

உலகின் முதல் ‘தத்துவ ஞானி’ எனப் போற்றப்படுபவர் சாக்ரடீஸ். இவர் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கியவர். இவரது, ‘எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், நான் ஒரு அறிவாளி’ என்பது சாக்ரடீஸின் புகழ் பெற்ற தத்துவம்.
சாக்ரடீஸின் மாணவரான பிளேட்டோ மேற்கத்திய அறிவியல், வாழ்வு மற்றும் கணித தத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். இவரது, ‘உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம். நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையல்லை. ஏனெனில், அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுக்கே உரிய சட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்’ என்பது இவரது புகழ் பெற்ற தத்துவம்.
பிளேட்டாவின் மாணவர், மாவீரன் அலெக்சாண்டருக்கு 12 ஆண்டுகள் நண்பராகவும், ஆசிரியராகவும் இருந்தவர் அரிஸ்டாட்டில். இவரது, ‘இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால், இந்த உலகை இயக்குபவன் இறைவனே. மனிதன் தனி மனித சிந்தனை கொள்ளாமல், சமூக சிந்தனையோடு வாழ வேண்டும்’ என்கிறார்.
கார்ல் மார்க்ஸ் பொதுவுடமை கொள்கைகளின் மூவர்களில் முக்கியமானவர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்பைடையில் வரலாற்றை ஆராய்ந்து சொன்னவர். ‘மூலதனம் இறந்த தொழிலாளரைப் போன்றது. இது உயிருள்ள தொழிலாளரின் உழைப்பை உறிஞ்சி வாழ்கிறது’ என்பது மார்க்ஸின் தத்துவக் கருத்து.
மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை பல நூற்றாண்டுக்கு முன்பு தெளிவுபடுத்திய வகையில் பல ஆராய்ச்சிக்கான கதவுகளை அகல திறந்து வைத்த பெருமைக்குரியவர் டார்வின். ‘மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்குகிறான் என்றால் அவன் வாழ்க்கையின் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்’ என்கிறார் டார்வின்.
சிறு வயதிலிருந்து தியானத்தில் ஈடுபட்டவர் ஓஷோ. தன்னுடைய 21வது வயதில் ஞானம் அடைந்தார். ஞானம் அடைதல் என்பது முழுமையான தன் உணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதைக் குறிப்பதாகும். ‘கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை. நீதான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காண முடியாதபடி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்’ என்கிறார்.
சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய துறவி மகாவீரர். ‘மூன்று ரத்தினங்கள்’ என அழைக்கப்படும் தன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் என்ற போதனையை போதித்தவர். இவருடைய போதனைகள் தத்துவங்கள் என்றும் உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறது. ‘கவனமுடன் செயலாற்றுங்கள். நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்‘ என்பது மகாவீரரின் அறிவுரை.