ஜாம்செட்ஜி என்.டாடாவின் மருமகளான மெஹர் பாய் டாடா ஒரு மகத்தான பெண்ணியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. ஒலிம்பிக்கில் பாரம்பரிய பார்சி உடையில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி என்கிற பெருமை உடையவர். இவருடைய சிறப்புகளையும், பன்முகத்தன்மை பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
அசாதாரணமான பெண்மணி: மைசூரில் கல்விப் பொது ஆய்வாளராக பணியாற்றியவர் மெஹர் பாயின் தந்தை. அவரது தனித்துவமான வளர்ப்பில் அசாதாரணமான பெண்மணியாகத் திகழ்ந்தார் மெஹர் பாய். பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டிருந்த காலத்திலேயே, விளையாட்டு, சமூக சேவை, சீர்திருத்தம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் போன்ற புதுமையான செயல்களுடன் திகழ்ந்தார் இவர். ஜாம்செட்ஜி என்.டாடாவின் மூத்த மகனான டோராப்ஜி டாடாவை தனது பதினெட்டாம் வயதில் இவர் மணந்தார்.
பாரம்பரிய உடையில் ஒலிம்பிக்கில் பங்கேற்பு: விளையாட்டில் தீவிர ஆர்வம் வாய்ந்த மெஹர் பாய், 1924 பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். பாரம்பரிய பார்ஸி சேலை அணிந்து கொண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். தனது கூட்டாளியான முகமது சலீமுடன் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடினார். அவரது வாழ்நாள் முழுவதும் சுமார் 60 டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்றார். பெண்கள் விளையாட்டுகளில் முன்னோடியாக இவர் திகழ்ந்தார்.
குழந்தை திருமணத் தடைச் சட்டம்: குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தில் மெஹர் பாயின் பங்கு சிறப்பு வாய்ந்தது. குழந்தை திருமணத் தடைச் சட்டமான சாரதா சட்டம் இயற்றப்பட்டதில் அவரது பங்கு முக்கியத்துவம் பெற்றது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். 1929ல் நடந்த சர்வதேச மகளிர் கவுன்சில் உச்சி மாநாட்டில் அவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களின் வாக்குரிமை, கல்வி மற்றும் பர்தா முறையை ஒழித்தல் போன்ற பிரச்னைகளை முன்வைத்தார். 1920களில் உலகளாவிய பெண்கள் இயக்கத்தில் அவரது குரல் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்து குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தையும் பெற்றது.
டாடா குடும்பத்தின் வைரம்: 1900ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஏலத்தின்போது அவரது கணவர் டோராப்ஜி டாடாவால் 245.35 காரட் எடை கொண்ட ஜுபிலி டைமண்ட் வாங்கப்பட்டது. அது புகழ் பெற்ற கோகினூர் வைரத்தை விட இரண்டு மடங்கு பெரியது. முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அப்போது டாடா குழுமம் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது. வைரம் போல மன உறுதி வாய்ந்த மெஹர் பாய் சற்றும் தயங்காமல் தங்களது நிறுவனத்தைக் காப்பாற்றவும், எண்ணற்ற ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் பொருட்டும், தனது குடும்பத்தின் அரிய சொத்தான ஜூப்லி வைரத்தை அடமானம் வைத்தார்.
அது கணிசமான நிதியைத் திரட்டி வணிக மாதிரியை மறுசீரமைக்கவும் அழுத்தமான நிதி பொறுப்புகளை நிவர்த்தி செய்யவும் உதவியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தையும் அமைத்தது. பொதுவாக, பெண்கள் வீட்டில் இருக்கும் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருள்களை விற்கவோ, அடகு வைக்கவோ அவ்வளவு லேசில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால், பெரிய நிறுவனத்தின் நன்மைக்காக தனிப்பட்ட தியாகங்கள் அவசியம் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது மெஹர் பாயின் செயல்.
நிதித்தடைகளை சமாளித்து இறுதியில் டாடா குடும்பத்திடம் அந்த வைரம் வந்து சேர்ந்தது. பின்பு அந்த வைரம் விற்கப்பட்டு டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் மற்றும் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் போன்ற குறிப்பிடத்தக்க சேவைகளாக மாறின. தனது 52வது வயதில் லூக்கேமியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் மெஹர் பாய். அவரது மரணம் நாட்டின் பெண்கள் உரிமை இயக்கத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு என்று காமன் காஸ் வெளியீடு குறிப்பிட்டது.