ஏன் நிதி ஆண்டும், நாட்காட்டி ஆண்டும் ஒன்றாக இருப்பதில்லை?

Fiscal year Vs Calendar Year
Fiscal year Vs Calendar Year

இந்தியாவில் நிதி ஆண்டு 2023-2024 முடிந்து நிதி ஆண்டு 2024-2025 தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அடுத்த வருடம் 31ஆம் தேதி வரை நிதி ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. இதை பட்ஜெட் ஆண்டு என்றும் குறிப்பிடுவதுண்டு. நிதி ஆண்டு என்பது அரசு, வணிகம் மற்றும் பிற அமைப்புகள் தங்களுடைய வருடாந்திர வரவு மற்றும் செலவு விவரங்களைக் கணக்கீடு செய்வதற்கு பயன்படுத்தும் கால கட்டம். வருமான வரி செலுத்துவதற்கும், நிதி ஆண்டின் வருவாய் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிப்ரவரி மாதம் அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு வருமான வரி, சுங்க வரி, வணிக வரிகள் அடுத்த நிதி ஆண்டு முதல் அமுலுக்கு வருகின்றன.

ஏன், நிதி ஆண்டும், நாட்காட்டி ஆண்டும் ஒன்றாக இருப்பதில்லை?

இந்திய பொருளாதாரத்தை விவசாயம் சார்ந்த பொருளாதாரம் என்பார்கள். இந்தியாவின் முக்கியமான பயிர்கள் இரண்டு, காரீஃப் பயிர் மற்றும் ராபி பயிர். காரீஃப் பயிர்களை பருவகாலப் பயிர்கள் அல்லது இலையுதிர்காலப் பயிர்கள் என்றும் சொல்வார்கள். இந்தப் பருவத்தையே காரீஃப் பருவம் என்று சொல்வதுண்டு. பிராந்தியங்களின் அடிப்படையில் மே மாதம் தொடங்கி ஜனவரியில் இந்தப் பருவம் முடிவடைகிறது. அரிசி, மக்காச் சோளம், பல வகையான பழங்கள், காய்கறிகள் காரீஃப் பயிர்கள்.

மற்றொன்று ராபி பயிர்கள். குளிர்காலத்தில் விதைக்கப்பட்டு, வசந்த காலத்தில் அறுவடை செய்யப்படுகிறது. ராபியில் முக்கியமான பயிர் வகை கோதுமை. இதைத்தவிர கோடை காலத்தில் அறுவடை செய்யும் ஜைட் பயிர் வகைகளும் உண்டு. ஆகவே, பயிரிடும் காலம் அறுவடை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிதி ஆண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் நிதி ஆண்டு பிரிட்டிஷ் அரசால் 1867ஆம் வருடம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னால் மே 1 முதல் ஏப்ரல் 30 வரை நிதி ஆண்டாக இருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னர் 1984 ஆம் வருடம் எல்.கே.ஜா. குழுமம், ஜனவரி 1 முதல் 31 டிசம்பர் வரை நிதி ஆண்டாக மாற்ற பரிந்துரை செய்தது. ஆனால் நிதி ஆண்டை மாற்றுவதால் ஏற்படும் சிக்கல்களும், குழப்பங்களையும் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்படவில்லை. நிதி ஆயோக் கமிட்டி ஜுலை 2016 ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், நடப்பு ஐந்தாண்டுத் திட்டம் முடிந்த பிறகு, நிதி ஆண்டை மாற்ற பரிந்துரை செய்தது.

மத்திய பிரதேச அரசு, மே 4ஆம் தேதி 2017, அன்று அரசின் நிதியாண்டை ஜனவரி – டிசம்பர் என்று மாற்றப்போவதாக அறிவித்தது. இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த முதல் மாநிலம் என்ற பெயரைப் பெற்றது. ஆனால், இதனால் நிறைய குழப்பங்கள், கணக்கிடுதலில் பிழைகள் ஏற்பட, இந்த முயற்சியைக் கைவிட்டது.

இந்தியாவைப் போலவே ஏப்ரல்-மார்ச் நிதியாண்டு என்பதை பல நாடுகள் பின்பற்றுகின்றன. அவை ஹாங்காங்க், மியான்மார், சிங்கப்பூர், கனடா, ஜப்பான், கிரேட் பிரிட்டன். இவற்றில் கனடா, சிங்கப்பூர், ஜப்பான் தனிநபர் வருமான வரிக்கு ஜனவரி-டிசம்பர் நிதி ஆண்டாக ஏற்றுக் கொண்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
மாங்காய் சீசனில் இந்த அற்புதமான 4 மாங்காய் ரெசிபிஸ் ட்ரை பண்ணுங்க!
Fiscal year Vs Calendar Year

முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் நாட்காட்டி ஆண்டை நிதி ஆண்டாக பின்பற்றும் நாடுகள். முக்கியமான நாடுகள் சீனா, ஆஸ்திரியா, ப்ரேசில், பிரான்ஸ், ஸ்வீடன், இத்தாலி, ரஷ்யா.

ஜூலை-ஜூனை நிதி ஆண்டாக கொண்டுள்ள நாடுகள் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நியூசிலாந்த், எகிப்த். இதில் நியூசிலாந்தில் தனி நபர் வருமான வரிக்கான நிதி ஆண்டு ஏப்ரல்-மார்ச்.

அமெரிக்காவில் மத்திய அரசின் நிதி ஆண்டு அக்டோபர்-செப்டம்பர். 50 மாநில அரசுகளில் 46 மாநிலங்களில் நிதி ஆண்டு ஜூலை-ஜூன். இரண்டு மாநிலங்களில் அக்டோபர்-செப்டம்பர், ஒரு மாநிலத்தில் ஏப்ரல்-மார்ச். மற்றொன்றில் செப்டம்பர்-ஆகஸ்ட். தாய்லாந்தின் நிதி ஆண்டு அக்டோபர்-செப்டம்பர். ஒரு சில நாடுகளில், தனியார் நிறுவனங்கள், அரசின் அனுமதியுடன், அவர்கள் வசதிற்கேற்ப நிதி ஆண்டை முடிவு செய்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com