

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்
திருவொற்றியூர் உள்ள தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பூலோகத்தில், முதன்முறையாக இத்திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுவதால், இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், ஆதிபுரீஸ்வரர் (சிவபெருமானின் முதல் வடிவம்) என அழைக்கப்படுகிறார். இந்த திருக்கோவில் இன்றும் அதன் பழமைத் தன்மை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிலில் ஆண்டு முழுவதும், மூலவர் ஆதிபுரீஸ்வரர் தங்க முலாம் பூசிய கவசம் அணிவித்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை தீபத்தையொட்டி 3 நாட்கள் மட்டும் ஆதிபுரீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் திறக்கப்பட்டு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த வழக்கம் தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு ஆதிபுரீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டு உள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாக கவசம் இன்று (டிசம்பர் 4-ந்தேதி) மாலை 6 மணியளவில் திறக்கப்பட்டு, மகா அபிஷேகம், புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து 5, 6 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணிவரை ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி பக்தர்கள் தரிசிக்க முடியும். பின்னர் 6-ந் தேதி அர்த்தஜாம பூஜைக்கு(இரவு 8.30 மணியளவில்) பிறகு மீண்டும் ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் அணிவிக்கப்படும்.
ஆண்டுக்கொரு முறை, அதுவும் மூன்று நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசனம் செய்ய முடியும் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்வார்கள். கடந்தாண்டு மூன்று நாட்களில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த அரிய நிகழ்வை தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்
பெருமாள் கோவில்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கோவிலாக அனைவராலும் கருதப்படுவது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலாகும்.
இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசம் ஆகும். இந்த கோவில் சிறப்பு என்னவென்றால் இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். இதனை காண கண்கோடி வேண்டும்.
மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது முன்னோருக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் கோவிலுக்கு சென்று, சயன கோலத்தில் உள்ள மூலவர் வைத்திய வீரராகவ பெருமாளை தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல் சனிக்கிழமைகளிலும், புரட்டாசி மாதங்களிலும் இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்ய வருவார்கள்.
அஹோபில மடம் ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும், தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம். அதன்படி வரும் 5-ம்தேதி வரை மூலவர் வீரராகவப் பெருமாள் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதனை தொடர்ந்து 6-ம்தேதி முதல் வரும் 29ம் தேதி வரை, வீரராகவப் பெருமாளுக்கு தைலக்காப்பு நடைபெற உள்ளது.
வீரராகவப் பெருமாளுக்கு தைலக்காப்பு நடைபெறும்போது மூலவரின் உருவம் திரை போட்டு சாற்றப்பட்டிருக்கும். அவரது முழு உருவத்தையும் பார்க்க முடியாது. முகம் மற்றும் பாதத்தை மட்டும் பக்தர்கள் தரிசிக்கலாம். வரும் 30-ம்தேதி வைகுண்ட ஏகாதசி வருவதால் அன்றைய தினம் திரை விலக்கப்பட்டு மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.