குறிஞ்சிப் பூ என்றாலே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய மலர் என்பது தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். பசுமை போர்த்திய மலைகளில் நீல பட்டாடை விரித்ததைப் போன்று காணப்படும் குறிஞ்சி பூக்களின் அழகை காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது தான். அவ்வளவு அழகையும், பல்வேறு மருத்துவ பயன்களையும் உடைய குறிஞ்சி பூக்களை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மணி போன்ற வடிவத்தில் கொத்துக்கொத்தாக பூத்துக்குலுங்கும் இப்பூக்கள் அதன் மகரந்த சேர்க்கைக்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதால் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்றன. இதைப் பூக்க தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை மலைகள் எங்கும் பரவிக் காணப்படுகின்றன. இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பூக்கக்கூடிய இந்த குறிஞ்சி பூவானது வலிமையான புதர் செடியை சார்ந்தது. உயரமான மலைப் பகுதிகளில் மழைக்காலத்திற்கு பின் இவை பூக்கத் தொடங்கும்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகமாக குறிஞ்சி பூக்கள் பூக்கின்றன. குறிஞ்சி பூக்கள் நீல நிறம் மற்றும் கரு நீல நிறம் ஆகிய இரண்டு வண்ணங்களாக காணப்படுகின்றன. உலகில் மொத்தம் 250 வகைக்கும் அதிகமான குறிஞ்சி பூக்கள் உள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் 46 வகைகள் உள்ளன. நீலகிரி, கொடைக்கானலில் மட்டும் 30 வகையான குறிஞ்சி பூக்கள் பூக்கின்றன. குறிஞ்சிப் பூக்கள் எப்பொழுதும் மிகப்பெரிய அளவிலே காணப்படும். ஒரே ஒரு தாவரத்தில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட பூக்கள் இருக்கும், என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இவை ஆகஸ்ட் மாதத்தில் மெல்ல பூக்கத் தொடங்கி நவம்பர், டிசம்பர் மாதங்களில் மலைகள் எங்கும் ஊதா நிறத்தில் காட்சியளிக்கின்றன. பொதுவாக குறிஞ்சி பூக்கள் பூக்கும் போது அந்த இடத்தில் வேறு செடிகள் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அவை வளரும்போதே அருகில் உள்ள செடிகளை எல்லாம் அழுத்திவிட்டுதான் வளர்கின்றன.
இது எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் குறிஞ்சிப்பூ ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது தெரியுமா?
அதற்குக் காரணமே அந்த பூவில் உள்ள தேன் தான். குறிஞ்சி பூவின் இலைகள் நச்சுத்தன்மை உடையது. ஆனால் குறிஞ்சி பூவிலிருந்து எடுக்கப்படும் தேன் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் குறிஞ்சிப் பூக்களில் அதிகமான தேன் இருப்பதுதான்.பொதுவாக தேனீக்கள் தேனை சேகரிக்கும் போது பல்வேறு வகையான பூக்களில் இருந்து அந்த தேனை சேகரிப்பது தான் வழக்கம். ஆனால் குறிஞ்சி பூக்கள் ஒரே இடத்தில் பரந்த அளவில் காணப்படுவதால் அங்கு கட்டப்படும் தேன் கூடுகளில் பெரும்பாலும் கலப்படம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஒரே இனத்தைச் சேர்ந்த பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட தேனாக இருப்பதால் இந்த தேன் மிகவும் சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் தான் குறிஞ்சி தேனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது.
நீலகிரி,கொடைக்கானல் போன்ற இடங்களில் வாழும் மலைவாழ் மக்கள் குறிஞ்சி பூவை வைத்தே தங்களது ஆயுள் காலத்தை கணக்கிட்டு கொள்கிறார்களாம். ஒருவர் தன் வாழ்நாளில் எத்தனை முறை குறிஞ்சி பூவை பார்க்கிறார்கள் என்பதை வைத்து அவர்கள் தங்களுடைய வயதை கணக்கிட்டு கொள்கிறார்களாம். மேலும் அங்குள்ள ஆதிவாசி மக்கள் குறிஞ்சிப் பூக்கள் பூக்கும் காலத்தை வசந்த காலமாக கருதுகிறார்களாம். அத்தகைய காலகட்டத்தில் தான் அவர்களது இல்ல விழாக்களை கூட மிகச் சீரும் சிறப்புமாக கொண்டாடுகிறார்களாம்.
குறிஞ்சி பூவானது சருமப் பிரச்சினைகளை சரி செய்வதற்கு பயன்படுகிறது. மேலும் மூட்டு வலி, வீக்கம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் குறிஞ்சி பூவை நன்கு நசுக்கி வீக்கம் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் வீக்கம் குணமாகும். ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் குறிஞ்சி பூவை அதிகமாக மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்களாம். குறிஞ்சி செடியினது வேர் காய்ச்சல், சளி இருமல் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் குறிஞ்சித் தேன் பிரசவ காலத்திற்குப் பின் பெண்களை நன்கு கவனித்துக் கொள்ள பயன்படுகிறது. அந்தக் காலகட்டங்களில் வரும் வயிற்று வலி போன்ற வயிறு தொடர்பான உபாதைகளுக்கு குறிஞ்சி தேன் மருந்தாக கொடுக்கப்படுகிறது .
குறிஞ்சி பூவின் இத்தகைய மகத்துவத்தை கருதியே சங்க காலங்களில் எண்ணற்ற புலவர்கள் குறிஞ்சி பூவை தங்களுடைய நூல்களில் போற்றிப் பாடி இருக்கிறார்கள். காலம், அழகு, மருத்துவ குணம் போன்ற பல்வேறு செய்திகளை விளக்குவதற்கு புலவர்கள் சங்க நூல்களில் குறிஞ்சி பூவை கையாண்டு இருக்கிறார்கள். உதாரணமாக அகநானூறு, குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு, நற்றிணை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல் என சங்க இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் குறிஞ்சிப் பூ இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் குறிஞ்சி பூ பூக்கும் போது அதன் அழகை காண்பதற்கு மக்களிடையே அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அது ஒரு கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறததாம். அன்பின் அடையாளமாகவும், வசந்தத்தை போற்றும் காலமாகவும், முருகப்பெருமானுக்கு உகந்த மலராகவும் போற்றப்படும் இந்த குறிஞ்சி பூவை காணும் வாய்ப்பு உங்களுக்கும் கிடைத்தால் அதன் அழகினை கண்டு மகிழுங்கள்!