
1872ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கொல்கத்தாவில் டாக்டர் கிருஷ்ணன் கோஷ் - சுவர்னலதா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ஸ்ரீ அரவிந்தர் என்ற அரவிந்தகோஷ் .
அவர் 1879-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் கல்வி பயிலச் சென்றார். அங்கு பள்ளிக் கல்வியை செயின்ட் பால் பள்ளியிலும் பின்னர் உயர் கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். பின் அங்கேயே ஐசிஎஸ் போட்டி தேர்விலும் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றார். லண்டனிலிருந்து இந்தியா திரும்பும் போது அவர் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை மட்டும் முடித்து வரவில்லை, பிரிட்டிஷ் அரசின் கொடுமைகள் மீது கடும் கோபத்துடன் இருக்கும் இளைஞராக திரும்பினார்.
1892-ம் ஆண்டு லண்டனில் இருந்த போதே இந்திய விடுதலைக்காக அமைக்கப்பட்ட ரகசிய சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். இந்தியா திரும்பிய பிறகு நேரடியாக இந்திய விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டார். இந்தியா திரும்பிய அரவிந்தர் பரோடாவில் அரசுப் பணியில் சேர்ந்தார். பிறகு கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார்.
1901-ம் ஆண்டு கொல்கத்தாவில் மிருணாளினி தேவியை திருமணம் செய்தார். அதன் பின் ரகசிய புரட்சி சங்கம் அமைத்து தேசியவாதிகளை ஒன்று திரட்டினார் அரவிந்தர். வந்தே மாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, "பந்தே மாதரம்" என்ற பெயரில் ஒரு செய்தித்தாளாக வெளியிட்டார். இந்த செய்தித்தாள் மூலம், இந்திய தேசியவாத இயக்கத்திற்கு ஒரு புதிய அரசியல் உத்வேகத்தை ஊட்டினார். 1907-ம் ஆண்டு தேசியவாதிகள் அரவிந்தர் தலைமையில் கூடினர். அதனையறிந்த பிரிட்டிஷ் அரசு அலிப்பூர் குண்டு வெடிப்பு சதியில் அவரை சிக்க வைத்து சிறையில் அடைத்தனர்.
அலிப்பூர் சிறையில் அரவிந்தர் இருந்த போது அவருக்கு ஆத்மானுபவங்கள் ஏற்பட்டன. அவர் சிறையில் இருந்த ஓராண்டும் யோகம் பயில ஆரம்பித்தார். எங்கு நோக்கிலும் அவருக்கு கிருஷ்ணன் உருவம் தான் தெரிந்தது. சிறைக்குள் இருக்கும் போது "வழக்கை நான் பார்த்து கொள்கிறேன். நீ அமைதியாக இரு"என்ற குரல் அவருக்குள்ளிலிருந்து ஒலித்தது. அதே குரல், 1909-ம் ஆண்டு "கர்மயோகி" என்ற பத்திரிகை ஆசிரியராக அவர் இருந்த போதும் ஒலித்தது. பின்னர் அதே குரல், "நீ புதுச்சேரி போ"என உத்தரவிட்டது.
அலிப்பூர் சிறையில் ஓராண்டு காலம் இருந்த போது ஏற்பட்ட ஆன்மீக மாற்றத்தால் அரசியலில் இருந்து விலகி பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரிக்கு 1910-ம் ஆண்டு வந்தார். நண்பர்களது வீடுகளில் தங்கி இருந்த ஸ்ரீ அரவிந்தர் தனது சிந்தனைகளை ‘ஆர்யா' என்ற தனது ஆன்மீக இதழில் (1914 - 1921) எழுதினார்.
இந்த காலகட்டத்தில் தான் அவர் ஸ்ரீஅன்னை என்று அழைக்கப்படும் பிரெஞ்சு பெண் ஆன்மீகவாதியான மீர்ரா அல்பெஸ்சாவை சந்தித்தார். 1920-ம் ஆண்டு அன்னை நிரந்தரமாக புதுவைக்கு வந்து சேர்ந்தார். ஆன்மீகவாதியான அவரிடம் ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து தான் 1926-ம் ஆண்டு "அரபிந்தோ ஆசிரமம்" தொடங்கினர்.
1926-க்குப் பிறகு, ஆசிரமத்தில் ஸ்ரீ அரவிந்தர் முதல் மாடியில் உள்ள ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் முழுமையாக ஓய்வு பெற்றார், அரிதாகவே வெளியே தோன்றினார், ஆசிரமத்தின் முழுமையான பராமரிப்பபை அன்னையிடம் விட்டுவிட்டார். அடுத்த 24 ஆண்டுகளை அவர் அப்படித்தான் கழித்தார், எழுதினார், அரிதாகவே யாருடனும் பேசினார். மாணவர்கள் அவரை வருடத்திற்கு 3 முதல் 4 முறை 'தரிசனம்' (மௌனத்தில் ஆசீர்வாதம்) போதுதான் பார்க்க முடிந்தது.
17 ஆண்டுகள் புதுச்சேரியில் தனிமையில் தீவிர யோக சாதனையில் ஆழ்ந்தார். அதன் மூலம் அவர் பூரண யோக நிலையை அடைந்தார். அரவிந்தர் தான் கற்ற அதிமன சக்தியை ஸ்ரீஅன்னைக்கு வழங்கினார். பின்னர் தனது 78-வது வயதில் 1950-ம் ஆண்டு டிசம்பர் 5-ம்தேதி காலமானார். அரவிந்தர் மறைவிற்குப் பிறகு அரபிந்தோ ஆசிரமத்தை தொடர்ந்து நடத்தினார் ஸ்ரீஅன்னை.
அரவிந்தர் முறையாக யோக சாதகங்கள் கற்றவர். கவிதை மற்றும் கவிதை குறித்தான விமர்சனங்களை எழுதியவர். இலக்கிய, தத்துவ வாசிப்பிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர். அவருக்கு ஆங்கிலம் தவிர கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ் மொழிகளும் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.