அன்னையர் தின சிறப்பு கவிதை: தாயே நீ என்னை!..

mother's love tamil kavithai
mother's day poemcredit AI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on
MM strip
MM strip

தாயே நீ என்னை...

தாயே நீ என்னைத் தனியாக உன் வயிற்றில்

மாயை நிறைந்த இந்த மாவுலகில் சுமந்தபடி

நடக்கப் படுக்க நல்லுணவைச் சாப்பிடவும் முடியாமல்

அடக்கம் நிறைந்தே அத்தனையையும் எனக்காக

துறந்தே வாழ்ந்தவள் நீ! துர்வாச முனிவரைப்போல்

இறப்புக்கும் பயப்படாமல் இனிதாய் எனை ஈன்றவள் நீ!

அடிவயிற்றுப் பாரத்தை அப்படியே குறைத்தாலும்

இடிஉதையை நல்கும்நான் இடுப்பில் சிலகாலம்

வீற்றிருந்து உன்சக்தியை வீணடித்து விளையாட

காற்றும் கண்ணும் என்மேல் கவலையுறப் படாமல்

போற்றியெனைப் பாதுகாத்த புனிதத்தாயே நானுனக்கு

சாற்றிக் கொடுத்ததெல்லாம் சங்கடங்கள்! சங்கடங்கள்!

முதல்குழந்தை நானல்ல முத்தாய்ப்பாய் நீயிருக்க

அதில் மகிழ்ந்து சிரமங்களை அதிரடியாய் நீஏற்க

ஏழாவது இடம் பிடித்து இவ்வுலகில் நான் தோன்ற

பாழாகா உன்வயிற்றில் பத்திரமாய் நீ என்னை

முன்னூறு நாட்கள் முழுதாய்ச் சுமந்து பின்னர்

பன்னூறு நாட்கள் என்னைப் பாரினிலே உயர்த்திட்டாய்!

அடித்த கொட்டங்கள் அவ்வயதில் கொஞ்சமல்ல

படித்த பாடங்களும் பாங்காய் மனக்கூட்டில்

பதிந்து நின்றதனால் பருவத்தை மீறி நான்

அதிர்ந்து அடித்த கூத்தையெல்லாம் அவ்வளவுபேரும் ரசித்து

சின்னப்பிள்ளை என்றே சிறப்பாக ஊர்முழுதும்

செல்லப்பிள்ளை ஆக்கியே சீரடையச் செய்திட்டீர்!

காளையாய்க் கல்லூரி விடுதிக்குச் சென்றபோதும்

மாலைகளில் என்பிள்ளை மகிழ்வுடனே இருப்பானோ?

ஹோம்சிக் வரப்பெற்றுக் குடும்பத்தை எண்ணியே

‘உம்’மென்று ஓரமாய் உட்கார்ந்து அழுவானோ?

சாப்பாட்டை ஒழுங்காகச் சாப்பிட முடியாமல்

கூப்பாடு போடும் மனமுடன் குழைந்தே கிடப்பானோ?

வீட்டிலுள்ள அனைவரிடமும் விடிந்தால் இதனையே

நாட்டமுடன் தினந்தினமும் நன்றாகப் புலம்பிடவே

மாதம் ஒருவரென்று வரையறுத்துக் கொண்டபடி

பாதம் படிந்திடவே கல்லூரி விடுதி வாசலிலே

வந்து நின்று எந்தன் நலம் கண்ட பின்னே

பந்தாய் ஊருக்குப் பறந்தே திரும்பிடுவர்!

அப்பா இறந்தவுடன் அதற்குமேல் படிதாண்டி

எப்போ யார்அழைத்தாலும் எதற்கும் போகாமல்

அஞ்ஞாத வாசத்தில் அணுவளவும் பிசகாமல்

விஞ்ஞான உலகத்தில் வீற்றிருந்த என்தாயே!

இந்தப் பிறவியிலே எல்லா வளத்துடனே

எந்தக் குந்தகமும் எனக்குஏற்படாமல் காத்தவளே!

இறுதி நேரத்தில் எல்லோரும் உடனிருக்க

உறுதியாய் எமனும் உம்மை நெருங்கிவிட

செய்வதறியாமல் திகைத்து யாம் ஓலமிட

பொய்யறியா நீங்கள் போய்விட்டீர் அமைதியுடன்!

அண்ணன் மடியினிலே அன்பாய்ச் சாய்ந்தபடி

கண்ணன் அடிகளிலே சென்று சேர்ந்திட்டீர்!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பிறந்தநாள் பரிசு!
mother's love tamil kavithai

பிறவிகள் பலவும் இவ்வுலகில் உண்டென்றால்

பிறந்திட வேண்டும் நீங்கள் பிறவற்றில் எம்மகளாய்!

கனிவுடனே அன்புடனே காலமறிந்து ஊட்டியதை

இனிதான பிறவிகளில் ஏதுங்குறை வைக்காமல்

உங்களுக்கு நாங்கள் செய்து உள்ளத்தால் திருப்திபெற்று

எங்கள் நன்றியினை இனிதாக முடிக்க வேண்டும்!

logo
Kalki Online
kalkionline.com