பேசும்போது வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டியதன் முக்கியத்துவம்!

அக்டோபர் 16, உலக உச்சரிப்பு தினம்
Word Pronunciation
Word Pronunciation
Published on

ந்த ஒரு மொழியாக இருந்தாலும் சரி, அதற்கு உயிர் கொடுப்பது பேசும்போது அதனை உச்சரிக்கும் முறைதான். உச்சரிப்பு சரியாக இருந்தால்தான் எந்த மொழியாக இருந்தாலும் அதன் இனிமை, சுவை மற்றும் அதன் ஆழம் வெளியே தெரியும். ஒரு வார்த்தையின் அர்த்தமே, அனர்த்தமாவது அதன் உச்சரிப்பு மாறும் போதுதான். உச்சரிப்பின் அவசியத்தை உணர்த்தவே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் மூன்றாம் வார புதன்கிழமையை உலக உச்சரிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகின் முதல் உச்சரிப்பு தினம் 2018ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் முன் கொண்டாடப்பட்டது.

உரையாடலின்போது ஒருவர் பேசும் வார்த்தைகளின் உச்சரிப்பு தவறாக இருந்தால் அவர் பேசுவதை 61 சதவீதம் பேர் ஒருவித எரிச்சலுடன் கேட்பதாக ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொடுங்கள். அதுவே அவர்களின் மூளையின் வளமைக்கு உதவும். பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு குழந்தைகள் நன்றாகப் பேசுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் சிரமம் ஏற்பட்டால் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு அவர்கள் சரியானபடி பேச உதவ வேண்டும்.

குழந்தைகள் இரண்டு வயதைக்கடந்த பிறகு உதடுகள் உச்சரிப்பு முதல் உண்ணும் முறை வரை ஒவ்வொரு விஷயங்களையும் அவர்களின் பெற்றோர்களை பார்த்தே கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். பெற்றோரின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள். உங்கள் உதட்டு உச்சரிப்பை குழந்தையை கவனிக்க வைத்து பேச வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

இரண்டு வயது குழந்தை சுமார் 50 வார்த்தைகளைப் பேசுவதற்கு முயற்சிக்கலாம். அதுவே மூன்று வயதில் உச்சரிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். வாக்கியங்களையும் சரளமாக உச்சரிக்கத் தொடங்கி விடுவார்கள். இதில் கால தாமதமாகும் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 வயதைக் கடந்த குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ அவர்களுக்கு மொழி பயிற்சியும், சில நேரங்களில் மருத்துவ சிகிச்சையும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
மழைக்கால சிரமங்களைத் தவிர்க்க சுலபமான 10 வழிகள்!
Word Pronunciation

குழந்தைகள் ஏதாவது வார்த்தைகளை பேசுவதற்கு சிரமப்பட்டால் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உச்சரிக்கப் பழக்க வேண்டும். பொம்மைகள், விளையாட்டு பொருட்களைக் காண்பித்தும் பேச்சாற்றலை மேம்படுத்தலாம். நரம்பியல் குறைபாடுகள் மூளையில் ஏற்படும் சில சிறு கோளாறுகள் குழந்தைகளின் பேச்சில் சிக்கலுக்கு வழிவகுக்கும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் வார்த்தைகளை உச்சரிப்பதில் சிரமப்படுவார்கள். செவித்திறன் குறைபாடும் உச்சரிப்பதில் தடுமாற்றங்களை ஏற்படுத்தும். இதற்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை மூலம் அதை சரி செய்யலாம்.

வீட்டில் பெரியவர்களின் உரையாடல்களை உங்கள் குழந்தைகள் கேட்க அனுமதியுங்கள். அதனால் அந்தக் குழந்தைகளின் மொழி அறிவு, உச்சரிப்பு ஆற்றல் மற்றும் மூளையின் ஆற்றலையும் அதிகரிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து யார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். புத்தகங்களை சப்தமிட்டு படிக்க அவர்களின் வார்த்தை உச்சரிப்பு ஆற்றல் அதிகரிக்கும் என்கிறார்கள்.

குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போதே எழுத்துக்களை உச்சரிக்கும்பொழுது சரியாக உச்சரிக்கப் பழக்க வேண்டும். சரியான உச்சரிப்பை கற்றுக்கொள்ளவில்லை என்றால், வாய்விட்டு சப்தமாக படிக்கச் சொல்ல வேண்டும். உச்சரிப்பை மேம்படுத்த குழந்தைகளுக்கு சில பயிற்சிகளை சொல் விளையாட்டு மூலம் புரிய வைக்கலாம். தமிழ் மொழி என்றால் சொல் வாடை மற்றும் பழமொழிகள் மூலமாகவும், ஆங்கில மொழி என்றால் ‘டங்ட்விஸ்ட்’களை சொல்ல வைத்தாலே உச்சரிப்பு தெளிவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com