
இந்திய விமானப்படை1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பிரிட்டிஷ் விமானப்படையின் துணைப் படையாக துவக்கப்பட்டது. அதனை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய ராணுவப் படையில் கடைசியில் சேர்க்கப்பட்டது விமானப்படைதான். தற்போது உலகின் 4வது மிகப்பெரிய விமானப்படை இந்தியன் ஏர்போர்ஸ்தான். ஆரம்பத்தில். ‘ராயல் ஏர் ஃபோர்ஸ்’ என்று தொடங்கப்பட்டது. பின்னர், ‘ராயல் இந்தியன் ஏர்போர்ஸ்’ ஆகியது. தற்போது, ‘இந்தியன் ஏர்போர்ஸ்’ என்ற பெயரில் இயங்குகிறது. தற்போது இந்திய விமானப்படையில் 1,35,000க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன.
ஆரம்ப காலத்தில் சிங்கிள் இன்ஜின் செம்பஸ்ட்ஸ் மற்றும் ஸிவிட்பயர்ஸ் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர்தான் சூப்பர் சானிக் மிக் விமானங்கள், சுக்கோய் விமானங்கள் சேர்ந்தது. போர் விமானங்கள், பாம் போடும் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், உதவி செய்யும் ஹெலிகாப்டர் என பல்வேறு விமானங்கள் கொண்டதுதான் விமானப்படை. போர் விமானங்களில் எஸ்.யூ7, அஜித், மிக் 21, மிக் 23, மிக் 25, மிக் 27, ஜாகுவார், ஹெச்.எப் - 24, மிக் 29, எம்.ஐ. 35 சேர்ந்தது. தற்போது இந்திய விமானப்படையில், சுகோய் Su – 30 MKI, டசால்ட் ரஃபேல், மிக்-29, மிராஜ் 2000 மற்றும் தேஜாஸ் உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்குகிறது.
உலகிலேயே மிகச்சிறிய போர் விமானம் மிக் 21 போர் விமானம்தான். இது 1963ம் ஆண்டு அறிமுகமானது. இந்த விமானம் அமெரிக்காவின் எப்-16 மற்றும் பிரெஞ்சு நாட்டின் மிராஜ் 2000 விமானத்திற்கு போட்டியானது. 62 ஆண்டுகளின் சேவைக்குப் பிறகு அண்மையில் விடைபெற்றது. MiG-21 விமானங்கள், இதுவரை 1,200க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கியுள்ளது. 1965 மற்றும் 1971ல் நடந்த இந்திய - பாகிஸ்தான் போர்களிலும், 1999 கார்கில் போரிலும் MiG-21 முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. குறிப்பாக, 2019ல் பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
1948ம் ஆண்டு ஆசியாவிலேயே முதல் முறையாக ஜெட் விமானங்களை விமானப் படையில் சேர்த்தது இந்திய விமானப்படைதான். 1954ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி இந்திய விமானப்படையின் முதல் ஏர் மார்ஷெலாக சேர்க்கப்பட்டார் சப்ரோட்டோ முகர்ஜி. இந்திய விமானப்படையின் முதல் பெண் ஏர் மார்ஷல் பத்மாவதி பந்தோபாத்யாய் ஆவார். விமான மருத்துவத்தில் நிபுணரான முதல் பெண் அதிகாரியும் இவரே.
விமானி நிர்மல்ஜித் சிங் செக்கான். இவர்தான் பரம்வீர் சக்ரா விருது பெற்ற முதல் விமானப் படை அதிகாரி. 1971 இந்திய - பாகிஸ்தான் போரில் சிறந்த சேவை புரிந்ததற்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த ராகேஷ் சர்மா 1984ம் ஆண்டு சோயல்10 விண்கலத்தில் ரஷ்ய வீரர்களுடன் விண்வெளி சென்ற முதல் இந்தியர்.
1992ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பெண்களையும் சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன் விளைவாக, 1994ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி 7 பெண் விமானிகள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டனர். 1995ம் ஆண்டு செரியல் தத்தா மற்றும் சிம்ரன் சோதி என்ற பெண் விமானிகள் இந்திய விமானப்படையின் சேத்தக் ஹெலிகாப்டரை இயக்கி சாதனை புரிந்தனர்.
ஸ்வார்டன் லீடர் சஞ்சய் முதல் முறையாக இந்திய தேசியக்கொடியை வட துருவப் பகுதியில் பறக்க விட்டு சாதனை புரிந்தார். இதற்காக அவர் 10,000 அடி உயரத்தில் இருந்து மைனஸ் 68 டிகிரி குளிரில் குதித்து இந்த சாதனையை புரிந்தார். 1998ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி பெக்ரானில் இந்தியா முதல் முறையாக அணுகுண்டை வெடித்து சாதனை புரிந்தது. இந்த சாதனையை செய்தது இந்திய விமானப்படைதான். உத்தரகண்ட் வெள்ளத்தின்போது, இந்திய விமானப்படை தனது 'ராஹத்' நடவடிக்கை மூலம் கிட்டத்தட்ட 20,000 பொதுமக்களை விமானம் மூலம் மீட்டு உலக சாதனை படைத்தது.
2002ம் ஆண்டு ரஷ்யா தயாரிப்பான எஸ்.யூ 30, எம்.கே.ஐ. சுக்கோய் சேர்க்கப்பட்டது. உலகிலேயே மல்டி ரோல் எஸ்.யூ 30 விமானம் சேர்க்கப்பட்டது இந்திய விமானப்படையில்தான். இந்திய விமானப்படை ஆசியாவின் மிகப்பெரிய விமானப்படை தளத்தைக் கொண்டுள்ளது. இது ஹிண்டன் விமானப்படை நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது காசியாபாத்தில் அமைந்துள்ளது.
இந்திய விமானப்படையின் மிக உயரமான விமானப்படை நிலையம் 22,000 அடி (6,706 மீட்டர்) உயரத்தில், சியாச்சின் பனிப்பாறை AFS ஆகும். இந்திய விமானப்படை, அது நாட்டிற்கு வெளியே ஒரு இராணுவத் தளத்தைக் கொண்டுள்ளது. ஃபர்கோர் விமானப்படைத் தளம் தஜிகிஸ்தானுக்கு அருகிலுள்ள ஃபர்கோரில் உள்ளது; இது நாட்டிற்கு வெளியே இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இராணுவத் தளமாகும். ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷாவின் மறைவுக்குப் பிறகு, இந்திய விமானப்படையின் மார்ஷல் அர்ஜன்சிங் மட்டுமே 5 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற ஒரே உயிருள்ள இந்திய ராணுவ அதிகாரி ஆவார்.
இந்திய விமானப்படையின் குறிக்கோள், ‘மகிமையால் வானத்தைத் தொடுதல்’ என்பதுதான். மேலும், அது அதே குறிக்கோளில் செயல்படுகிறது. இந்திய விமானப்படை எதிர்கால போர் உத்திகளில் முன்னிலை பெறும் வகையில், 2040ம் ஆண்டுக்குள் 20 ஸ்குவாட்ரன்கள் ஆளில்லாத ரகசிய போர் விமானங்களை (UAVs) உருவாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.