

உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் உயிர் கொல்லி நோய்களில் ஒன்று எய்ட்ஸ். ‘அக்கொயர்டு இம்யுன் டிஃபிசியன்சி சின்ட்ரோம்’ என்பதுதான் எய்ட்ஸ் (AIDS) நோயின் முழுப்பெயர். அதன் சுருக்கம்தான் எய்ட்ஸ். நோய் எதிர்ப்புத் தன்மையின் குறைவின் காரணமாக ஏற்படும் நோய்.
முதல் முறையாக எய்ட்ஸ் நோயின் தாக்கம் அறியப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்தான். அங்குதான் சில இளைஞர்களுக்கு திடீரென்று நிமோனியா காய்ச்சல் வந்தது. அதில் அவதிப்பட்டவர்கள் கோசி புற்றுநோய்க்கும் ஆளானார்கள். எப்படி வந்தது இந்த நோய் என்பதை 1981ம் ஆண்டு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் அமைப்பு ஆராய்ந்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதுதான் இந்நோய்க்குக் காரணம். அது ஒரு வைரஸ் கிருமியால் வருகிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள்.
4H நோய் என்ற பெயரில்தான் எய்ட்ஸ் நோய் முதலில் அழைக்கப்பட்டது. ஹைதி எனும் நாட்டின் மக்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள், ஹெராயின் போதைப் பொருள் பழக்கம் உள்ளவர்கள் மற்றும் பாலியல் தொடர்பு, உறையாத ரத்த நோய்க்கு உள்ளானவர்கள் ஆகியோருக்கு வரக்கூடிய நோய் என்ற கருத்து இருந்ததால் அந்த பெயர் வந்தது.
எய்ட்ஸ் நோய் வந்தது 1981ம் ஆண்டில். ஆனால், அதற்கான கிருமி HIV (ஹியூமன் இம்யுனோ டிஃபிசியன்சி வைரஸ்) கண்டுபிடிக்கப்பட்டது 1983ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி. அமெரிக்காவின் ராபர்ட் கிலோ மற்றும் லுக்மாண்டக்னர் எனும் இரு மருத்துவ விஞ்ஞானிகள் முயற்சியால் அது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரு விஞ்ஞானிகள் தலைமையில் இரு வேறு குழுக்கள் தாங்கள் எய்ட்ஸ் கிருமியை தனிமைப்படுத்தி பிரித்து விட்டதாக கூறின. LAV மற்றும் HTLV-111 என்று அந்த கிருமிகளுக்கு பெயர் வைத்தனர். பின்னர் 1986ம் ஆண்டு அவை இரண்டும் ஒன்றே என்று அறிய வந்ததால் அதற்கு ‘HIV’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட டிசம்பர் 1ம் தேதியையே உலக எய்ட்ஸ் தினம் என்று ஐ.நா. அறிவித்தது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி. நோயுடன் வாழும் மக்களுக்கும், எய்ட்ஸ் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கும் ஆதரவைக் கட்டுவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக எய்ட்ஸ் தினம் முதன் முதலில் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பு மாநாட்டில் தாமஸ் நெட்டர் மற்றும் ஜேம்ஸ் பான் ஆகியோரால் எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படும் யோசனை முன் வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா. சபை 1988ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதியையே உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
தற்போது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நோயுடன் வாழ்பவர்களுக்கும் சிவப்பு ரிப்பன் ஒரு அடையாளமாகும். எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நியூயார்க்கை தளமாகக் கொண்ட விஷுவல் எய்ட்ஸ் கலைஞர்கள் குழுவால் 1991ம் ஆண்டு இந்த சிவப்பு ரிப்பன் வடிவமைக்கப்பட்டது. இது வர்த்தக முத்திரையிடப்படவில்லை. இது நோய் மற்றும் அது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தை அங்கீகரிக்க விரும்பும் எவரும் இந்த வடிவமைப்பைப் பயன்படுத்த அனுமதித்தது.
ஜெர்மி அயர்ன்ஸ் (Jeremy Irons) ஒரு புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகர். அவர் 'Reversal of Fortune' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றவர். மேலும், நாடக மற்றும் தொலைக்காட்சித் துறைகளிலும் தனது நடிப்புக்கு பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர்.1991ம் ஆண்டு டோனி விருது (நாடக விருது) வழங்கும் விழாவில் நடிகர் ஜெர்மி ஐரன்ஸ் முதல் சிவப்பு ரிப்பனை அணிந்தார்.
இந்த எளிய செயல் இந்த சின்னத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்டு வந்தது. அங்கிருந்து, ஆஸ்கார் போன்ற பொது நிகழ்வுகளில் பல உயர் நபர்கள் ரிப்பனை அணிந்தனர். எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் உலக எய்ட்ஸ் தினத்திற்கான சர்வதேச சின்னமாக சிவப்பு ரிப்பன் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறிது நேரத்திலேயே இது நிகழ்ந்தது. 1992ம் ஆண்டில், பிரபல பிரிட்டிஷ் ராக் இசை பாடகர் ஃப்ரெடி மெர்குரி எய்ட்ஸ் நோய் காரணமாக இறந்தார். அவரின் அஞ்சலி நிகழ்வில் பார்வையாளர்களுக்கு 100,000 சிவப்பு ரிப்பன்கள் விநியோகிக்கப்பட்டன. இன்று, சிவப்பு ரிப்பன் என்பது எய்ட்ஸ் நோய்க்கான ஆதரவு மற்றும் விழிப்புணர்வின் உலகளாவிய அடையாளமாகும்.