

துருக்கி நாட்டில் இவரது நினைவு தினத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாலைகளில் செல்கின்றவர்கள் கூட தங்களது வாகனத்தை அப்படியே நிறுத்தி விட்டு எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்துவார்கள். அந்தளவுக்கு அவர் மீது அந்நாட்டு மக்கள் அன்பும் மதிப்பும் கொண்டுள்ளனர். அவர்தான் அந்நாட்டில் ஜனநாயகம் மலரக் காரணமாக இருந்த முஸ்தபா கமால் பாட்சா.
ஒரு காலத்தில் ஐரோப்பா கண்டத்தின் ‘நோயாளி நாடு' என்று அழைக்கப்பட்ட துருக்கி நாட்டை ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே வீறு பெற்ற விடுதலை நாடாக விளங்க வைத்தவர் முஸ்தபா கமால் பாட்சா எனும் முஸ்தபா கெமால் அட்டாதுர்க். 1881ம் ஆண்டு அப்போதைய ஒட்டோமான் பேரரசில் உள்ள சலோனிகாவில் (இப்போது தெசலோனிகி) பிறந்தார். அவரது தந்தை ஒரு சிறு அதிகாரியாகவும் பின்னர் மர வியாபாரியாகவும் இருந்தார். அட்டாதுர்க்கிற்கு 12 வயதாக இருந்தபோது, அவர் ராணுவப் பள்ளிக்கும் பின்னர் இஸ்தான்புல்லில் உள்ள ராணுவ அகாடமிக்கும் அனுப்பப்பட்டு, 1905ல் பட்டம் பெற்றார். பின்னர் ராணுவப் பணியில் படைத் தளபதியாக சேர்ந்தார்.
துருக்கி நாட்டை அப்போது ஆண்டு கொண்டிருந்த சுல்தான் அப்துல் அமீது, ஒரு கொடுங்கோல் மன்னனாக மாறி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, மக்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த சுல்தானுடைய ஆணவ ஆட்சியை அகற்றி புரட்சிகரமான ஓர் ஆட்சியை அமைத்திட அப்போதைய வாலிபர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்த சங்கங்களிலே கமாலும் ஓர் உறுப்பினரானார்.
சுல்தானுக்கு உள்நாட்டு மக்களது எதிர்ப்பு வலுத்தது. கலகங்கள் பரவலாக உருவாகின. அப்போது முஸ்தபா சுல்தானுக்கு ஆதரவாக வந்த பிரிட்டன் படையுடன் போரிட்டு விரட்டியடித்தார். இதனால் துருக்கி சுல்தான் இருந்த இடம் தெரியாமல் எங்கோ தலைமறைவாகினார். ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வெளிநாட்டு படைகள் துருக்கியை கைப்பற்ற வந்தன.
ஓட்டோமான் பேரரசு கூட்டணிப் படைகளிடம் தோல்வியடைந்ததையும் அதன் பிரிவினைக்கான திட்டங்களையும் தொடர்ந்து இவர், துருக்கியின் விடுதலைப் போராக மாறிய துருக்கிய தேசிய இயக்கத்தைத் தொடங்கி வழிநடத்தினார். அங்காராவில் ஒரு இடைக்கால அரசை அமைத்த இவர், நட்பு நாடுகளால் அனுப்பப்பட்ட படைகளைத் தோற்கடித்தார். இவரது வெற்றிகரமான படை நடவடிக்கைகள் நாடு விடுதலை பெறுவதற்கும் துருக்கிக் குடியரசு உருவாவதற்கும் வழிவகுத்தது.
1921ம் ஆண்டில், அங்காராவில் ஒரு தற்காலிக அரசாங்கத்தை நிறுவினார். புதிய பாராளுமன்றத்தை துருக்கி மக்கள் உருவாக்கினார்கள். அதன் தலைவராக முஸ்தபா கமால் ஆக்கப்பட்டார். ஒட்டோமான் சுல்தானகம் முறையாக ஒழிக்கப்பட்டது, 1923ம் ஆண்டில், துருக்கி ஒரு மதச்சார்பற்ற குடியரசாக மாறியது, அதன் தலைவராக முஸ்தாபா இருந்தார்.
முஸ்தபா, மக்களுடைய மன நிலையை உணர்ந்து, சுல்தான் ஆட்சிக்கு ஒரு முடிவுகட்டி, முதன் முதலாகத் துருக்கியில் குடியரசு ஆட்சியை நிலைநிறுத்தினார். அதற்கான சட்ட திட்டங்களையும் உருவாக்கினதுடன் அவரே முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். முஸ்தபா குடியரசுத் தலைவரானதும், நாட்டின் பழைய நிலைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு பல சீர்திருத்தங்களைச் செய்தார்.
முஸ்தபா செய்த சீர்திருத்தங்களை எல்லாம் முஸ்லிம் மதவாதிகள் ஒன்று கூடி எதிர்த்தார்கள். அவர்களது எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், அவர் வெற்றி பெற்று ஆட்சியை நிலைநாட்டினார்.
துருக்கி நாட்டில் பெண்களது வாழ்க்கை படுபயங்கரமாக இருப்பதை முஸ்தபா கண்டார். அடிமைகளாக மதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு, பெண்ணுரிமைச் சுதந்திரங்களை வழங்கினார். அவர் ஆட்சியின்போதுதான் இஸ்லாம் பெண்கள் அணியும் படுதா முறைகளை நீக்கினார். துருக்கி நாட்டுப் பெண்கள் எல்லாம் அவரது ஆட்சிக் காலத்தில் புதுமைப் பெண்களாக வாழ்ந்திட விழிப்புணர்ச்சி பெற்றார்கள்.
துருக்கியில் எண்ணற்ற கல்லூரிகளை ஏற்படுத்தியவர், நாட்டையே பல துறைகளிலும் மாற்றிக் காட்டினார். பல தார திருமண தடைச் சட்டம் கொண்டு வந்தார். வணிகம், தொழில் துறை வளர்ச்சி என பொருளாதாரத் துறையில் பல திட்டங்கள் மூலம் உயர்த்தினார். விவசாயத் துறையில் கவனம் செலுத்தி, உணவு உற்பத்திக்கு முதலிடம் கொடுத்தார். சகல துறையிலும் துருக்கியை வளப்படுத்த அயராது உழைத்தார். இதனால் இவர் துருக்கியர்களின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
துருக்கியை நவீனமயமாக்க புரட்சிகரமான சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தத் திட்டத்தை அவர் தொடங்கினார். இந்த சீர்திருத்தங்களில் பெண்களின் விடுதலை, அனைத்து இஸ்லாமிய நிறுவனங்களையும் ஒழித்தல் மற்றும் மேற்கத்திய சட்டக் குறியீடுகள், உடை, நாட்காட்டி மற்றும் எழுத்துக்களை அறிமுகப்படுத்துதல், அரபு எழுத்துக்களை லத்தீன் எழுத்துக்களால் மாற்றுதல் ஆகியவை அடங்கும். வெளிநாட்டில் அவர் நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றி, துருக்கியின் அண்டை நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தினார்.
1935ம் ஆண்டு, துருக்கியில் குடும்பப் பெயர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அவருக்கு, 'துருக்கியர்களின் தந்தை' என்று பொருள்படும் அட்டாடர்க் என்ற பெயர் வழங்கப்பட்டது. அவர் நவம்பர் 10, 1938 அன்று காலமானார்.