ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக சத்தான உணவின் முக்கியத்துவம் பற்றியும், ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்கவும், சமச்சீர் உணவை ஊக்குவிக்கவும் இந்தியாவில் தேசிய ஊட்டச்சத்து வாரம் தொடங்கப்பட்டது.
தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் வரலாறு: 1973ம் ஆண்டு அமெரிக்கன் டயட்டிக்ஸ் அசோசியேஷன் தேசிய ஊட்டச்சத்து வாரத்தை தொடங்கியது. சமச்சீர் உணவின் நன்மைகள் மற்றும் மோசமான உணவின் அபாயங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஆனால். படிப்படியாக தேசிய ஊட்டச்சத்து வாரம் ஒரு வாரத்திற்கு பதில் மாதம் முழுவதும் கொண்டாடத் தொடங்கியது. இந்தியாவில் 1982ம் ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week) செப்டம்பர் 1 முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து வாரத்தின் முக்கியத்துவம்: ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மக்களுக்கு எடுத்துரைக்கவும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அது தொடர்பான உடல்நலப் பிரச்னைகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், நோய்களைத் தடுப்பதற்கும், சிறந்த ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை தேர்வு செய்ய தனி நபர்களை ஊக்குவிக்கவும், 1982 முதல் ஒவ்வொரு வருடமும் ஒரு சிறப்பு கருப்பொருளில் கொண்டாடப்படும். இந்த ஆண்டின் கருப்பொருள், 'அனைவருக்கும் சத்தான உணவு' என்பதாகும். இதன் நோக்கம் சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வதில் மக்களின் கவனத்தை செலுத்த ஊக்குவிப்பதாகும்.
'அனைவருக்கும் சத்தான உணவு' என்பது:
* உடல் எடையை கட்டுக்குள் வைப்பதுடன் இதயக் கோளாறு, புற்று நோய், நீரிழிவு போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சத்தான உணவு மிகவும் அவசியம்.
* பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்புகள், கொட்டைகள், விதைகள், கடல் உணவுகள், பால் மற்றும் பால் பொருட்கள் என பல வகையான உடம்புக்கு தேவையான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* ஆரோக்கியமான உணவு என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் உணவு முறையாகும். திரவம், புரதம் போன்ற மேக்ரோநியூட்ரியன்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு: ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளால் ஈர்க்கப்படும் குழந்தைகளுக்கு வண்ணமயமான காய்கறிகளை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவின் தோற்றத்தை அழகு படுத்துவதுடன், அவர்கள் சத்தான உணவை எடுத்துக் கொள்ளவும் வழி வகுக்கலாம்.
டீன்ஏஜ் பருவ குழந்தைகளுக்கு: புரதங்கள், இரும்பு சத்து, தாதுக்கள் நிறைந்த முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் என உணவில் சேர்க்க அவர்களுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதுடன் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
இளைஞர்களுக்கு: இளைஞர்களுக்கான ஊட்டச்சத்தை உணவிலிருந்து பெற வேண்டியது அவசியம். ஆரோக்கியமற்ற துரித உணவுகளை புறக்கணிக்கவும், புரதங்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவும் வேண்டும்.
நடுத்தர வயதினர்களுக்கு: இந்த வயதில் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தால் ஆரோக்கியத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் கொழுப்பு நிறைந்த வறுத்த உணவுகளை தவிர்ப்பதுடன் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதுமையில்: முதுமையில் முறையற்ற உணவுப் பழக்கம் இருந்தால் நோய்களை உண்டுபண்ணும். முதுமையில் ஜீரண சக்தி குறைவதால் கடினமான உணவுகளை ஒதுக்கி எளிதில் ஜீரணிக்க கூடிய ஆவியில் வெந்த, அதிக எண்ணெய் சேர்க்காத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.