தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம்பிடித்தவர் எழுத்தாளர் சுஜாதா. இவர் மே 3, 1935ல் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். எழுத்தில் பல புதுமைகளைச் சேர்த்தவர். தமிழ் எழுத்துலகின் சூப்பர் ஸ்டார் என்று இவரை சொல்லுவார்கள். அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தை மிகவும் எளிய தமிழில் கதைகளாகத் தந்தவர்.
சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். குமுதம் ரா.கி.ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தனது மனைவி பெயரான, 'சுஜாதா' தனது புனைப்பெயராக வைத்துக் கொண்டார். இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, கட்டுரைகள், திரைப்பட கதை - வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தனது முத்திரையினைப் பதித்தவர்.
நாட்டார் வழக்காறு, கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். எனும் பெயரிலும் எழுதி வந்தார். திருச்சி தூய வளனார் கல்லூரியில், அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக, அவரைப் பாராட்டி, 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கி கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு, ‘வாஸ்விக்’ விருது வழங்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள சுஜாதா கூறிய எளிய வழிகள்:
1. எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக்கொள்ள முடியும். அதற்கு தமிழ் நன்றாகத் தெரிய வேண்டும். தமிழில் நிறையப் படிக்க வேண்டும்.
2. அதிகம் பேசாமல் நிறைய கவனிக்க வேண்டும்.
3. எழுத்து என்பது ‘Memory shaped by art‘ என்று சொல்வார்கள். உண்மை எத்தனை? கற்பனை எத்தனை? அவற்றை எந்த அளவில் கலப்பது? நடந்ததைச் சொல்வதா? நடந்திருக்க வேண்டியதைச் சொல்வதா? இந்த ரசாயனம் புரிந்துகொள்ள கொஞ்சம் நாளாகும். இதற்குக் குறுக்கு வழியே இல்லை. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும்.
4. எழுதியதைத் திருத்துவதும், திரும்பத் திரும்ப எழுதுவதும் அவசியம். எழுதியதைச் சில தினங்கள் விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் கோணத்திலிருந்து அதைப் பார்க்க இயலும். கொஞ்சம் கூடக் கருணையே காட்டாமல் அநாவசிய வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சிதைத்து விட வேண்டும். நான் எழுதியதெல்லாம் மந்திரம் போல; ஒரு வார்த்தையை நீக்க முடியாது; நீக்கக் கூடாது என்பதெல்லாம் மடத்தனம்.
5. உங்களுக்கே திருப்தி வரும்வரை திரும்பத் திரும்ப எழுதுவதிலும், திருத்துவதிலும், நீக்குவதிலும், சேர்ப்பதிலும்தான் நல்ல எழுத்து ஜனிக்கிறது. எழுதியதை ஓரிரு நாள் கழித்துப் படித்துப்பார்த்தால் அதில் மாற்றங்களைச் செய்யத் தோன்றும். கூற வருவதை சுருக்கமாக, குழப்பம் இல்லாமல் கூற வேண்டும்.
"ஒரு விஷயத்தை சுருக்கமா சொல்லிடணும். சட்டுனு விஷயத்துக்கு வந்துடணும். வளவளன்னு சுத்தப்படாது. சுஜாதாவின் வெற்றியே அதான் தெரியுமோ?" என்று பத்திரிகையுலக ஜாம்பவான் சாவி இவரைப் பற்றி கூறியது குறிப்பிடத்தக்கது.