
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7ம் நாளன்று. ‘உலகப் பருத்தி நாள்' (World Cotton Day) கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் பருத்தி நாளிற்கான முன்முயற்சி 2019ம் ஆண்டு பிறந்தது. பெனின், புர்கினா பாசோ, சாட் மற்றும் மாலி எனும் ஆப்பிரிக்காவிலுள்ள துணை சஹாரா பகுதியைச் சேர்ந்த நான்கு பருத்தி உற்பத்தியாளர்கள் அக்டோபர் 7ம் நாளை, உலகப் பருத்தி நாளாகக் கொண்டாட வேண்டும் என்கிற வேண்டுகோளை உலக வணிக அமைப்புக்கு முன்மொழிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பொது அவை 2021ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7ம் நாளை, ‘உலகப் பருத்தி நாள்’ என்று கொண்டாடலாம் என்று அறிவித்தது.
பொதுவாக, இந்த உலகளாவிய கொண்டாட்டத்தின் நோக்கம், பருத்தித் துறையின் தெரிவு நிலையை அதிகரிப்பதும், பொருளாதார மேம்பாடு, பன்னாட்டு வணிகம் மற்றும் வறுமை ஒழிப்பில் அது வகிக்கும் முக்கியப் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
பருத்தி என்பது ஆடைகள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களில் தினமும் பயன்படுத்தப்படும் இயற்கை இழைகளில் மிக முக்கியமானது. பருத்தி என்பது மில்லியன் கணக்கான சிறு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்தை வழங்குவதன் மூலம் வாழ்வாதாரத்திற்கான ஒரு முக்கியமான வழிமுறையாக இருக்கிறது. இது உலகின் சில ஏழ்மையான நாடுகளுக்கு ஏற்றுமதி வருவாயின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. சிறந்த உற்பத்தி, சிறந்த ஊட்டச்சத்து, சிறந்த சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த வாழ்க்கைக்கான நிலையான பருத்தித் துறைக்கான உறுதிப்பாட்டைப் புதுப்பிக்க, உலக பருத்தி நாள் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
பருத்தி ஒரு நல்ல பணப்பயிர். பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும்போது ஏறத்தாழ 10 சதவிகிதம் மட்டுமே வீணாகிறது. இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம், மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பலபடி (பாலிமர்) ஆகும். இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும், நிலைப்புத் தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன. ஒவ்வொரு இழையும் 20 முதல் 30 செல்லுலோசுப் பலபடிகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன. பருத்திக்காய் வெடிக்கும்போது அல்லது உடைக்கப்படும்போது, எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும்.
ஒவ்வோர் ஆண்டும் உலகளாவிய நிலையில் ஏறத்தாழ, 25 மில்லியன் டன் அல்லது 110 மில்லியன் பருத்திச் சிப்பங்கள் 2.5 சதவிகிதம் உலகின் வறட்சி நிலங்களில் விளைகின்றன. உலகின் பேரளவு பருத்தி விலைச்சல் சீனாவில் உள்ளது என்றாலும், இந்தப் பருத்தி முழுவதும் அந்நாட்டிலேயே பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. பல்லாண்டுகளக ஐக்கிய அமெரிக்காவே பேரளவு பருத்தியைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் பருத்தி சிப்பங்களில் அளக்கப்படுகிறது. ஒரு சிப்பம் 0.48 பருமீ பருமனும், 226.8 கி.கி. எடையும் கொண்டதாகும்.
இனி, பருத்தி குறித்த சில முக்கியமான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
* பருத்தி உற்பத்தியில், சீனா, இந்தியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. இந்நாடுகளிலான பருத்தி உற்பத்தி, உலகளாவிய உற்பத்தியில் 75 சதவிகிதம் என்பது கவனிக்கத்தக்கது.
* உலகளவில் பருத்தியை சுமார் 24 மில்லியன் விவசாயிகள் பயிரிடுகின்றனர். மேலும், உலகளவில் பருத்தியானது 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.
* உலகில் பாலியெஸ்டருக்கு அடுத்து, பருத்தி அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது இழையாக இருக்கிறது. உலகின் இழை தேவையில், பருத்தி இழை 20 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது.
* 80 சதவீத பருத்தி ஆடைத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது, மீதமுள்ளவை வீட்டு ஜவுளி மற்றும் தொழில்துறைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.
* உலகின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில், ஒரு டன் பருத்தி சராசரியாக 5 பேருக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பை வழங்குகிறது.
* பருத்தி அடிப்படையிலான இழைகள் 3D அச்சுப்பொறிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றன. பருத்தி இழைகள் வெப்பத்தை நன்றாகக் கடத்துகின்றன; ஈரமாக இருக்கும்போது வலிமையடைகின்றன.
* ஜவுளி மற்றும் ஆடைகளில் பயன்படுத்தப்படும் நார்ச்சத்துடன் கூடுதலாக, சமையல் எண்ணெய் மற்றும் விதைகளிலிருந்து விலங்கு தீவனம் போன்ற உணவுப்பொருட்களையும் பருத்தியிலிருந்து பெற முடியும்.
* உலகின் பருத்தி உற்பத்தி, 2024ம் ஆண்டில் 26 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டது. 9 மில்லியன் டன்களுக்கு அதிகமாக வணிகம் செய்யப்பட்டது.
* உலகளாவிய பருத்தி உற்பத்தியின் மதிப்பு 75 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், உலக அளவிலான பருத்தியின் வணிகம் 20 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.
* உலகில் 2024ம் ஆண்டில் பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகியவை உலகின் மிகப்பெரிய பருத்தி ஏற்றுமதியாளர்களாக இருந்தன. அதேவேளையில், வங்காளதேசம் மற்றும் வியட்நாம் ஆகியவை மிகப்பெரிய இறக்குமதியாளர்களாக இருந்தன்.
* உலகளாவிய இழை நுகர்வில் பருத்தியின் பங்கு 1960ம் ஆண்டில் 60 சதவீதத்திலிருந்தது. 2024ம் ஆண்டில் 22 சதவீதமாகக் குறைந்துள்ளது. இடைப்பட்டக் காலத்தில் செயற்கை இழைகள் கணிசமான வளர்ச்சியைக் கண்டன.
* பருத்தியில் ஆசியா முக்கியப் பதப்படுத்தும் மையமாக இருப்பதால், அதிகரித்து வரும் ஜவுளி தேவையான அடுத்த பத்தாண்டுகளில் உலகளாவிய பருத்தி பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.