நேர்மையும் தூய்மையும் கொண்ட ஓமந்தூரார் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் நாட்டில் தனிப்பட்ட பலன்கள்பலவற்றைப் பெற முடிந்தது என்றால் அது மிகையாகாது.1947 மார்ச் 28 முதல் 1949 ஏப்ரல் வரை தமிழக அரசின் முதலமைச்சராக, சுதந்திர இந்தியாவின் முதல் தமிழக முதல்வராக வலம் வந்தவர். ஓமந்தூரார் எனும் அடையாள பெயரில் வலம் வந்த ஓ.பி.ராமசாமி. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து வரலாற்றுப் புகழ்மிக்க உரையை நிகழ்த்தினார். அதே நாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்-அமைச்சராக விளங்கியவர் ஓமந்தூரார்.
பூரண மதுவிலக்கு, தேவதாசி முறை ஒழிப்பு, மகாகவி பாரதியார் பாடல்கள் நாட்டுடைமை, தமிழ் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகள் வெளியீடு, பட்டியலின மக்கள் ஆலய நுழைவு உள்ளிட்டவை இவரது ஆட்சியின் சாதனைகள். மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தமாக விமானம் வாங்கிக்கொள்ளும் திட்டத்திற்கு முதல் முதலாக பிள்ளையார்சுழி போட்டவர் ஓமந்தூரார்.
தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் கோபுரச் சின்னம் இடம் பெற்றதற்குக் காரணம் ஓமந்தூரார்தான். ஜமீன்தாரி முறை ஒழிப்பு, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, கல்வி முறையில் சீர்திருத்தம், தமிழ்மொழிக்கு முக்கியத்துவம், கோயில் சொத்துகள் மீட்பு, உழவர் நலன் சட்டங்கள், ஓலைச்சுவடிகள் மீட்பு, புதுச்சேரி விடுதலை, கிராம வளர்ச்சி என இவரது சாதனைப் பட்டியல் மிகவும் நீண்டது.
ஓமந்தூரார் எனப்படும் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் முத்துராம ரெட்டி - அரங்கநாயகி அம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக 1.2.1895 அன்று பிறந்தார். ஓமந்தூராரின் குடும்பத்திற்கு ஊரில் மணியக்காரக் குடும்பம் எனப் பெயர். அவர் தனது தொடக்கக் கல்வியை ஓமந்தூரிலும் மேல்படிப்பை திண்டிவனத்திலும் பயின்றார். சில காலம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து பள்ளியிலும் படித்தார். காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும், சென்னை எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி நிறுவனர் பஷீர் அகமது சயீத்தும் இவரது பள்ளித்தோழர்கள்.
டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையில் கடலூரில் நடைபெற்ற பிரம்ம ஞான சபை மாநாடு (1921) தேசப் பிதா மகாத்மா காந்தியுடன் இணைந்து சுற்றுப்பயணம் என பம்பரமாக சுழன்ற ஓமந்தூரார் 1929ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்திஜி கூட்டிய காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் பங்கேற்றார். உப்பு சத்தியாகிரகம் (1930), சட்ட மறுப்பு இயக்கம் (1932), தனிநபர் சத்தியாகிரகம் (1940) வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) ஆகிய நான்கு பெரிய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.
தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் (பிரீமியர்) பதவியை முதலில் ஏற்க மறுத்தவர், தனது ஆன்மிக குரு ரமண மகரிஷி கேட்டுக்கொண்டதன் பேரில் முதலமைச்சர் பதவியை ஏற்க சம்மதித்தார். மார்ச் 23 1947ல் முதலமைச்சராக (பிரீமியர்) பதவியேற்ற ஓமந்தூரார் நாடு விடுதலையடைந்தபோது முதல் முதலமைச்சர் என்ற முத்திரையைப் பதித்தார். ‘என் பெயரைப் பயன்படுத்தி என் உறவினர்களோ, என் ஜாதியைச் சேர்ந்தவர்களோ, என் கட்சிக்காரர்களோ எந்த ஒரு சிறு உதவி கோரினாலும் அதிகாரிகள் எவரும் செய்து தரக் கூடாது. அப்படிச் செய்து கொடுத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உத்தவிட்டார்.
விளம்பர உத்தியை விரும்பாத ஓமந்தூரார் பாராட்டு விழாக்களுக்குத் தடை போட்டார். தம்மை யார் சந்திக்க வந்தாலும் பெயர், முகவரி, நேரம், சந்திப்புக்கான நோக்கம் என அச்சிடப்பட்டுள்ள அனுமதி சீட்டைக் கொடுக்க உத்தரவிட்டிருந்தார். சந்திப்புக்கான நோக்கம் தனக்கு திருப்தி அளிக்காவிட்டால் அது எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களை சந்திக்க ஓமந்தூரார் திட்டவட்டமாக மறுத்துவிடுவார். தான் எடுத்த முடிவில் ஒருபோதும் பின்வாங்காதவர் ஓமந்தூரார்.
ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய முக்கியக் காரணமாக விளங்கியவர் ஓமந்தூரார். பிரதமராக நேரு இருந்தபோது அவர் அனுமதி கொடுக்க மறுத்தும் கோவை மாவட்டத்தை தொழில் நுட்ப நகரமாக ஆக்கி சாதனை படைத்தவர் ஓமந்தூரார். அமைச்சர்களோ, சட்டப்பேரவை உறுப்பினர்களோ கூட உரிய காரணமின்றி ஓமந்தூராரை சந்திக்க முடியாது. சட்டப்பேரவை அதிக நாட்கள் கூடுவது தேவையில்லை என நினைத்தவர் ஓமந்தூரார். இவரது இரண்டாண்டு ஆட்சிக் காலத்தில் மொத்தம் 151 நாட்கள் மட்டுமே பேரவை கூட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6, 1949ல் பதவி விலகினார் ஓமந்தூரார். அதே நாள் மாலை முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லமான கூவம் மாளிகையை காலி செய்து விட்டு ஓமந்தூருக்கு புறப்பட்டார் ஓமந்தூரார். நான்கு மாநிலம் கொண்ட சென்னை ராஜதானியில் 13 அமைச்சர்களை மட்டுமே கொண்டு காந்திய நெறி நின்று ஆட்சி செய்த ஒரு விவசாயி உலக வரலாற்றில் ஓமந்தூரார் மட்டுமே. மேலும், வாரத்தில் 5 நாட்கள் கோட்டையில் மக்கள் பணியையும் ; இரண்டு நாட்கள் சொந்த ஊருக்குச் சென்று விவசாயப் பணியையும் மேற்கொண்டார். வயலில் தானே நேரடியாக இறங்கி வேலை செய்தார். மண்வெட்டியும், ஏர் கலப்பையும் அவரது உற்ற தோழர்களாவர். வார இறுதி நாட்களில் ரயில் மூலம் சொந்த ஊருக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதிலும் தனது சொந்த பணத்தில் பயணச்சீட்டு வாங்கி பயணிப்பார்.
ரமண மகரிஷி மறைவுக்குப்பின் ரமணாஸ்ரமம் செல்வதை நிறுத்திய ஓமந்தூராரின் ஆன்மிகப் பயணம், ராமலிங்க வள்ளலாரின் வடலூர் நோக்கித் திரும்பியது. தமது கடைசி காலத்தை வடலூரையே தமது நிரந்தர இடமாக்கிக் கொண்டார். 1964ல் சட்டமேலவைத்தலைவர் பதவி ஓமந்தூராரை தேடி வந்தது. இந்தப் பதவியையும் ஓமந்தூரார் ஏற்க மறுத்துவிட்டார். 1965ல் சர்தார் வல்லபாய் படேல் ஓமந்தூராருக்கு ஆளுநர் பதவி வழங்க விரும்பினார். இந்தப் பதவியையும் ஓமந்தூரார் ஏற்கவில்லை.
உடல் நலம் குன்றியிருந்த காலத்தில், அவரது உடல் நலனை கவனிக்கும் பொருட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுமாறு ஓமந்தூராரிடம் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் வைத்தார். ஆனால், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மாட்டேன் என அவர் தீர்க்கமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், 1970ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் இவ்வுலகிலிருந்து அவர் விடைபெற்றார்.