
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18 ஆம் நாளன்று, ‘பன்னாட்டு சம ஊதிய நாள் ’ (International Equal Pay Day) கடைப்பிடிக்கப்படுகிறது. சமமான வேலைக்கு சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாலினம் மற்றும் இனம் சார்ந்த ஊதிய இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வருவதே இந்த நாளின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் முன்முயற்சியின் கீழ், 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று முதல் முறையாக பன்னாட்டு சம ஊதிய நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
பாலின ஊதிய இடைவெளி என்பது முழுநேர வேலை செய்யும் ஆண்களுக்கும், முழுநேர வேலை செய்யும் பெண்களுக்கும் இடையிலான சராசரி ஊதியத்திற்கு இடையிலான வேறுபாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். சந்தை அடிப்படையிலான பொருளாதாரங்களைக் கொண்ட 37 ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் நீண்டகாலப் பொருளாதார முன்னேற்றத்தை ஆதரிக்கும் பொதுக் கொள்கைக்கான விதிமுறைகளை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படும் ஒரு சிறப்பு தளமாக இருக்கும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development) கணக்கெடுப்பின்படி, பாலினங்களுக்கு இடையில் மிக உயர்ந்த ஊதிய சமத்துவத்தைக் கொண்ட நாடு பெல்ஜியம் ஆகும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, சம ஊதியத்தை வலியுறுத்தி வந்தாலும், “பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கட்டமைப்பு ரீதியான சமமற்ற அதிகார உறவுகள், வறுமை மற்றும் சமத்துவமின்மை மற்றும் வளங்கள் மற்றும் வாய்ப்புகளை அணுகுவதில் உள்ள குறைபாடுகள், பெண்கள் மற்றும் சிறுமிகளின் திறன்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற காரணங்களால் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிகாரமளித்தல் தொடர்ந்து பின்தங்கியுள்ளன. அந்த இடைவெளியைக் குறைப்பதில் முன்னேற்றம் மெதுவாகவே இருக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டாலும், நடைமுறையில் அதைப் பயன்படுத்துவது கடினமாக உள்ளது” என்று இதனை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளது.
இதேப் போன்று, ஐக்கிய நாடுகள் அமைப்பு பாலின ஊதியம் குறித்து சில சுவையான உண்மைகளையும் வெளியிட்டிருக்கிறது. அவை;
பெண்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது,
பாலின ஊதிய இடைவெளி உலகளவில் சுமார் 20 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம மதிப்புள்ள வேலைக்கு ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலருக்கும், பெண்கள் 77 காசுகள் சம்பாதிக்கிறார்கள். குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கு இன்னும் ஊதிய இடைவெளி அதிகமாக இருக்கிறது.
உலகளவில் ஆண்களை விட, பெண்கள் வேலையில்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பகுதிகள் வாரியாக பல ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.
உலகளவில் பணிபுரியும் பெண்களில் 28 சதவீதம் பேர் மட்டுமே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை எடுத்துக் கொள்ள முடிகிறது.
உலகளவில், ஓய்வு பெறும் வயதைத் தாண்டி, வழக்கமான ஓய்வூதியம் இல்லாமல் இருப்பவர்களில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் பெண்கள்.
ஆண்களை விட பெண்கள் குறைந்தது இரண்டரை மடங்கு அதிகமாக ஊதியம் பெறாத வீட்டு வேலைகளையும் பராமரிப்பு வேலைகளையும் செய்து கொண்டிருக்கின்றனர்.
பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதில் சம ஊதியம் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். முழு உலக சமூகமும் முயற்சி எடுக்க வேண்டும், மேலும் இன்னும் செய்ய வேண்டியது அதிகம். சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பொருளாதார அதிகாரமளிப்பை மேம்படுத்துவதற்காக, ஐ.நா. பெண்கள் மற்றும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ILO) உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை, உறுப்பு நாடுகள், பெண்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகள், பெண்ணியக் குழுக்கள், அத்துடன் வணிகங்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் அமைப்புகளை அழைக்கிறது.