உலகெங்கும் செப்டம்பர் 8 ஆம் நாளன்று அனைத்துலக எழுத்தறிவு நாள் (International Literacy Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1965 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம், உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. அதனைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டு முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் எழுத்தறிவின் முக்கியத்துவத்தைத் தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புகளுக்கும் அறிய வைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
எழுத்தறிவு என்பது வாசித்தல், எழுதுதல், எண்கணிதப் பயன்பாடு ஆகியவற்றின் தொகுப்பாகும். தற்காலத்தில் எழுத்தறிவு என்பது மொழிப் பயன்பாடு, எண்களின் பயன்பாடு, படங்கள், கணினிகள், மற்றும் புரிதலுக்கான அடிப்படைக் கருவிகளின் பயன், தகவல் பரிமாற்றம், பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடு பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடுகளையும் அமைப்புகளையும் அறிந்து பயன்படுத்துதல் ஆகியவற்றை உட்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ), எழுத்தறிவு என்பது அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள கருத்துடன் பொருந்தி இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல், தகவல் பரிமாற்றம் செய்தல், கணித்தல் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது தொடர் கற்றல் நிகழ்வு ஆகும். ஒவ்வொருவரும் தம் இலக்கை அடைவதற்கான கருவியாகும். எழுத்தறிவானது தனியர் தன் அறிவையும் திறனையும் வளர்த்துக் கொண்டு, அண்மைச் சமூக நிகழ்வுகளில் பங்கேற்று விரிந்த சமுதாயம் வளர்ச்சி பெறுதலை உள்ளடக்கியதாகும் என்று எழுத்தறிவை வரையறுத்துள்ளது.
எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும், படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து பெரியவர்களில் ஒருவர் இன்னும் கல்வியறிவு பெறவில்லை, இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறுவர்கள் பள்ளிக்கூட வசதிகள் இல்லாத நிலையில் உள்ளனர். இதனால், இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் தேசியப் புள்ளிவிவர ஆணையத்தின் 2017 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் எழுத்தறிவு சராசரி 77.7% என்றும், ஆண்கள் 84.7%, பெண்கள் 70.3% என்றும் இருக்கிறது. இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிளில் கேரளா அதிக அளவாக 96.2% என்றும், இங்கு ஆண்கள் 97.4%, பெண்கள் 95.2% என்றும் இருக்கிறது. ஆந்திரப்பிரதேசம் குறைந்த அளவாக 66.9% என்றும், இங்கு ஆண்கள் 80%, பெண்கள் 59.5% என்றும் இருக்கிறது. இப்பட்டியலில் தமிழ்நாடு 16 ஆம் இடத்திலிருக்கிறது. தமிழ்நாட்டில், சராசரியாக 82.9% என்றும், இங்கு ஆண்கள் 87.9%, பெண்கள் 77.9% என்றும் இருக்கிறது.
இன்றைய அனைத்துலக எழுத்தறிவு நாளில், அருகிலுள்ள எழுத்தறிவு பெறாதவர்களுக்கு நம்மால் இயன்றவரை எழுத்தறிவு பெற உதவலாம்.