
இந்த உலகின் 66 சதவிகித நிலப்பரப்பு பெருங்கடல்கள் என்கிற அழகான நீலப் போர்வையால் மூடப்பட்டுள்ளது. இந்த பூமியில் உள்ள உயிரினங்களின் வாழ்வாதாரமாகத் திகழும் பெருங்கடல்களின் சிறப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பூமியின் நுரையீரல்: பெருங்கடல்களின் மேற்பரப்பு நீரில் வாழும், ‘பைட்டோப்ளாங்க்டன்’ எனப்படும் சிறிய கடல் தாவரங்கள் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பெரும் அளவை உற்பத்தி செய்கின்றன. நிலத்தில் உள்ள மரங்களைப் போலவே அவை ஒவ்வொரு நொடியும் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் கால் பங்கை பெருங்கடல்கள் உறிஞ்சி காற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. இது புவி வெப்பமடைதலைக் குறைக்க உதவுகிறது.
காலநிலையை ஒழுங்குபடுத்துதல்: பெருங்கடல்கள் சூரியன் வெளியிடும் அதிக அளவு வெப்பத்தை உறிஞ்சுகின்றன. மேலும், காலநிலை மாற்றத்தால் நமது வளிமண்டலத்தில் உள்ள கூடுதல் வெப்பத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வெப்பத்தை உறிஞ்சுகின்றன. இந்த வெப்பத்தை கடல் நீரோட்டங்கள் வழியாக பூமியைச் சுற்றி நகர்த்துகின்றன. இந்த நீரோட்டங்கள் மழைப்பொழிவு முதல் வெப்பநிலை வரை உலகளாவிய வானிலை மாற்றங்களைப் பாதிக்கின்றன. ஆரோக்கியமான பெருங்கடல்கள் இல்லை என்றால் வலுவான புயல்கள், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் போன்ற கணிக்க முடியாத வானிலையை நாம் அனுபவிக்க நேரிடும். உதாரணமாக, வளைகுடா நீரோடை என்பது மேற்கு ஐரோப்பாவிற்கு மிதமான வெப்பநிலையை கொண்டு வரும் ஒரு சூடான பெருங்கடல் ஆகும். இந்த நீரோட்டம் பலவீனமடைந்தால் அந்தப் பகுதிகளில் அதீதமான குளிர் நிலவும்.
அமுதசுரபி: பெருங்கடல்கள் பில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு வழங்கும் அமுதசுரபியாகத் திகழ்கின்றன. உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக வளரும் நாடுகளில் மீன் மற்றும் பிற கடல் உணவுகள் புரதத்தின் முக்கிய ஆதாரமாகும். உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கி உணவுப் பாதுகாப்பை ஆதரிக்கின்றன.
வாழ்வாதாரம்: மீன் பிடித்தல், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பெருங்கடல்கள் வாழ்வாதாரமாக இருக்கின்றன.
ஆரோக்கியமான பெருங்கடல்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. டைவிங், ஸ்னோர்கெல்லிங் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் போன்றவற்றின் மூலம் கடலை நம்பியுள்ள மக்களுக்கு வேலை மற்றும் வருமானத்தை வழங்குகின்றன. பெரும்பாலான பொருட்கள் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அதனால் பெருங்கடல்கள் உலகளாவிய வர்த்தகத்தின் சூப்பர் ஹைவே ஆகும்.
பாதுகாப்பு: பெருங்கடல்கள் இயற்கைப் பேரழிவுகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன. இவற்றில் உள்ள பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் உப்பு சதுப்பு நிலங்கள் போன்ற கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகள் இயற்கையான தடைகளாகச் செயல்பட்டு புயல்கள், வெள்ளம் மற்றும் அரிப்புகளிலிருந்து கடற்கரைகளை பாதுகாக்கின்றன. இந்த வாழ்விடங்கள் சூறாவளி மற்றும் சுனாமியால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகின்றன.
பல்லுயிர்களின் தாயகம்: மில்லியன் கணக்கான உயிரினங்களுக்குத் தாயகமான பெருங்கடல்கள் பூமியின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பாக விளங்குகின்றன. பூமியின் நிலப்பரப்பில் இல்லாத பல உயிரினங்கள் பெருங்கடல்களில் உள்ளன. நுண்ணிய உயிரினங்கள் முதல் திமிங்கலங்கள் போன்ற மிகப் பெரிய விலங்குகள் வரை வியக்கத்தக்க பல்வேறு உயிரினங்கள் பெருங்கடல்களில் காணப்படுகின்றன.
மருந்துகள்: கடல் வாழ் உயிரினங்கள் மருந்துகளில் பயன்படுத்தக்கூடிய தனித்துவமான ரசாயனங்கள் மற்றும் சேர்மங்களின் வளமான மூலமாகும். புற்றுநோய், மூட்டு வலி மற்றும் இதய நோய்களுக்கான பல மருந்துகள் கடல் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படுகின்றன.
பெருங்கடல்கள் என்பது பூமியின் உயிர் ஆதரவு அமைப்பாகும். எனவே, பெருங்கடல்களை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். இது மனிதர்களின் தலையாய கடமை ஆகும். கடலின் அழகு, செல்வம் போன்றவற்றை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், எண்ணெய்க் கழிவுகளைக் கொட்டுவது போன்ற செயல்பாடுகளை தடுக்க வேண்டும்.