மகாவிஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரால் திருவடியையும் திருமுடியையும் காண முடியாத சிவபெருமான், புற்றுருவில் வீற்றிருக்கின்ற திருத்தலம் திருவொற்றியூர். ஒரு காலகட்டத்தில் மகாபிரளயத்திற்குப் பிறகு சிருஷ்டியை உற்பத்தி செய்ய திருப்பாற்கடலில் திருமால் ஆலிலை மேல் அரனை நினைத்துக்கொண்டு யோக நித்திரை செய்தார். அவரது நாபிக் கமலத்திலிருந்து நான்முகன் தோன்றினார். அவருக்குக் காட்சி தருவதற்காக அக்னி சொரூபமான சிவன் அக்னியின் மத்தியில் சதுர வடிவமாகிய சித்திரப்பலகை வடிவில் வன்னி மரத்தடியில் எழுந்தருளினார்.
அவ்வாறு தோன்றிய இறைவன் யாராலும் உருவாக்கப்படாமல் தானே சுயம்புவாகத் தோன்றியதால், 'தீண்டாத் திருமேனியன்' என்று அழைக்கப்பட்டார். சுயம்பு லிங்கமான ஆதிபுரீசுவரர் தானே புற்றுமண்ணில் தோன்றியவர். புற்றே ஈசனாய் தீண்டாத் திருமேனியனாக விளங்கியதால் 'புற்றிடங்கொண்டார்' எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.
திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ ஆதிபுரீஸ்வரரை, அவருடைய புற்று வடிவ சுயம்பு லிங்கத் திருமேனியை, இந்தக் கோயிலில் ஆண்டில் 362 நாட்களும் கவசத்துடன் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சாத்தப்பட்டு மூடியே இருக்கும்.
கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று கவசம் திறக்கப்பட்டு மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து 3 நாட்கள் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த மூன்று நாட்களிலும் பிரம்மா, வாசுகி, ஆதிசேஷன், சந்திரன் ஆகியோர் அரூபமாய் வந்திருந்து சிவனை தரிசித்து பூஜிப்பதாக திருவொற்றியூர் தல புராணத்தில் கூறப்படுகிறது. மூன்றாம் நாள் இரவு மீண்டும் சுவாமிக்கு கவசம் சார்த்தப்படும்.
இங்குள்ள லிங்கத் திருமேனி தீண்டா திருமேனியாக இருப்பதால், இவருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சாதாரண நாட்களில் ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே சுயம்பு மூர்த்தியாகிய புற்றிடங்கொண்டாருக்கு அபிஷேகமும் விசேஷ பூஜைகளும் நடைபெறும். இந்த வருடம் கார்த்திகை பௌர்ணமியான 14.12.2024 முதல் 16.12.2024 இரவு 8 மணி வரை இந்த கவசமில்லாத சுயம்பு மூர்த்தியை தரிசனம் செய்யலாம்.
இங்கே அருளும் அம்பிகை வடிவுடையம்மன் என்றும், திருபுரசுந்தரி என்றும் திருநாமம் கொண்டவர். இந்த அம்மன் ஒரு காலத்தில் மிகவும் உக்கிரத்துடன் இருந்ததாகவும், ஆதிசங்கரர் இக்கோயில் அம்பிகையின் உக்கிரத்தைத் தணித்து சாந்தப்படுத்தியதாகவும் தல புராணம் கூறுகிறது. இந்தக் கோயிலில் நட்சத்திரங்கள் இருபத்தியேழும் ஈசனை வழிபட்ட 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன.
புற்றிடங்கொண்டார், தியாகேசர், படம்பக்கநாதர் என்னும் திருநாமங்களைக் கொண்ட ஈசனை வருடத்தில் இந்த மூன்று நாட்களிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு நற்பலன்களை பெறுகிறார்கள். திருவொற்றியூர் கோயிலில் ஒரு ஆண்டில் மூன்று நாட்கள் மட்டுமே தரிசனம் கொடுக்கும் ஆதிபுரீஸ்வரர் என்னும் சுயம்பு லிங்கத் திருமேனியை கண்குளிர தரிசித்து அருள் பெறுவோம்.