ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி பத்திரிகை. ஒரு நாட்டின் கட்டமைப்பையே மாற்றக்கூடிய சக்தி பத்திரிகைக்கு உண்டு. பத்திரிகையில் பணியாற்றுபவர்களுக்கு, பொறுமை, நேர்மை, கடமை இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே அவர்களால் வெற்றி பெற முடியும், பத்திரிகை சுதந்திரத்தை காப்பாற்றவும் முடியும். பத்திரிகை சுதந்திர நாள் எப்படி வந்தது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாக இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
1993ம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3ம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்க பத்திரிகைகளால் கூட்டாக 1991ம் ஆண்டு இந்நாளிலேயே ‘பத்திரிகை சுதந்திர சாசனம்’ (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.
இது 1991ம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26ம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட, 'உலகின் சகல பிராந்தியங்களுக்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தின் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலுக்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக இது உருவானது.
இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கின்றனர். இந்த விருது கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986ம் ஆண்டு டிசம்பர் 17ல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.
இந்நாள் அன்று, உலக அமைதிக்காகவும், பேச்சு சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிகை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டாலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது.
பத்திரிகை சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தி நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள்.