
கடல் ஆமைகள் உலகம் முழுவதும் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலக் கடல்களில் வசிக்கும் உயிரினமாகும். முன்பு மில்லியன் கணக்கான கடல் ஆமைகள் பூமியின் பெருங்கடல்களில் சுற்றித்திரிந்தன. ஆனால். இப்போது அவை வெகுவாகக் குறைந்து விட்டன. கடல் ஆமைகளை பாதுகாப்பது சுற்றுச்சூழல் சமநிலை, பொருளாதார நன்மைகள் மற்றும் கலாசார முக்கியத்துவம் என பல காரணங்களுக்காக மிகவும் முக்கியமானது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம்: கடல் ஆமைகளின் இருப்பு சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்திற்கும் நிலைத்தன்மைக்கும் மிகவும் இன்றியமையாதது. அவை இல்லையெனில் இயற்கை ஒழுங்கு சீர்குலைந்து, மற்ற உயிரினங்களையும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதிக்கும். பச்சைக் கடல் ஆமைகள் முதன்மையாக தாவர உண்ணிகள். இவை கடலில் உள்ள புல் படுக்கைகளை மேய்கின்றன. இதனால் அவை ஏராளமாக வளர்வது தடுக்கப்படுகிறது. ஆரோக்கியமான கடல் புல் படுக்கைகள் பல வணிக ரீதியான மதிப்புமிக்க மீன் இனங்களுக்கு நாற்றங்கால்களாக செயல்படுகின்றன. வண்டல்களை உறுதிப்படுத்துகின்றன.
பவளப்பாறைகளைப் பாதுகாத்தல்: பவளப்பாறைகள் கடலில் வாழும் உயிரினங்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆமைகள் பவளப்பாறைகளுடன் போட்டியிடும் கடல் பாசிகளை உண்பதன் மூலம் பவளப்பாறை ஆரோக்கியத்தைக் காக்கின்றன. வேகமாக வளரும் கடற்பாசிகளை உண்பதனால் பவளப்பாறைகள் செழித்து வளர்கின்றன. இதனால் பல்லுயிர்ப் பெருக்கமும் பவளப்பாறையின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படுகின்றன.
ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்துதல்: கடல் ஆமைகள் ஜெல்லி மீன்களை உண்பதில் திறமை வாய்ந்தவை. இல்லாவிட்டால் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகமாகி, அவை லார்வா மீன்களின் எண்ணிக்கையை குறைக்கும். அதாவது, லார்வா மீன்களை ஜெல்லி மீன்கள் இரையாக்கிக் கொள்ளும். மேலும், இவை கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் கூட தீங்கு விளைவிக்கின்றன.
ஊட்டச்சத்து பாதுகாப்பு: ஆமைகள் கடற்கரைகளில் குஞ்சு பொரித்து முட்டையிடுகின்றன. குஞ்சு பொரிக்காத முட்டைகள் மற்றும் முட்டை ஓடுகள் மணலில் உள்ள தாவரங்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இதனால் மணல்மேடுகள் உறுதியாக இருந்து கடலோர அரிப்பை தடுக்க உதவுகின்றன. மேலும், கடல் தள வண்டல்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்ய உதவுகின்றன.
ஊட்டச்சத்து பரிமாற்றம்: கடல் ஆமைகள் அவற்றின் நீண்ட இடப்பெயர்வு மூலம் அவற்றின் ஓடுகளுடன் இணைக்கப்பட்டுள்ள பர்ணக்கில்ஸ், சிறிய ஓட்டு மீன்கள், பாசிகள் போன்ற பல்வேறு நீர்வாழ் உயிரினங்களை சுமந்து செல்கின்றன. இவை கடலில் உள்ள மற்ற மீன்கள் மற்றும் இறால்களுக்கு உணவாக அமைகின்றன. இது கடலின் ஊட்டச்சத்து பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
சுற்றுலா வருமானம்: உலகெங்கிலும் கடலோர ஆமைகளை பார்ப்பதற்கு மக்கள் கணிசமாக கூடுகிறார்கள். இதனால் சுற்றுலா மூலம் அந்தந்த நாட்டிற்கு உரிய கணிசமான வருமானத்தை உருவாக்குகிறது. கடல் ஆமைகள் இறைச்சி அல்லது ஓடுகளுக்காக அறுவடை செய்யப்பட்டு இறப்பதை விட சுற்றுலா மூலம் உயிருடன் இருப்பது மிகவும் மதிப்பு வாய்ந்தது என்று ஆய்வுகள் சொல்கின்றன.
கலாசார முக்கியத்துவம்: பல பழங்குடி கலாசாரங்களில் கடல் ஆமைகள் கலாசார மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. பெரும்பாலும் இவை மூதாதையர்களாகவோ அல்லது அடையாளத்தின் சின்னங்களாகவோ மதிக்கப்படுகின்றன.
பெருங்கடல் ஆரோக்கியத்தின் குறிகாட்டிகள்: கடல் ஆமைகள், மாசுபாடு, வாழ்விட அழிவு மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றிற்கு மிகவும் உணர்திறன் கொண்டவை. அவற்றை பாதுகாப்பது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். கடல் ஆமைகளை பாதுகாப்பது என்பது ஒரு இனத்தை காப்பாற்றுவது மட்டுமல்ல, பெருங்கடல்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதாகும்.