சுற்றுலா செல்வதால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள்!
சுற்றுலா என்பது ஓய்வு, அலுவல் அல்லது பிற நோக்கங்ளுக்காக ஒருவர் தனது வழக்கமான வாழ்விடத்தை விட்டு வேறு ஒரு புதிய இடத்திற்கு குடும்பமாகவோ, அலுவலக நண்பர்களுடன் சென்றோ அங்கு ஊதியம் இல்லாமல் அந்த இடத்தின் கலாசாரம், இயற்கை அழகை ரசிப்பது அல்லது அனுபவங்களைப் பெறுவது ஆகும். இது உடலுக்குப் புத்துணர்ச்சி, மனதுக்கு மகிழ்ச்சியான அனுபவங்களைத் தரும் ஒரு செயலாகும். மேலும், பொருளாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் கலாசார பரிமாற்றத்திற்கும் இது உதவுகிறது.
சுற்றுலா செல்வதால் மன அழுத்தம் மற்றும் சோர்வை குறைக்க உதவுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். விடுமுறை எடுத்து சுற்றுலா சென்று வருவதால் நேர்மறையான உணர்ச்சி நிலைகளை மனதில் ஏற்படுத்தும். வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று வருவதால் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் என ஆய்வில் கண்டறிந்து உள்ளனர்.
சுற்றுலாவில் ஒவ்வொரு இடங்களாக நாம் பார்க்கப் பார்க்க மனத்தை மகிழ்வித்து உடலை சுறுசுறுப்பாக இருக்கவும் செய்யும். அதோடு, உடல் ஆரோக்கியமும் நிச்சயமாக கூடும் என்கின்றனர். சுற்றுலா என்பது உலகளாவிய ரீதியில் ஒரு முக்கியமான தொழில் மற்றும் தனி மனிதனின் மகிழ்ச்சிக்கான ஒரு அனுபவம். சுற்றுலாவில் பல வகைகள் உள்ளன. உள்நாட்டு சுற்றுலா, வெளிநாட்டுச் சுற்றுலா, கல்வி சுற்றுலா / மருத்துவ சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா என பல வகைகள் உள்ளன.
சுற்றுலாத்துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பவருக்கும் வாழ்வாதாரத்தை வழங்குகிறது. சுற்றுலா என்பது மக்கள் கலாசாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், உலகத்தைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவும் உதவுகிறது. உலக சுற்றுலா தினம் 1980ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பால் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தத் தேதியை 1970ல் UNWTO சட்டங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாளின் நோக்கம் சர்வதேச சமூகத்திற்கு சுற்றுலாவின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாகக் கொண்டாடும் யோசனையை முன்மொழிந்தவர் நைஜீரிய நாட்டவரான மறைந்த இக்னேஷியஸ் அமடுவா அடிக்பி ஆவார். இறுதியாக 2009ம் ஆண்டு அவரது பங்களிப்புக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டார். உலக சுற்றுலா தினத்தின் நிறம் நீலம். 1970ம் ஆண்டு இதே தேதியில் மெக்ஸிகோ நகரில் நடைபெற்ற ஒரு சிறப்பு மாநாட்டில் இதன் தோற்றம் குறித்து குறிப்பிடப்படுகிறது.
சுற்றுலாவின் தந்தை தாமஸ் குக் ஆவார். இவர் 1841ம் ஆண்டில் இங்கிலாந்தில் முதல் தொகுக்கப்பட்ட சுற்றுலாப் பயணத்தை ஏற்பாடு செய்து நவீன சுற்றுலாவின் தந்தை என்று அறியப்பட்டார். தொழில் முறை சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்த முதல் நபர் இவர்தான். உலக சுற்றுலா தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு சுழற்சி முறையில் நடத்தும். அதன்படி கடந்த 2024ம் ஆண்டு உலக சுற்றுலா தினத்தை சார்ஜா நடத்தியது. சுற்றுலா எளிமையான கலாசாரம், அதிர்ச்சியூட்டும் நிலப்பரப்புகள், நிலையான நடைமுறைகள் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
2025ல் சிறப்பு வாய்ந்த சுற்றுலா நாடுகளாக ஸ்பெயின், ஜப்பான், மொராக்கோ, இலங்கை, மலேசியா போன்ற நாடுகள் உள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான கலாசாரம் இயற்கை மற்றும் சுற்றுலா தளங்களால் சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்க்கின்றன.