
பொதுவாகவே, பலரும் பொழுதுபோக்கிற்காகவும், சந்தோஷம், மன அமைதி மற்றும் இறை வழிபாடுகளுக்காகவும் சுற்றுலா போவதுண்டு. பல்வேறு மாநிலங்களின் கலாசாரம், சுற்றுலா தலங்கள், கேளிக்கை இடங்கள், வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்கள், புராதன தலங்கள், விரதமிருந்து இறையருள் தரிசனம் வேண்டுதல், நிறைவேற்றுதல் பொது அறிவை வளா்த்துக்கொள்ளும் விதமாகவும் நேரம் கிடைக்கும்போது வெளியூா்களுக்கு சுற்றுலா சென்று வருகிறாா்கள். ஆக, சுற்றுலா சென்று வருதல் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
எனவே, சுற்றுலாவை ஊக்குவிக்கும் நிலையிலும், சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், சுற்றுச்சூழல் பொறுப்புகளை மேம்படுத்தவும், பொருளாதார முன்னேற்றத்தை வகைப்படுத்தும் வகையிலும் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகில் உள்ள பல்வேறு நாடுகள் உலக சுற்றுலா வழியாக தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையானது, 1970ம் ஆண்டு தொடங்கி, செப்டம்பர் 27ம் நாளை உலக சுற்றுலா தினமாக அங்கீகரித்துள்ளது.
சுற்றுலாவானது கல்வி, பல்வேறு நாடுகளிடையே பரஸ்பர நல்ல புாிதல், பொருளாதார முன்னேற்றம், கலை, இலக்கியம், கலாசாரம் இவற்றை மேம்படுத்தும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பல நாடுகள், பல்வேறு மாநிலங்களில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புராதன விஷயங்களைப் பாா்க்கவும், தொிந்துகொண்டு அதனூடே வரலாறுகளைப் புாிந்து கொள்ளவும் துணைபுாிகிறது சுற்றுலா. அத்துடன் மாநிலம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கிடையே பொருளாதார பகிா்வு, பண்பாடு, மறக்க முடியாத வரலாற்று உண்மைகளையும் சிறப்புமிகு நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.
பலர் அண்டை மாநிலங்களில் உள்ள இடங்கள், புராதன சிற்பங்கள், பழைமை வாய்ந்த கோயில்கள், பூஜை, பரிகாரங்கள், இறை வழிபாடு இப்படி நிறைய விஷயங்களை உள்ளடக்கி சுற்றுலா சென்று வருகிறாா்கள். மேலும், பல வெளிநாட்டவர்கள் இந்திய சுற்றுலா மையங்களுக்கு வந்து போவதும் அதிகரித்துள்ளது நமக்கு பல வகையிலும் நன்மையோடு கூடிய பெருமையே!
உலகளாவிய சுற்றுலா குறியீட்டின்படி இந்தியா 37வது இடத்தில் உள்ளது என ஒரு ஆய்வு தொிவிக்கிறது. சுற்றுலாவானது பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதிலும், வர்த்தகம், வணிகம், பண்டமாற்று முறையை வளா்ப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. அதோடு, உள்ளூா் சமூகங்களின் மேம்பாட்டிற்கும் பொிதும் உதவியாக உள்ளது என்பதும் சிறப்பான விஷயமே!
பல்வேறு அரசுகளும் சுற்றுலா தொடர்பாக பரவலான உதவிகளையும் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது! ஆக, நேரம் கிடைக்கும்போது நமது சக்திக்கேற்ற வகையில் சுற்றுலா சென்று வருவோம், உலகின் பல விபரங்களையும் புாிந்து கொள்வோம்!