சமசீர் உணவுகளின் பாஸ் - பால்! ஜூன் 1 - உலகப் பால் நாள்!

World Milk Day
World Milk Day

பால் நுகர்வு மற்றும் அதன் நன்மைகளை ஊக்குவிக்க விரும்பிய பன்னாட்டுப் பால் பண்ணைக் கூட்டமைப்பு (The International Dairy Federation - IDF), 1971 ஆம் ஆண்டில் ’உலகப் பால் திருவிழா’ ஒன்றை நடத்தியது. இந்தப் பால் திருவிழாவின் தொடக்க நிகழ்வுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளில் அதிகக் கவனம் செலுத்திய போதிலும், அந்நிகழ்வு உலகம் முழுவதும் பாலினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்தது.

அதன் பின்னர், 1984 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (United Nations Food and Agriculture Organization - FAO), உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தது. 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு, பல்வேறு நாடுகளும், அமைப்புகளும், மே, ஜீன் மாதங்களில் ஏதாவதொரு நாளை தேசிய மற்றும் மாநில அளவிலான பால் நாளாகக் கொண்டாடத் தொடங்கின. இச்செயல்பாடுகள் குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருந்தன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2001 ஆம் ஆண்டில், உலகளவில் முக்கிய உணவு ஆதாரமாக இருக்கும் பாலின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் தெரிவிக்கும் வழியிலும், உலகளாவிய ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பில் பாலின் பங்களிப்புகளை ஊக்குவிக்கும் வழியிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் நாளை, உலகப் பால் நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அறிவித்தது. அதனை ஏற்றுக் கொண்ட நாடுகள் அனைத்தும் ஜூன் 1 ஆம் நாளினை உலகப் பால் நாளாகக் கொண்டாடி வருகின்றன.

ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உலகப் பால் நாள் கொண்டாட்ட அறிவிப்பு, உலகம் முழுவதும் பாலின் ஊட்டச்சத்து மதிப்பு, ஆரோக்கியமான உணவு முறைகளில் அதன் பங்களிப்பு போன்றவைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், பால் மற்றும் பால் தொடர்பான தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகவும் அமைந்தது.

உலகப் பால் நாள் தொடர்பான நிகழ்வுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்துரு வழங்கப்பட்டது. இக்கருத்துருக்கள், சமகாலச் சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் பாலின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துரைப்பதாகவும் அமைந்தன.

இதையும் படியுங்கள்:
உலகில் நாம் எட்டும் உயரம் நம் உடலின் உயரத்தை பொறுத்தது அல்ல!
World Milk Day

குறிப்பாக,

  • உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கும், மனித உடல்நலத்திற்கும் பாலின் முக்கியத்துவத்தைப் பெருக்குதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

  • பாலின் பண்பாட்டு முக்கியத்துவத்தையும், பல்வேறு சமூகங்களில் பாலின் பங்களிப்பை ஊக்குவித்தல்

  • நிலையான பால் மற்றும் பால் பொருட்களின் நுகர்வை அதிகரித்தல், பாலுக்கான தேவையை அனைவருக்கும் உணர்த்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அரசுகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பங்கைப் பாராட்டுதல்

  • பால் தொடர்பான தொழிற்துறையினர், உடல்நலத் துறையினர், பால் தொடர்பான கொள்கை வகுப்பாளர்கள், நுகர்வோர்கள் ஆகியோரை ஒன்றிணைத்துச் செயல்படுதல் போன்றவை செயல்படுத்தப்பட்டன.

உலகப் பால் தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள், உலகை வளர்க்கும் வகையில் தரமான ஊட்டச்சத்தை வழங்குவதில் பால் வளம் வகிக்கும் முக்கிய பங்கைக் கொண்டாடுவதில் கவனம் செலுத்துகிறது. பால் என்பது அனைவராலும் அணுகக்கூடிய, மலிவு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும், மேலும் உலகம் முழுவதும் உள்ள சமச்சீர் உணவுகளின் இன்றியமையாத பகுதியாகும் என்பதை உணர்த்துவதாகவும் இருக்கும்.

உலகப் பால் தினத்தின் உணர்வைப் போற்றுவோம், பால் மற்றும் பால் சேர்ந்த பொருட்களைக் கொண்டாடுவோம், மேலும், இந்த முக்கிய ஊட்டச்சத்துக்கான, நிலையான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உறுதி செய்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com