-முனைவர் என்.பத்ரி
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு புவி வெப்ப மயமாதலும், ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையுமே முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன. கோடை காலத்தில் வரும் நோய்களும், உடல்நல, மன நலப் பாதிப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சருமப் பிரச்னைகள், உடல் சூட்டால் வரும் உபாதைகள், மஞ்சள் காமாலை போன்ற மக்களின் உயிரைக் குடிக்கும் நோய்களும் கோடையில்தான் அதிகம் வருவதாகக் கூறப்படுகின்றது. இந்த ஆண்டு சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் எனவும் வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலானோர் கோடை வெயிலுக்குப் பயந்து, உச்சி வெயில் நேரங்களில் வெளியில் வருவதே இல்லை. பலர் வேறுவழியின்றி தனது பணி காரணமாக வெளியே வந்துதான் ஆக வேண்டும். அவ்வாறானவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெயில் நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது குடையை எடுத்துச் செல்ல வேண்டும். தலைக்கு தொப்பி அணிந்து செல்லுவது பாதுகாப்பானது. கண்களுக்கு குளிர்க் கண்ணாடியை அணிந்துகொள்ளலாம்.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்தின் அளவு கணிசமாக குறையும். உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு உடலில் களைப்பினை ஏற்படுத்தும். அதிக அளவு நீர் அருந்துவது மிகவும் அவசியம். எப்போது வெளியே சென்றாலும் கைப்பையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் எலுமிச்சை அல்லது சீரகம் கலந்த தண்ணீர் மிகவும் நல்லது.
உடலில் தேவையான நீர்சத்து குறையாமல் இருக்க, பால், தயிர், மோர் போன்ற திரவ உணவு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடல் சூட்டைத் தணிப்பது மட்டுமின்றி, வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகாமல் இருக்கவும் உதவும். நீர்ச்சத்து உள்ள காய்களை உணவுடன் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலின் சூட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை உணவில் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற உணவுகள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
பழச்சாறுகள், இளநீர், கூழ், மோர், வெள்ளரி சாலட், தர்பூசணி சூப், தக்காளி சூப், திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, முலாம் பழம், ஆப்பிள், நுங்கு, கிர்ணி, கொய்யா போன்றவை உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும்.
வெயில் காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் சில உணவுகளின் மூலம் வயிற்றில் சுரக்கும் அமிலம் அதிகமாவதால், செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னையை சரி செய்ய குளிர்ச்சியான உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வது அவசியம்.
பொதுவாக கருப்பு ஆடைகள் வெயிலை உள் இழுக்கும் என்பதால், அவற்றை அணிவதை தவிர்க்கலாம். பருத்தி ஆடைகளுக்கு இயல்பாகவே வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால், மதிய நேரத்தின்போது வெளியே சென்றால் பருத்தி ஆடைகளை உடுத்திச் செல்ல வேண்டும். மேலும், தளர்வான உடைகள் நம் உடலை நல்ல காற்றோட்டத்துடன் வைத்திருக்க உதவும்.
குறைந்தபட்சம் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். இரவு உறங்கப் போவதற்கு முன், குளித்துவிட்டு உறங்கினால் உடல் குளிர்ச்சி அடையும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
சிலருக்கு கோடை வெயிலினால் உடற்சூடு ஏற்பட்டு, வெப்பக் கட்டிகள் ஏற்படலாம். இதனை தவிர்க்க உறங்கும் முன் வெந்தயப் பொடியைத் தலைக்கு தேய்த்துக் கொள்ளலாம். பின்னர் காலை எழுந்தவுடன் குளித்தால் உடற்சூடு நீங்கும்.
நீண்டகாலமாக பயன்படுத்தாமல் இருக்கும், குளிர்சாதனப் பெட்டிகளைத் தூய்மை செய்து, உபயோகிப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் சுவாசக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.
கோடைக்காலத்தில் குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள் அதிகம் விளையாடச் செல்வது வழக்கம். அவர்களுக்கு வியர்வை முடியில் படிந்து பொடுகு, தலை அரிப்பு போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க அவர்களின் தலைமுடியை வெட்டிக் குறைக்கலாம்.
வெயில் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று, அதிக நேரம் வெயிலில் இருப்பதால், நமது உடல் வெப்பம் இயல்பைவிட அதிகரிக்கலாம். காய்ச்சல் ஏற்படலாம். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பினால், மனிதர்கள் அப்படியே மயங்கி சரிந்து விழ நேரிடலாம். இதனால், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம். கவனம் தேவை.
வெயிலின் பாதிப்பின் அறிகுறிகள் நமக்கு தெரிய வந்தவுடன், உடனடியாக, நிழலான பகுதிக்குச் செல்லவேண்டும். வாய்ப்பு இருந்தால் குளிர்சாதனப் பெட்டி இருக்கும் அறைகளுக்கு சென்று, உடலின் வெப்பத்தை இயல்பான நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கலாம். உடலில் தலை, மார்பு, இடுப்பு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பனிக்கட்டி அல்லது குளிர் நீரில் நனைந்த துணியைக்கொண்டு தேய்த்து உடல் சூட்டைத் தணிக்கலாம்.
முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கோடையில் வெயிலின் பாதிப்பு அதிகமாக இருக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட இணைநோய் இருக்கும் நபர்களுக்கு கோடை வெப்பத்தினால் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும். வெயிலின் தாக்கம் உச்சபட்சமாக இருக்கும், பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை அவர்கள் வெளியே செல்லுவதை தவிர்ப்பது நல்லது.
சூரிய வெளிச்சத்தால் ஏற்படும் ஒவ்வாமையைத் தவிர்க்க வேண்டும். தேவை இருந்தால், இயற்கையான ஆயுர்வேத பூச்சுகளை முகத்தில் தடவிக் கொள்ளலாம் மேலும், வைட்டமின் ஏ, சி, இ, டி, பி காம்ப்ளெக்ஸ் உள்ள வைட்டமின் மருந்துகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.
கோடை நம்மால் தவிர்க்க முடியாத இயற்கையின் பருவ காலங்களில் ஒன்று. அதனால், கோடையில் வரும் பிரச்னைகளை மனதில்கொண்டு, அவற்றை வெற்றியுடன் எதிர்கொள்வதில் நாம் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.