
நிலத்தில் நேரடியாக விதைகளை விதைப்பதைக் காட்டிலும், நாற்றுகளை உற்பத்தி செய்வது கூடுதல் பலனைத் தருகிறது. நேரடி விதைப்பில் சில விதைகள் முளைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. ஆனால் நாற்றுகளை உற்பத்தி செய்து, நிலத்தில் நடுவதன் மூலம் அனைத்துப் பயிர்களின் வளர்ச்சியும் சீராக இருக்கும். அதோடு இம்முறையில் விவசாயிகளால் கூடுதல் மகசூலையும் எடுக்க முடியும்.
பெரும்பாலும் நெல், கோதுமை உள்ளிட்ட தானியப் பயிர்கள் முதல் தோட்டக்கலைப் பயிர்கள் வரை நாற்று முறையில் தான் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக காய்கறி நாற்று உற்பத்திக்கு நிழல்வலைக் குடில்கள் (Shade Net House) பெரிதும் உதவுகின்றன. இம்முறையில் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்ய எவையெல்லாம் முக்கியம் என்பதை இப்போது பார்ப்போம்.
நிழல்வலைக் குடில்கள் நேரடி சூரிய ஒளியில் இருந்து நாற்றுகளைப் பாதுகாப்பதோடு, பூச்சித் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கின்றன. நிழல்வலைக் குடில்களில் ஏறக்குறைய 50% நிழல் தரும் வகையில் வலைகள் கொண்டு மேற்கூரை அமைக்க வேண்டும். குடிலைச் சுற்றி 6 அடி உயரத்திற்கு பூச்சிகள் புகாதவாறு வலைகளைக் கட்ட வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் பூச்சிகள் 6 அடி உயரத்திற்கு மேல் தென்படாது. குடிலின் உள்பகுதியில் மேட்டுப்பாத்திகளை அமைத்து, நல்ல தரமான நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.
தரமான நாற்றுகள்:
ஆரோக்கியமான, வளமான மற்றும் உறுதியான 6 இலைகளைக் கொண்ட நாற்றுகளைத் தரமான நாற்றுகள் என்போம். தரமான நாற்றுகளை உற்பத்தி செய்ய வளமான மண் கலவை, போதிய சூரிய வெளிச்சம், சீரான இடைவெளி மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவை அவசியமாகும். இருப்பினும் நாற்றுகளை உற்பத்தி செய்யும் போது சில அடிப்படையான காரணிகளையும் விவசாயிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
குழித்தட்டுகள்:
நாற்றுகள் பொதுவாக சிறுசிறு அறைகளைக் கொண்ட பிளாஸ்டிக் குழித்தட்டுகளில் வளர்க்கப்படுகின்றன. குழித்தட்டுகளின் அளவைப் பொறுத்து அதில் 50 முதல் 98 வரையிலான சிறுசிறு அறைகள் இருக்கும். பயிர் வகை மற்றும் விதைகளின் அளவைப் பொறுத்து தான் குழித்தட்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அறைகள் கொண்ட குழித்தட்டுகள் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துகளை அதிகளவில் சேமித்துக் கொள்ளும்.
சிறிய அறைகள் மற்றும் எடை குறைந்த குழித்தட்டுகளை கையாள்வது எளிதாக இருக்கும்; அதோடு விலையும் குறைவு. ஆனால் நீண்ட நாட்களுக்கு இவற்றைப் பயன்படுத்த முடியாது. உறுதியான மற்றும் எடை மிகுந்த குழித்தட்டுகளை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.
வளர்ச்சி ஊடகம்:
களைகள் மற்றும் நோய்க்கிருமிகள் இல்லாத வகையில் வளர்ச்சி ஊடகம் இருத்தல் வேண்டும். மேலும் அதிக ஊட்டத்துகளுடனும், வடிகால் வசதியுடனும் இருக்க வேண்டும். ஆகையால் 4% கரிம உரம் மற்றும் கார அமில நிலை 6 முதல் 8 வரையுள்ள சிறந்த மண்கலவையைப் பயன்படுத்த வேண்டும்.
தரமான மற்றும் வீரியம் மிக்க நாற்றுகளைத் தயாரிக்க தேங்காய் நார்க்கழிவுகளையும் வளர்ச்சி ஊடகமாகப் பயன்படுத்தலாம். நார்க்கழிவுடன் 5கிலோ வேப்பன் பிண்ணாக்கு, 1கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 1கிலோ பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து உபயோகிக்க வேண்டும். ஒரு குழித்தட்டிற்கு 1.2கிலோ தேங்காய் நார்க்கழிவு தேவைப்படும்.
தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதில் விதைப்பு, முளைப்புத் திறன், தண்ணீர் மேலாண்மை, சூரிய ஒளி மேலாண்மை, ஊட்டச்சத்து, பதப்படுத்துதல் மற்றும் கடினப்படுத்துதல் போன்ற காரணிகளும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.