
இந்தியாவில் கிட்டத்தட்ட 17,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் ஒர் உயிரினம் புலி. இதன் எடை சராசரி 200 கிலோ, சராசரி 3.3 மீ நீளம் இருக்கும். மணிக்கு 60 கிமீ ஓடக்கூடிய விலங்கு. ஒரு வேளைக்கு இரையாக 40 கிலோ மாமிசம் சாப்பிடும். பசித்தால் மட்டுமே வேட்டையாடும் அதுவும் வயிற்றில் குட்டிகளை சுமக்கும் எதையும் தாக்காது குட்டிகளையும் தாக்காது. புலிகள் இயல்பில் கூச்ச சுபாவம் உடையது ஒரு முகத்தை பார்த்துவிட்டால் எளிதில் மறக்காது, அது வாழ 1000 சதுர மீட்டர் காடு வேண்டும்.
புலி இந்தியாவின் தேசிய விலங்கு. உலகிலுள்ள புலிகளில் 4 லில் 3 பங்கு இருப்பது இந்தியாவில்தான். தற்போது இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன. நமக்கு கிடைக்கும் தண்ணீர் முதல் காற்று வரை அனைத்தும் காடுகளில் இருந்துதான் கிடைக்கிறது. அதை காப்பது புலிகள் என்பதால்தான் அவைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. வனங்களின் வளத்திற்கு புலிகள் முக்கிய காரணமாக விளங்குவதால் புலிகளை காடுகளின் காவலன் என்கிறார்கள்.
புலிகளின் எச்சங்கள்தான் காடுகளில் பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகிக்கின்றன. புலிகள் இருக்கும் காடுகளில் மனித நடமாட்டம் இருக்காது, அதனால் மரங்கள் வெட்டப்படாது, காடுகளில் மரங்களின் அடர்த்தி அதிகரித்து பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழத்துவங்கும். ஒரு புலி ஒரு வருடத்தில் சுமார் 45 முதல் 55 வரையிலான இரை விலங்குகளை உணவாகக் கொள்ளும் இதன் மூலம் காடுகளின் சமநிலை காக்கப்படுகிறது. தனக்கான உணவு இல்லாத இடத்தில் புலிகள் இருப்பதில்லை.
19ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் 40,000 புலிகள் இருந்தன. 1972ல் கணக்கெடுப்பின்போது நாட்டில் வெறும் 1411 புலிகள் மட்டுமே இருந்தன. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அழிந்து வரும் புலிகளை காப்பாற்ற 1973ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி புராஜெக்ட் டைகர் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் 9 புலிகள் காப்பகம் 53 புலிகள் காப்பகமாக மாறியது. 2010ல் ரஷ்யாவில் 13 நாடுகள் கலந்து கொண்ட புலிகள் விழிப்புணர்வு மாநாட்டில் தான். ஜூலை 29 ந்தேதி உலக புலிகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும். புலிகளின் நடமாட்டம் அறியப்பட்ட பகுதிகளில் தானியங்கி புகைப்பட கருவிகள் பொருத்தப்பட்டு புலிகள் நடமாட்டத்தை கேமிரா மூலம் பதிவு செய்தே புலிகளின் கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுவது போல ஒவ்வொரு புலிகளுக்கும் உடலில் உள்ள வரிகள் மாறுபடுவது இயற்கையின் அதிசயம். இதன் அடிப்படையில்தான் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்தியாவில் 17 மாநிலங்களில் புலிகள் இருக்கின்றன. புலிகளை கால் தடங்கள் வைத்து கணக்கிடும் முறை ஆரம்பத்தில் இருந்தது. அப்போது ஒரு புலியின் தடத்தையே வெவ்வேறு இடங்களில் கணக்கெடுத்து விட வாய்ப்பிருந்தது. புலிகளின் கால் தடங்கள் மணல் வெளியில் ஒரு மாதிரியாகவும்,களிமண் பகுதியில் வேறு மாதிரியாகவும் பதியும், அதனால் கணக்கெடுப்பில் பிழை நேர்ந்தது. அதனால் கேமரா டிராபிங்ஸ் முலம் கணக்கெடுப்பு நடத்துகிறார்கள்.
இது புலிகளின் உடம்பில் இருக்கும் வரிகளை வைத்து அடையாளம் காணும் முறையாகும். 2018ம் ஆண்டிலிருந்து புலிகள் கணக்கெடுப்பிற்கு 4.7 கோடி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் புலிகளின் உருவம் மட்டும் பதிவானது 97,399 இதிலிருந்துதான் 3167 புலிகள் எனக்கணக்கிட்டார்கள்.
உலகிலேயே அதிகம் பேரால் விரும்பப்படும் விலங்கு எது தெரியுமா? புலிகள்தான். ஆய்வில் தெரிய வந்த உண்மை இது. காரணம் அதன் கம்பீரம் மற்றும் வண்ணமயமான அதன் உடலமைப்பு. இதனால்தான் உலகில் அதிகம் புலிகள் உள்ள 13 நாடுகளில் 7 நாடுகள் " குளோபல் டைகர் ஃபோரம்" எனும் அமைப்பில் இணைந்து புலிகளை பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது.