

தேசிய கல்வி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 அன்று, சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை இந்திய அரசு கல்வி தினமாக 2008ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அறிவித்தது. இந்த நாள் கல்விக்கான அவரது பங்களிப்பையும் கல்வி துறையின் முக்கியத்துவத்தையும். கொண்டாடுகிறது.
மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1947 ஆகஸ்ட் 15 முதல் 1958 பிப்ரவரி 2 வரை சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். கல்விக்காக அவர் ஆற்றிய பணிகளுக்காகவும் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த அவரது பங்களிப்பிற்காகவும் அவரது பிறந்த நாள் தேசிய கல்வி தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் கட்டடக்கலை மற்றும் கட்டட வரைபடமாக்கல் கல்லூரி நிறுவுவதில் இவரது கருத்தாக்கமே இதற்கு மூல காரணமாகும்.
தேசிய கல்வி தின கொண்டாட்டமானது முதல் முறையாக 2008ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
தேசிய கல்வி தினத்தின் ஊக்கம் அளிக்கும் மேற்கோள்கள் குறித்து இனி காண்போம்.
* உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி - நெல்சன் மண்டேலா
* கல்வியின் வேர்கள் கசப்பானவை. ஆனால், அதன் பழம் இனிப்பானது -அரிஸ்டாட்டில்
* அறிவில் முதலீடு செய்வது சிறந்த வட்டியை கொடுக்கும் - பெஞ்சமின் பிராங்கிளின்
* கல்வி என்பது ஒரு வாளியை நிரப்புவது அல்ல, மாறாக ஒரு நெருப்பை மூட்டுவது - WB யீட்ஸ்
* சுதந்திரத்தின் தங்கக் கதவைத் திறப்பதற்கு கல்வியே திறவுகோல் - ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
* யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகி விடமாட்டார் - கதே
* கற்பது கடினம். ஆனால், அதைவிட கடினம் கற்பதை மறப்பது - ஆவ்பரி
* மாணவர்களை மதிப்பதில்தான் கல்வியின் அவசியம் அடங்கியுள்ளது - எமர்சன்
* பிறவி திறமையை வளர்ப்பதற்காகவே கல்வியறிவு பயன்பட வேண்டும் - பிளேட்டோ
* பொது அறிவு இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத பொது அறிவானது ஆயிரம் மடங்கு - ராபர்ட்கிரீன்
* எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி - ஜிவெனால்
* கல்விக்கூடம் ஒரு தோட்டம்; அதில் மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள் - ஜிக் ஜேக்ளர்
* வாழ்க்கை அனுபவம் இல்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது - பெர்னார்ட் ஷா
* நல்ல கல்வி என்பது உடல், உள்ளம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருமித்து வளர்க்க வேண்டும் - மகாத்மா காந்திஜி
மெளலானா அபுல் கலாம் ஆசாத்திற்கு 1992ம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
கல்வியைப் போற்றுவோம், கல்வியைப் பெறுவோம்!