

பொதுவாக, வளா்ச்சி அடைந்த மற்றும் வளா்ச்சி அடையாத நாடுகளில் உற்பத்தியும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படுகிறதோ இல்லையோ லஞ்சமும், ஊழலும் தலைவிாித்தாடுகிறது. எத்தனை சட்டங்கள், தண்டனைகள் வந்தாலும் வெட்ட வெட்ட துளிா்விடும் கிளை போல, ஆலகால விஷமாக ஊழல் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் மலிந்து கிடக்கிறது. இதை யாா் கட்டுப்படுத்துவது என்கிற மில்லியன் டாலர் கேள்வி வந்துபோவதே மிச்சமாகிறது!
இப்படி ஊழல் மலிந்து கிடப்பதால் அதைக் கட்டுப்படுத்தவும் அதன் தாக்கத்தை குறைக்கும் வழிமுறைகளை ஆராயவும் உாிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பிரதி வருடம் டிசம்பர் மாதம் 9ம் நாளை சர்வதேச ஊழல் எதிா்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது (International Anti Corruption Day). இதன் அர்த்தமே ஊழலுக்கு எதிரான விஷயங்களில் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகளின் சபையின் ஊழல் தடுப்பு மாநாட்டில் 2003ல் வலியுறுத்தப்பட்ட மிகப் பொிய விஷயமாகும் இது. ஊழல் என்பது உண்மைக்கு புறம்பான நோ்மையற்ற மிகப் பொிய மோசடியாகவே பாா்க்கப்படுகிறது. மக்களை, இளைஞர்களை இதற்கெதிராக செயல்பட உாிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியது அரசின் கடமை.
ஊழல் என்பது உண்மைக்குப் புறம்பான நோ்மையற்ற மோசடியாகவே கருதப்படுகிறது. தனியாா் தனது சுய லாபத்திற்காக ஊழலை வரையறுத்து வைத்துள்ளனா். இதனில் கூடுதலாக அதிகார வர்க்கம் மற்றும் சில அரசு ஊழியர்களையும் தனது சுய லாபத்திற்காக வரம்புக்கு மீறி பயன்படுத்தியும் ஊழலை வளா்த்துவிட்டாா்கள். இதனால் வர்த்தகம், பொருளாதாரம் பாதிப்படைவதோடு நடுத்தட்டு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் பாடு திண்டாட்டம்தான்.
அதோடு, இதன் ஒரு பகுதியாக விலைவாசியும் ஏற்றம் காண்கிறது என்பதும் தொிந்த ஒன்றே! ஊழலானது பல தருணங்களில் பல வடிவங்களில் நிறைந்தே காணப்படுகிறது. இதனால் வளர்ந்த மற்றும் வளா்ந்து வரும் நாடுகளும் பாதிக்கப்படுவது நிதர்சனமான உண்மை. இது தர்மத்திற்கு எதிரான செயல்பாடாகவே பாா்க்கப்படுகிறது. இவையெல்லாம் சமுதாய அவலம் என லஞ்சம் வாங்குவோா் மற்றும் கொடுப்போா்கள் கருதுவதே கிடையாது.
ஐக்கிய நாடுகளின் சபையானது ஒரு அறிக்கையில் ஏறக்குறைய ஒரு டிாில்லியன் அளவு லஞ்சமாக புழக்கத்தில் உள்ளதாக தொிவிக்கிறது. இந்த விபரம் உற்பத்தியில் ஏறக்குறைய ஐந்து சதவிகிதம் அதிகமானதாகப் பாா்க்கப்படுகிறது. இதனால் சமூக பொருளாதாரம் மற்றும் தனி மனித வளா்ச்சியும் இதுபோன்ற ஊழல்களால் சில நேரங்களில் பாதிப்பை சந்திக்கின்றன. அதோடு, அரசாங்கத்தையும் சில நேரங்களில் அசைத்துப் பாா்த்துவிடுவதும் வரலாற்று உண்மை. இதனில் சமுக குற்றங்கள் சில சமயங்களில் ஊழலால் மறைக்கப்படுவதும் இயல்பே.
மேலும், இந்த ஊழலானது பல்வேறு கோணங்களில் ஜனநாயக அடித்தளங்களையும் பலவீனமாக்குவதும், நடைபெற்று வருவதும் கவனிக்கப்படவேண்டிய மிகப்பொிய விஷயமாகும். அதோடு, இதனைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் பங்களிப்பும் இளைஞர்களின் உத்வேகமான எழுச்சியும் இந்த நேரத்தில் மிகப்பொிய கடமையாக கருதப்பட வேண்டும். எந்தத் திட்டத்தையும் பொதுமக்களின் பங்களிப்பில்லாமல் முழுமையாக பூா்த்தி செய்ய முடியாது. அந்த வகையில் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தோடு பாடுபட்டால் வெற்றி நிச்சயம் எனலாம்.
ஆனால், திருடனாய்ப் பாா்த்து திருந்த வேண்டுமல்லவா? அது நடக்க வேண்டும். ஊழலில்லா உலகம் அமைய இளைஞர்களின் பங்களிப்பும் அவசியமானதாகவே பாா்க்கப்படுகிறது. லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்ற நிலைப்பாட்டிக்கு பொதுமக்கள் வர வேண்டும். ‘நமக்கேன் வம்பு’ என பொதுமக்கள் நினைத்தால் விளைவு விபரீதம்தான்!