World Biofuel Day - எரிபொருள் தேவையை சமாளிக்குமா உயிரி எரிபொருள்?
எரிபொருள் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உயிரி எரிபொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் 2015 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலக உயிரி எரிபொருள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாம் அன்றாட வாழ்வில் எரிபொருளாக பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல், நிலக்கரி இவையெல்லாம் புதைவடிவ எரிபொருள்கள் ஆகும். அதாவது கடந்த பல ஆண்டுகளாக பூமிக்கு அடியில் இறந்து போன விலங்குகளின் உடல்கள் மற்றும் தாவரங்களின் கழிவுகள் மக்கி அவற்றில் இருந்து சுரந்து வெளியேறும் ஒரு வகை திரவம் தான் நம்முடைய தற்போதைய பழக்கத்தில் உள்ள பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்கள். இத்தகைய எரிபொருட்களை ஒரு முறை பயன்படுத்தி விட்டால் மீண்டும் புதுப்பிக்க முடியாது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையாலும், பல ஆண்டுகளாக நாம் புதைப்படிம எரிபொருட்களை பயன்படுத்தி விட்டதாலும் அதன் அளவு வெகு விரைவாக குறைந்து வருகிறது. அதே சமயம் நமக்கு தேவைப்படும் எரிபொருளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சனைகளை சமாளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட புது வடிவம் தான் உயிரி எரிபொருள்கள்.
உயிரி எரிபொருள்களின் வகைகள் :
பயோ எத்தனால் :
எத்தனால் என்பது ஆல்கஹாலில் இருந்து பெறப்பட்ட ஒரு கரிம ரசாயன கலவை ஆகும்.
பயோடீசல் :
இது உண்ணக்கூடிய தாவர எண்ணெய், அமில எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்பு இவற்றினை அடிப்படையாகக் கொண்டு பெறப்படும் டீசல்.
பயோ சி என் ஜி :
வாயு வடிவத்தில் கிடைக்கும் பயோ சிஎன்ஜி யின் மூலப் பொருட்களாக விலங்குகளின் சாணம், உணவு கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. பண்ணையில் உள்ள கால்நடைகளின் சாணம் மற்றும் விவசாய கழிவுகளை பயன்படுத்தி இத்தகைய சி என் ஜி வாயுவை பெறலாம்.
உயிரி எரிபொருட்களை எவ்வாறு பெறலாம்?
பூமிக்கு மேல் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளிடம் உள்ள ஹைட்ரோ கார்பன் மூலக்கூறிலிருந்து உயிரி எரிபொருட்களை பெறலாம்.
கரும்பு, சக்கரைவள்ளிக்கிழங்கு, சோளம், மரவள்ளி கிழங்கு போன்ற மாவு சத்து மிகுந்த பொருள்கள், மரத்தின் கழிவுகள், காடுகளின் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளில் இருந்து கூட உயிரி எரிபொருளான எத்தனாலை நம்மால் பெற முடியும்.
கிழங்குகளில் இருக்கும் மாவு பொருட்களை எடுத்து அதனை நொதிக்க வைப்பதன் மூலமும், கரும்பிலிருந்து சாறை எடுத்து அதனை நொதிக்க வைத்தும் எத்தனாலை பெற முடியும். மேலும் அதிக ஒட்டும் தன்மை உடைய சில தாவரங்களின் எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு அதனை வெப்பப்படுத்தி அதன் அடர்வை குறைத்து நேரடியாக டீசல் இயந்திரங்களில் பயன்படுத்த முடியும்.
இத்தகைய உயிரி எரிபொருளானது பெட்ரோலுக்கு இருக்கக்கூடிய எரிசக்தி தன்மையில் 90 சதவீத அளவிற்கு நிகராக உள்ளது.
உயிரி எரி பொருள்களை பயன்படுத்துவதால் பெறப்படும் நன்மைகள் :
நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று எரிபொருட்களாக உயிர் எரிபொருள்கள் பயன்படுகின்றன.
உயிரி எரிபொருள் என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள். குறைவான கார்பனை வெளியேற்றுகிறது.
மேலும் உயிரி எரிபொருட்களை புதுப்பிக்கத்தக்க உயிர் வளங்கள் மூலம் உருவாக்க முடியும். (எ.கா. தாவரங்கள், விலங்குகளின் சாணம்).
உயிரி எரிபொருட்களை நாமே உற்பத்தி செய்து கொள்வதன் மூலம் நாம் கச்சா எண்ணையை சார்ந்து இருப்பதை குறைக்க முடியும்.
உயிரி எரிபொருள்களில் கந்தகம் இல்லாததால் எரியும்போது குறைந்த அளவிலான நச்சுப் பொருட்களையே வெளியேற்றுகிறது.
உயிரி எரிபொருட்களை உருவாக்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்:
பொதுவாகவே நம்முடைய இயற்கை அமைப்பு நான்கில் ஒரு பங்கு தான் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது இத்தகைய உயிர் எரிபொருட்களை அதிகமாக உற்பத்தி செய்ய தாவரங்களை பயிரிடும்போது, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான நிலங்களின் பயன்பாடு குறைய கூடும் என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட கூடும் என்றும், இதற்கான தண்ணீர் தேவை அதிகம் என்பதும் சூழலியலாளர்களின் கருத்தாக உள்ளது.
உயிரி எரிபொருள் நுகர்வில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளது.
உலகில் அதிக அளவிலான ஆற்றலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எரிபொருளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசின் சார்பில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில்தான் முதன் முதலில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்தால் எரிபொருள் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உயிரி எரிபொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் 2015 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலக உயிரி எரிபொருள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப நல்ல ஒரு நிரந்தர தீர்வைத் தேடிக் கொள்வது மனிதர்களுக்கு மிகப்பெரிய சவாலான செயல் மட்டுமல்ல, அது கட்டாயமும் கூட!