டி சென்று பாரதியை தூக்கிக் கொண்டு வந்தார். யானை இழுத்துப் போட்டதில் பாரதியாருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. மண்டயம் சீனிவாச்சாரியார் மற்றும் சிலர் பாரதியாரை ஒரு வண்டியில் வைத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்கள். சில நாட்கள் வலியால் அவதிப்பட்ட பாரதியார் வழக்கம்போல தனது பணிகளை செய்ய தொடங்கினார்.
1921 செப்டம்பர் ஒன்றாம் தேதி பாரதியாருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அது மேலும் கடுமையாக மாறியது. வீட்டிலேயே படுத்த படுக்கையாக கிடந்தார். மிகவும் மோசமான நிலையில் இருந்த பாரதியாரை உடன் இருந்து கவனித்துக் கொண்டவர்கள் பரலி சு நெல்லையப்பர், நீலகண்ட பிரம்மச்சாரி லட்சுமண ஐயர் ஆகியோர். செப்டம்பர் 11ஆம் தேதி இரவு இவர்களுடன் பேசிய பாரதியார் ஆப்கானிஸ்தான் மன்னர் அமானுல்லா கான் பற்றி ஒரு கட்டுரை எழுதி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியதாக நீலகண்ட பிரம்மச்சாரி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு கடந்து 1:30 மணிக்கு பாரதியார் உயிர் பிரிந்தது. ஈமக் கிரியைகளுக்கு தேவையான நிதி உதவியை வழக்கம்போல துரைசாமி ஐயரே தந்தார் என்றும் சுமார் 20 பேர் மட்டுமே இறுதி ஊர்வலத்தில் வந்தனர் பாரதியின் உறவினர் ஹரிஹர சர்மா இறுதி சடங்குகளை செய்தார் இடுகாட்டில் சுரேந்திரநாத் ஆர்யா சிறு சொற்பொழிவு நடத்தினார் என்று பரலி சு நெல்லையப்பர் குறிப்பிடுகிறார்.
சென்னை கார்ப்பரேஷனை பொருத்தவரை அவர் செப்டம்பர் பன்னிரண்டாம் தேதி இறந்தார். ஆனால் இந்து மத மரபின்படி சூரிய உதயத்தில் தான் புதிய நாள் தொடங்குகிறது. ஆகவே அவர் செப்டம்பர் 11ஆம் தேதி மறைந்ததாகவே கருதி அதே நாளில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் ஒன்று, இன்றளவும் வீரத்துக்கு புகழ்பெற்ற கவிஞர் என்றால் அது நம் முண்டாசு கவி பாரதி மட்டுமே என்பதை மார்தட்டி சொல்ல முடியும்.