
நம் இருப்பிடம் தேடி தவறாமல் வரும் தபால்காரர்.நம் அனைவரது அன்பை மட்டும் பெற்றவர் அல்ல, ஒவ்வொருவர் விலாசத்தையும் முழமையாக அறிந்தவரும் கூட. தகவல் தொடர்பில் தொலைபேசி, இ-மெயில் போன்ற பல்வேறு சேவைகள் இருந்தாலும், தபால்காரர் மூலம் கடிதங்களைப் பெறுவது பலராலும் விரும்பப்படுகிறது. அத்தகைய ‘தபால்காரர்’களை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும் அக்டோபர் 9ம் தேதிகொண்டாடப்படும் உலக தபால் தினம்.
உலக தபால் யூனியன் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் பெர்லினில் 1874ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி நிறுவப்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் 1969ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் அக்டோபர் 9ம் தேதி உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உலகில் பல்வேறு நாடுகளிலும் உலக தபால் நிலையங்களில் தபால்தலை கண்காட்சி, ஆய்வுகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
என்னதான் அமெரிக்கா மிகப்பெரிய தபால் அமைப்பை கொண்டிருந்தாலும், 170 ஆண்டுகளாக சேவை ஆற்றி வரும் இந்திய தபால் சேவைதான்.உலகின் நம்பர் ஒன் தபால் சேவை என்கிறார்கள். இந்தியாவில்தான் உலகிலேயே மிக அதிகளவில் தபால் நிலையங்களும் அதில் பணியாற்றி வருகிறவர்களும் உள்ளனர். இந்தியாவில் 1.6 லட்சங்களுக்கும் மேலான தபால் நிலையங்களும் மற்றும் அதன் கிளைகளும் உள்ளன. ஆனால், அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் 80,000 தபால் அலுவலகங்களே உள்ளன.
வளரும் நாடுகளைச் சேர்ந்த 5 சதவீதம் மக்களுக்கு இன்னும் தபால் சேவை சென்று சேரவில்லை. உலகிலேயே ஆப்பிரிக்கா கண்டத்தில்தான் தபால் சேவை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகி வந்தாலும், உலகம் முழுவதும் உள்ள மக்களை தபால் சேவையே ஒன்றிணைப்பதாக உலக தபால் யூனியன் தெரிவிக்கிறது.
உலகில் முதன் முதலாக புறாக்கள் மூலம் தகவல்களை பறிமாறி வந்த மக்கள், பின்னர் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப மனிதர்களையே பயன்படுத்த ஆரம்பித்தனர். அவர்கள் தபால்களை கையில் எடுத்துக் கொண்டு கைகளில் கூரிய ஆயுதத்துடன் பல மைல்கள் ஓடியே உரிய இடத்தில் தபால்களை சேர்ப்பித்து சேவை செய்தனர். இவர்களை ‘ரன்னர்கள்’ என்று அழைத்து வந்தனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விரிவுரையாளரும், பின்னர் இங்கிலாந்து லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஹென்றிபாசப் 1880ல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக பிரிட்டிஷ் அரசில் பதவி ஏற்றார். இவர்தான் 1883ம் ஆண்டு ‘லெட்டர் கேரியர்' என்பதை ‘போஸ்ட் மேன்’ என பெயர் மாற்றம் செய்தார். ஆரம்பத்தில் தபால்களை கொண்டு செல்பவர்களுக்கு ஒரு தொப்பியும், ஒரு பெல்ட்டும் மட்டுமே கொடுக்கப்பட்டன. 1861ம் ஆண்டுதான் தபால் கொண்டு செல்பவர்கள் காக்கி சட்டை அணியும் வழக்கம் ஏற்பட்டது. இதை அமெரிக்க தபால் ஊழியர்கள் ஆரம்பத்தில் எதிர்த்தனர். தங்களை காக்கி உடை அணிவதன் மூலம் அடிமைப்படுத்துவதாக கருதினர்.
1988ம் ஆண்டு காக்கிக்கு பதிலாக பழுப்பு நிற சீருடைகள் தபால்காரர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 1991ம் ஆண்டு மீண்டும் காக்கி சீருடைக்கே திரும்பினர். பின் தபால்காரர்கள் தொப்பி அணியத் தேவையில்லை என அரசு அறிவித்தது. இந்தியாவில் 1854ம் ஆண்டிலிருந்துதான் தபால் துறை வேகமாக வளரத் தொடங்கியது. அதன், 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தபால்காரர்களின் சீருடையின் தரம் உயர்த்தப்பட்டு கருநீலமும், இள நீலமும் கொண்ட சீருடைகள் வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் வெறும் கடிதங்களை மட்டுமே கொண்டு வந்த தபால்காரர் அதன் பின்னர் மணியார்டர் மூலம் பணம், பதிவு தபால் மற்றும் பார்சல் மூலம் பொருட்களைக் கொண்டு வந்து தந்தனர். தற்போது விஞ்ஞான முன்னேற்றம் காரணமாக இ-போஸ்ட், ஸ்பீட் போஸ்ட் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது போஸ்டல் - வங்கி மூலம் வங்கிப் பணிகளையும் செய்து வருகின்றனர்.
அஞ்சல் துறையில் பல வகையான அஞ்சல்களும் குழப்பமின்றி பிரிக்கப்பட்டு, விரைவாக அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் குறியீட்டு எண் திட்டம் முதன் முதலில் 1972ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 6 இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் முதல் இலக்கம் மண்டலத்தையும், இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தையும், மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தையும் குறிக்கிறது. கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் தபால் நிலையத்தை குறிக்கும்.
இந்தியாவில் ஒரே பெயரைக் கொண்ட பல ஊர்கள் உள்ளன. தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் மட்டும் ஒரே பெயரைக் கொண்ட 100க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. ஒரே பெயர் கொண்ட இந்த ஊர்களில் வசிப்பவர்களுக்கு அந்த ஊர்களின் பின்கோடு குறியீடு எண் மூலம் தபால்துறை, தபால்களை உரியவரிடம் கொண்டு சேர்க்கிறது. இதனால், இன்றுவரை இந்தியா 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்களுடன், 100 கோடி மக்களின் தபால் சேவையை சிறப்பாகக் கையாண்டு வருகின்றது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகமாக மொழிகளைக் கொண்ட நாடு இந்தியாதான். எந்த ஒரு மொழியிலும் கடிதங்களில் முகவரியைக் குறிப்பிட்டாலும் பின்கோடு எண்ணை குறிப்பிடும்பட்சத்தில் அது அந்த ஊரைச் சரியாகச் சென்றடையும்.