October 9th World Postal Day - சார், தபால்... !

அக்டோபர் - 9 உலக அஞ்சல் தினம்!
October - 9 is World Postal Day!
World Postal DayImage credit - pixabay
Published on

ன்புள்ள.'... என்று ஆரம்பிக்கும் இந்த ஒற்றை வார்த்தையைக் கடந்து வராதவர்கள் பெரும்பாலும் குறைவே… பலரின் வாழ்க்கையிலும் அற்புத மேஜிக் செய்த வார்த்தை.

‘தபால் வந்திருக்கிறது’, ‘வாழ்த்து அட்டை வந்திருக்கிறது’ என்ற வார்த்தைகளை தினம் தினம் கேட்டு வளர்ந்த 60,70, 80களில் பிறந்தவர்களுக்குக் கடிதத்தின் அருமை தெரியும். 

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அன்பைப் பரிமாறிக்கொள்ள அஞ்சலட்டை, இன்லேன்ட் லெட்டர்தான் இருந்தது. உறவுகள் தூரமிருந்தபோதும் உல்லாசமாய் செய்திகளைச் சுமந்து வந்தன தபால்கள்.

"பக்கத்து வீட்டு பானு அக்கா மவ பெரிய மனுஷியாயிட்டா", "எதிர் வீட்டு ரம்யா வீட்டு மாடு கன்னுக்குட்டி ஈன்று இருக்கு...", "அடுத்த வாரம் பெரிய மாமா வீட்ல காதுகுத்து வச்சிருக்காங்க…" - இப்படி பல விஷயங்கள்.

இப்பவும் பல வீடுகளில் பழைய கடிதங்களைப் பொக்கிஷம்போல் பாதுகாத்து, படித்து பரவசப்படுபவர் பலர் இருக்கின்றனர் (நான்கூட...)

நெஞ்சின் உள்ளே வைத்திருந்த அன்பையும் உணர்வையும் பல மைல் தூரம் கடந்து எடுத்து வந்தன தபால்கள். நம் பேச்சும் புன்னகையும் உணர்த்தும் அன்பைவிட 'இரண்டு வரி'க் கடிதம் இன்னமும் ஆழமாக அதை மனதில் பதியவைக்கும். 

கல்லூரி படிக்கும் காலத்தில் பேனா நண்பர்களின் எண்ணங்களைச் சுமந்துவரும் கடிதங்களைப் படிக்கும்போது வரும் சந்தோஷம் இருக்கிறதே?! அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அதிலும் வெளிநாட்டு அஞ்சல் முத்திரைகளைச் சுமந்துவரும் கடிதங்களைக் கையில் வாங்கும்போதே கர்வமாக இருக்கும்.

தோழிகள் எழுதும் கடிதத்திற்குப் பதில் போடுவது சுவாரஸ்யம். அது பொக்கிஷமாய்  நெஞ்சுக்குள் இன்னமும்… இதயங்களை வரிகளுக்குள் சுமந்ததால்... அவர்கள் எழுதிய கடிதங்கள் இனிமையானதாக, உண்மையானதாக இருந்தது. ஒவ்வொரு அஞ்சல் அட்டையும் உயிர்கொண்டு தீட்டிய காவியமாய்... 'அன்புள்ள...’ என்று ஆரம்பத்தில் எழுதி... கடிதத்தைத் தொடரும்போது நம் உணர்வுகளை அக்கடிதம் படிப்பவரால் மட்டுமே உணரமுடியும்.

கொஞ்சல், சிணுங்கல், கூப்பாடு, கோபம், வருத்தம், அன்பு... இப்படி அஞ்சலட்டை பாட்டிசைத்தக் காலம் அழகானது!

பொங்கல் வந்தால் போதும். விடுமுறை, கரும்பு இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். "உனக்கு எத்தனை வாழ்த்து அட்டை வந்தது? எனக்கு இத்தனை வந்தது..." என்று விடுமுறைக்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரியில் பேசியதெல்லாம் அழகான நாஸ்டால்ஜியா. ஒவ்வொரு பொங்கல் வாழ்த்து அட்டையிலும் எத்தனையெத்தனை சுவாரஸ்யங்கள்… அதை அனுப்பியவர் நம் மேல் வைத்திருந்த அன்பு... கவிதையாய்!

வெள்ளைக்காசாணைகளைப் பார்க்கும் கிராமத்து மக்கள் யாவருக்கும் அதுதான் குலசாமி. (எங்க வளவனூரில் பலருக்கும் அதுதான் குலசாமி)!

அஞ்சலட்டையில் எழுதும்போது உறவுகளின் அன்பு தெரிந்தது. இன்றோ உறவுகளும் தொலைந்துபோனது! அன்பும் மறைந்து போனது! அலைபேசி மோகினி 'உள்ளேன் ஐயா' என்று சொல்வதற்கு முன்பு வரை வாழ்த்து அட்டையும் / அஞ்சலட்டையின் பழக்கமும் சிலரிடமாவது 'கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. இப்பொழுதோ உடைந்து, உருக்குலைந்து, ஆளாளுக்கு உருவாக்கும் அநியாய ஆங்கிலத்தில் ஒருவரி குறுஞ்செய்தியோடு அல்லவா முடிந்து போகிறது கடித வடிவம்!

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்புகள் அற்று வாழ்வது மிகவும் அவசியம்!
October - 9 is World Postal Day!

பிரச்னைகள், சிந்தனைகள், உணர்வுகள், தகவல்கள், எதிர்பார்ப்புகள் ஆசைகள் கண்ணீரில் தோய்ந்த மன ஆசைகள் எல்லாம் இளமஞ்சள் அட்டைகளாய் / வெளிர்நீல மடல்களாய் (வாழ்க்கை) கையில் வழிந்ததெல்லாம் ஒருகாலம்!

'அன்புள்ள' எனத் தொடங்கி, 'ஆசை முத்தங்களுடன்...' என முடிக்கும் அந்தக் காலக் கடிதங்கள்போல் இல்லை இன்று வாட்ஸ் அப்பில் நொடிக்கு ஒருமுறை சொல்லும் 'டார்லிங்'குகளும், ஐ லவ் யூக்களும்.

அன்று, அஞ்சலட்டை இனிய மொழியில் செய்திகளை உடன் தந்து அழகாய் மெட்டுப்போட்டு பாட்டிசைத்தது. இன்று அலைபேசியில் இருக்கும் பல்வேறு செயலிகள் மீட்டுவது அபஸ்வரத்தை மட்டுமே!

இது உண்மை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com