
மழைக்காடுகள் பூமியின் அசாதாரணமான மற்றும் விலை மதிப்பற்ற பரிசுகளில் ஒன்றாகும். உலகின் தாவர மற்றும் விலங்கு இனங்களின் வீடுகளாக செயல்படுகின்றன மழைக்காடுகள். அவற்றின் சிறப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மழைக்காடுகளின் நன்மைகள்:
1. தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வீடுகள்: மழைக்காடுகள் பூமியின் மேற்பரப்பில் இரண்டு முதல் ஆறு சதவீதம் மட்டுமே இருந்தாலும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வீடுகளாக இவை செயல்படுகின்றன. அண்டார்டிகாவை தவிர, ஒவ்வொரு கண்டத்திலும் மழைக்காடுகள் செழித்து வளர்கின்றன. பூமியின் மிகப்பெரிய மழைக்காடுகள், தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதியையும் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதியையும் சூழ்ந்துள்ளன. தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் அடர்ந்த மழைக் காடுகள் உள்ளன.
2. பூமியின் நுரையீரல்: ஒளிச்சேர்க்கை மூலம் ஏராளமான மரங்களும் தாவரங்களும் வளிமண்டலத்திலிருந்து அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. பூமியின் காலநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் புவி வெப்பமடைதலைத் தணிப்பதற்கும் இந்த செயல்முறை மிக முக்கியமானதாகும்.
3. பல்லுயிர் பெருக்கத்தின் தாயகம்: மில்லியன் கணக்கான உயிர்களின் தாயகம் மழைக்காடுகள். பல்லுயிர் பெருக்கத்தில் ஈடு இணையற்ற சேவையை இவை செய்கின்றன. உலகில் பாதிக்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கு இனங்களுக்கு தாயகமாக இவை உள்ளன. எண்ணற்ற பூச்சிகள், பறவைகள், பூஞ்சைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன இவற்றில் அடங்கும்.
4. உலகளாவிய நீர் சுழற்சி: உலகளாவிய நீர் சுழற்சியில் மழைக்காடுகள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. மரங்கள் வளிமண்டலத்தில் மிகப்பெரிய அளவில் நீராவியை வெளியிடுகின்றன. இந்த ஈரப்பதம் மேகங்கள் உருவாகும் மழைப் பொழிவிற்கும் வழிவகுக்கிறது. அமேசான் மழைக்காடுகளில் இருந்து வரும் ஈரப்பதம் அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதி வரை மழைப்பொழிவைத் தருகிறது. அவை இயற்கையான கடற்பாசிகளாக செயல்பட்டு கனமழையை உறிஞ்சி, அதன் ஓட்டத்தை மெதுவாக்கி, நிலத்தடி நீர் இருப்புகளில் ஊடுருவ உதவுகின்றன. இதனால் நதிநீர் ஓட்டங்களை ஒழுங்குபடுத்துகின்றன. பிற பகுதிகளில் வெள்ளம் மற்றும் வறட்சியை தடுக்கின்றன. தண்ணீரை வடிகட்டி சுத்தமாக வைத்திருக்கின்றன.
5. மருந்துகளின் ஆதாரம்: புற்றுநோய், மலேரியா, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் மழைக்காடுகளில் இருக்கும் தாவரங்களில் இருந்துதான் பெறப்படுகின்றன.
6. பலமான சுற்றுச்சூழல் அமைப்பு: மழைக்காடுகளில் உள்ள மர வேர்களின் அடர்த்தியான வலை அமைப்பு மண்ணை ஒன்றாக இணைக்க உதவுகிறது. கன மழையால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கிறது. வளமான நிலத்தை பராமரிப்பதற்கும், நிலச்சரிவுகள் மற்றும் ஆறுகளில் வண்டல் படிவதைத் தடுப்பதற்கும் உதவுகின்றன. காட்டுத்தளத்தில் கரிமப் பொருள்களின் விரைவான சிதைவு ஊட்டச்சத்துகளை விரைவாக மறுசுழற்சி செய்து பலமான சுற்றுச்சூழல் அமைப்பை நிலை நிறுத்துகிறது.
7. பழங்குடி மக்களின் தாயகம்: மழைக்காடுகள் மில்லியன் கணக்கான பழங்குடி மக்களின் தாயகம் ஆகும். அவர்களில் பலர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். அவை பெரும்பாலும் கலாசார மற்றும் ஆன்மிக அடையாளங்களுடன் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளன. அவற்றின் உயிர் வாழ்வும் ஞானமும் மனித குலத்திற்கு பரிசுகள் ஆகும்.
நாம் சுவாசிக்கும் காற்று, குடிநீர், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவற்றை மழைக்காடுகள் வழங்குகின்றன. உலகளாவிய காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நுட்பமான சமநிலையை பராமரிப்பதில் ஈடு செய்ய முடியாத பங்கை இவை வகிக்கின்றன. அவற்றை பத்திரமாகக் கட்டிக்காப்பது மனித குலத்தின் முக்கியக் கடமையாகும்.