விருந்துக்கு அழைத்த எம்.ஜி.ஆர்.; அதை மறுத்த கர்ம வீரர்! எதற்காக தெரியுமா?

டிசம்பர் 24, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவு தினம்
Kamarajar with MGR
Kamarajar with MGR
Published on

‘மக்கள் திலகம், இதயக்கனி’ என்றெல்லாம் நம் தமிழக மக்களால் போற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 37ம் ஆண்டு நினைவு நாள் இன்று. எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து ஒரு மந்திரச் சொல் என்று கூட சொல்லலாம். அவர் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதேபோல், வாழ்ந்து மறைந்த முன்னள் முதல்வர் கர்மவீரர் காமராஜரும் நம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். காமராஜர் மிகவும் எளிமையானவர் என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். எம்ஜிஆர் அவரை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கவும், காமராஜர் வர இயலாது என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லிவிட்டார் பாருங்கள். தமிழக அரசியலில் இந்த இரு அரசியல் தலைவர்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு யாரும் அரசியல் செய்துவிட முடியாது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று இருக்க முடியும்? எம்ஜிஆர், காமராஜர் இடையே நடந்த ஒரு இனிய சம்பவத்தை இந்தப் பதிவில் காண்போம்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் திராவிட பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதைத்தான் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், எம்ஜிஆர் ஆரம்பத்தில் ஒரு தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். காந்தியையும், கர்ம வீரர் காமராஜரையும் அதிகம் நேசித்தவர் என்பது பலருக்கும் தெரியாது. இவர் ஆரம்பம் தொட்டே கதர் ஆடைகளைத்தான் அணிந்தார். அதன் பின்னர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் நட்பு கிடைத்து திமுகவில் இணைந்தார். ஆனாலும் கடைசி வரை கர்மவீரர் காமராஜர் மீது தீராத பாசம் வைத்திருந்தார் எம்ஜிஆர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் காமராஜரை சந்தித்து மகிழ்ந்தார்.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தின் இதயக்கனி!
Kamarajar with MGR

தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த எம்ஜிஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது. ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து விட வேண்டும். அவருக்கு அருகே அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். ஆனால், எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடியே, “சொல்றேன்” என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.

கடைசியாக ஒரு முறை காமராஜரை தனது வீட்டு விருந்துக்கு அழைத்து விடுவது என்கிற எண்ணத்தில் சிவாஜி, எம்ஜிஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்திருந்தார். அவரை வழியனுப்பும்போது தனது வீட்டு விருந்துக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்ஜிஆர்.

இதையும் படியுங்கள்:
எம்.ஜி.ஆர் நடித்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்!
Kamarajar with MGR

அப்போதும் அதே புன்னகை மாறாமல், “ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக் கூடாது என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள். நான் மக்கள் ஊழியக்காரன். ரெண்டு இட்லி, தயிர் சோறுதான் எனக்கு சரிப்படும். உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திரும்பவும் அந்த ருசியை நாக்கு தேடும். அதுக்கு நான் எங்கே போறது” என்று கூற, ஆடிப்போனார் எம்ஜிஆர். உடனே தன்னையும் அறியாமல் காமராஜரை கைக்கூப்பி வணங்கி விட்டாராம் மக்கள் திலகம் எம்ஜிஆர். அதுமுதல் காமராஜரை தனது வீட்டு விருந்துக்கு அவர் அழைப்பதில்லை!

இப்படியும் ஒரு முதல்வர் நமது தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார். மீண்டும் இப்படி ஒரு மக்கள் முதல்வர் நமக்குக் கிடைப்பாரா? என்பதே தமிழக மக்களின் கனவாய் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com