தந்தை பெரியார் காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்த காலம் அது. தீவிர காந்தியவாதியாக திகழ்ந்த பெரியார், தானும் கதர் ஆடை உடுத்தி, தன்னைச் சார்ந்தவர்களும் கதர் ஆடை உடுத்த வேண்டும் என விரும்பினார். அது மட்டுமல்லாது, கதர் துணிகளை தோளில் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று கூவி விற்று அனைவரும் கதர் ஆடை உடுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி வந்தார். ஆண்கள் மட்டுமல்லாது, பெண்களும் கதராடை உடுத்த வேண்டும் என்று கூறி வந்தார். இந்த சமயத்தில் பெரியாருக்கு ஒரு பிரச்னை எழ ஆரம்பித்தது. ஊர் மக்கள் எல்லோரும் பெரியாரின் சொல் கேட்டு கதர் ஆடைகளை உடுத்தத் துவங்கியபோது அவரது மனைவி நாகம்மை மட்டும் கதர் புடைவையை உடுத்த மறுத்து விட்டார்.
தனது மனைவியே கதர் புடைவையை உடுத்த மறுத்ததால் பெரிய தர்மசங்கடத்திற்கு ஆளானார் பெரியார். ‘ஊருக்குத்தான் உபதேசம், பொண்டாட்டிக்கு இல்லை’ என்று எல்லோரும் தன்னை கேலி செய்வார்களே என எண்ணினார். அத்துடன் தனது மனைவியின் மனதையே மாற்ற முடியவில்லை என்றால், மற்றவர்களுக்கு தான் பிரச்சாரம் செய்வதால் என்ன பயன் என நினைத்தார். எப்படியாவது நாகம்மையை கதர் புடைவையை உடுத்த வைத்திட வேண்டுமென எண்ணியவர், அம்மையாரிடம் ‘ஏன் கதர் புடைவையை உடுத்தவில்லை’ என்று கேட்டார்.
‘பிடிக்கலை’ என்றார் நாகம்மை.
‘ஏன் பிடிக்கவில்லை’ என்று அடுத்த கேள்வியை பெரியார் கேட்டார். உடனே நாகம்மை, ‘கதர் புடைவை உடுத்த ரொம்ப கனமாக இருக்கு’ என்று கூறினார். ‘அப்படியா அம்மணி? சரி நீ போய் ஒரு தராசு கொண்டு வா’ என்று தனது மனைவியிடம் கூறி அனுப்பினார் பெரியார்.
சற்று நேரத்தில் நாகம்மை தராசு கொண்டு வந்து பெரியாரிடம் கொடுத்தார். தராசைப் பிடித்த பெரியார் ஒரு தட்டில் கதர் புடைவையை வைத்தார். நாகம்மையின் திருமணம் முகூர்த்தப் பட்டுப்புடைவையை எடுத்து வந்து வைக்கச் சொன்னார். பட்டுப் புடைவை வைத்த தட்டு சட்டென கீழே தாழ்ந்தது. காரணம், கதர் புடைவையை காட்டிலும் பட்டுப் புடவை சற்று கூடுதல் எடையுடன் இருந்தது.
‘அம்மணி, இப்படி பாரமாக இருக்கிற முகூர்த்த பட்டுப்புடைவை மட்டும் கல்யாணத்தின்போதும் மற்ற விசேஷங்களின்போதும் எப்படிக் கட்டினாய்?’ என்று தனது மனைவியை மடக்கினார் பெரியார். கணவர் இப்படித் தன்னை கேட்கவும் சிரித்துக்கொண்டே அன்றைய தினத்திலிருந்து கதர் புடைவையை உடுத்தத் தொடங்கினார். பெரியாரைப் பொறுத்தமட்டில் ஊருக்குத்தான் உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லை என்றில்லாது தனது கொள்கைக்கு தானும் தனது குடும்பத்தாரும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என விரும்பினார் அதுதானே நியாயம்.
தந்தை பெரியாருக்கு ‘வெண்தாடி வேந்தர்’ என்று பட்டப் பெயர் உண்டு. இவரது தாடிக்கு பின்னால் சுவையான காரணம் ஒன்றும் உண்டு. ஒரு சமயம் பெரியாருடைய தோழர்கள் கூடியிருந்த இடத்தில் பெரியார் ஏன் தாடி வளர்க்கிறார் என்பது பற்றி ஒரு விவாதம் நடந்தது.
மாயவரம் நடராஜனிடம், ‘தாடி வைத்திருப்பது முகத்துக்கு அழகாக இருக்கிறது. அதனால் வளர்க்கிறேன்’ என்று சொன்னாராம் பெரியார்.
எஸ்.வி.லிங்கம் என்பவர் கேட்டதற்கு, ‘ரஷ்ய நாட்டு அறிஞர்கள் போல தாடி வளர்க்கிறேன். தாடி அறிவுக்கு அடையாளம்’ என்றாராம்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரிடம் தாடி குறித்து இவர் கூறியபோது, ‘நாள்தோறும் நாலணா சவரக்கூலி மிச்சம்’ என்றாராம்.
பட்டுக்கோட்டை அழகிரிசாமி கேட்டதற்கு, ‘இன்னொருவரிடம் போய் தலையை குனிந்து பேசுவது கூடாது என்பதற்காக தாடி வளர்க்கிறேன்’ என்றாராம்.
இப்படி, தனது தாடி குறித்து பெரியார் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு காரணம் சொன்னாலும், ‘நாள்தோறும் சவரம் செய்ய பத்து நிமிடங்கள் வீதம் மாதம் முன்னூறு நிமிடங்கள் வீணாகிறது. இந்த நேரத்தை நல்ல காரியத்திற்கு செலவிடலாமே என்று நினைத்தேன். தாடி தானாக வளர்கிறது. வளர்ந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட்டேன்’ என்று உண்மையான காரணத்தைச் சொன்னாராம்.
தந்தை பெரியார் தஞ்சாவூரில் ஒரு கூட்டத்தில் பேச மேடையில் அமர்ந்தபோது, ஒரு இளம் பெண், பெரியாரை வணங்கி கை நிறைய பணத்தை எடுத்து நீட்டினாள். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ‘அய்யா, இது என் முதல் மாத சம்பளம். திராவிடர் கழகத்திற்கு நிதியாகத் தருகிறேன்’ என்றாள். பெரியார் அதை வாங்க மறுத்து, ‘முதல் மாத சம்பளத்தை உனது தந்தையிடம் கொடுஅம்மா. அதுதான் சரி’ என்றாராம்.
உடனே அந்தப் பெண், “பெண்களைப் படிக்க அனுப்புங்கள் என்று நீங்கள் செய்த பிரச்சாரத்தைக் கேட்டுத்தான் எனது பெற்றோர் என்னை டாக்டருக்குப் படிக்க வைத்தனர். அதனால் நீங்கள்தான் எனக்குத் தந்தை போன்றவர்” என்றாள் அந்தப் பெண்.