அமெரிக்க சுதந்திரத்திற்கு வழி வகுத்த 'டீ பார்ட்டி’!

ஜூலை 4, அமெரிக்காவின் 248வது சுதந்திர தினம்!
America's Independence Day
America's Independence Day

ஜூலை 4, அமெரிக்காவின் 248வது சுதந்திர தினம். இதனால் அமெரிக்காவை பழமையான மக்களாட்சி நாடு என்கிறோம். பிரிட்டனின் காலனியாக இருந்த அமெரிக்கா, ஜூலை 4,1776இல் சுதந்திரப் பிரகடனம் அறிவித்தது. இதற்குக் காரணமாக இருந்தது டிசம்பர் 16, 1774இல் பாஸ்டன் துறைமுகத்தில் நிகழ்ந்த “பாஸ்டன் டீ பார்ட்டி” என்ற நிகழ்வு. சரித்திரத்தை சற்று பார்ப்போம்.

அமெரிக்காவை “புலம் பெயர்ந்தோர் நாடு” என்பார்கள். முதலில் பிரிட்டனிலிருந்து, புது உலகம் என்று அறியப்பட்ட இந்த பகுதிக்கு பலர் குடியேறினர். மத துன்புறுத்தல், வளமான வாழ்வு தேடி சிலர், பிரிட்டன் சிலரை இங்கு குடியமர்த்தியது. பின்னர் மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் மக்கள் குடியேறினர். இங்கு குடியேறிய மக்கள் 13 காலனிகளாக இருந்தனர். இந்த காலனிகள் பிரிட்டனின் கீழ் இருந்து வந்தது. இந்த காலனிகளை கண்காணிக்க கவர்னர் ஜெனரல் பிரிட்டனால் நியமிக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் அரசரை, அரசராக ஏற்றுக் கொண்ட காலனிவாசிகள், பிரிட்டனின் பாராளுமன்றம், தங்கள் காலனிக்கு சட்டம் இயற்றுவதையும், வரி விதிப்பதையும் ஒத்துக் கொள்ளவில்லை. பிரிட்டன் பாராளுமன்றத்தில் காலனியின் பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே காலனிகளுக்கான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று கருதினர். பிரிட்டனிலிருந்து காலனிகளுக்கு அனுப்புகின்ற டீ தூளுக்கு பிரிட்டன் வரி விதித்தது.

டிசம்பர் 1774ஆம் வருடம் பிரிட்டனின் மூன்று கிழக்கிந்திய கம்பெனி கப்பல்களில், டீ பாஸ்டன் துறைமுகத்திற்கு வந்தது. கவர்னர் ஜெனரல், டீக்குண்டான வரியை செலுத்த வேண்டும் என்றார். நாங்கள் வரி செலுத்த மாட்டோம், டீயுடன் கப்பலை திருப்பி அனுப்புங்கள் என்றனர் நகர வாசிகள். டிசம்பர் 16ஆம் தேதி, சிவப்பிந்திய வேடமணிந்த காலனி வாசிகள் மூன்று கப்பல்களிலும் ஏறி டீ நிரப்பபட்டிருந்த 342 பெட்டிகளையும் கடலில் வீசினர். இது இராஜத் துரோகம் என்று கருதிய பிரிட்டன், காலனிவாசிகள் மீது கட்டுக்கு அடங்காத அடக்கு முறையைக் கொண்டு வந்தனர்.

America's Independence Day
America's Independence Day

பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெறுவதுதான் நல்லது என்று 13 காலனிகளும் முடிவு செய்தனர். காலனிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய “கான்டிநென்டல் காங்கிரஸ்”, ஜூலை 2, 1776இல் பிரிட்டனிலிருந்து விடுதலை பெறுவது என்ற அறிக்கைக்கு, ஆதரவாக வாக்களித்தது. இதை மக்களுக்கு எடுத்துரைக்கும் “சுதந்திர தின பிரகடனம்” அறிக்கை ஒத்துக் கொள்ளப்பட்டு பிலடெல்பியாவில் சுதந்திர ஹாலில் உள்ள சுதந்திர மணி ஒலிக்கப்பட்டது. இந்த அறிக்கையில், தலைவர்கள் கையெழுத்திட்ட தேதி ஆகஸ்ட் 2. இந்த அறிவிப்பின் மூலம் 13 அமெரிக்க காலனிகள், பிரிட்டனுடனிருந்த தொடர்பை முறித்துக் கொண்டு “மாநிலங்கள் ஒன்றிணைந்த அமெரிக்கா” உருவாகியது. (United States of America). 13 காலனிகள் தவிர மற்ற காலனிகளும், கனடா உட்பட, அமெரிக்காவில் இணையலாம் என்று அழைக்கப்பட்டனர்.

அமெரிக்கா சுதந்திர பிரகடனம் அறிவித்ததை ஏற்றுக் கொள்ள மறுத்த பிரிட்டன், அமெரிக்காவின் மேல் போர் தொடுத்தது. ஆனால், இவ்வாறு நடக்கலாம் என்று கருதிய அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டுடன் இராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. அமெரிக்கப் படையின் தலைவராக ஜார்ஜ் வாஷிங்டன் பொறுபேற்றார். இந்தப் போரில் பிரிட்டன் தோல்வியை சந்தித்தது. இதற்குப் பின்னால், 1783ஆம் ஆண்டு அமெரிக்கா பிரிட்டனிடையே, பாரிஸில் உடன்படிக்கை ஏற்பட, அமெரிக்காவை தனி நாடாக பிரிட்டன் அங்கீகரித்தது.

அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான ஜான் ஆடம்ஸ், ஜூலை 4, சுதந்திர தினம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, ஜூலை 4, சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மறுத்தார். சுதந்திரம் வேண்டும் என்று வாக்களித்த ஜூலை 2, உண்மையான சுதந்திர நாள் என்பது அவருடைய கருத்து. சுதந்திர தின அறிக்கையை வடிவமைத்த ஐந்து நபர்களில் ஜான் ஆடம்ஸ் அவர்களும் ஒருவர்.

ஜான் ஆடம்ஸ் அவருடைய மனைவிக்கு ஜூலை 3, 1776இல் எழுதிய கடிதத்தில், “அமெரிக்க சுதந்திர தினம் ஆடம்பரமான அணிவகுப்பு, கண்டத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை வாண வேடிக்கைகள் என்று இந்தக் காலம் மட்டுமல்ல என்றென்றும் கொண்டாடப்பட வேண்டும்” என்றார்.

சுதந்திர தினம் அறிவித்த தினத்திலிருந்து, 95 வருடங்கள் அமெரிக்க சுதந்திர தினம் விடுமுறை இல்லாத நாளாக கொண்டாடப்பட்டது. ஜூலை 4, பொது விடுமுறை நாள் என்ற அரசு அறிவிப்பு, 28 ஜூலை 1870 வெளியிடப்பட்டது. வெள்ளை மாளிகையில், முதல் சுதந்திர தினக் கொண்டாட்டம் 1801ஆம் வருடம் இசை, உணவு, குதிரைப் பந்தயத்துடன் நடந்தேறியது.

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஏற்றம் நிச்சயம்!
America's Independence Day

சுதந்திரம் அடைந்தவுடன் உருவாக்கப்பட்ட அமெரிக்க கொடியில், அமெரிக்க நாட்டில் முதலில் சேர்ந்த 13 காலனிகளைக் கௌரவிக்கும் விதமாக 13 பட்டைகளும், 13 நட்சத்திரங்களும் இருந்தன. பின்னர், அமெரிக்க கண்டத்திலிருந்த மற்ற நாடுகளை விலை கொடுத்து வாங்கியும், சில நாடுகளுடன் சண்டையிட்டும், அமெரிக்க அரசு தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போதுள்ள அமெரிக்கன் கொடியில் 50 மாநிலங்கள் இருப்பதை உணர்த்துவதற்கு 50 நட்சத்திரங்களும், முதலில் அமெரிக்காவுடன் இணைந்த 13 காலனிகளை கௌரவிக்கும் விதமாக 13 பட்டைகளும் இடம் பெற்றுள்ளன.

பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி நிரந்தர இடம் பிடித்தது. இருபதாவது நூற்றாண்டின் இடையில் கொடியைக் கையாள்வது, பறக்க விடுவது ஆகியவற்றிற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. 1960ஆம் வருடம் கொடியை அவமதிப்பது குற்றம் என்ற சட்டம் இயற்றப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com