உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் – 12 ஜூன்! குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பது எங்கே?

World Child Labor Day
World Child Labor Day

- மரிய சாரா

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் 2002-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் நியாயமான தொழிலாளர் அமைப்பு (ILO) மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தின் முக்கியத்துவம் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

வரலாறு:

இன்றைய உலகில் குழந்தை தொழிலாளர்கள் முறை என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. முதன் முதலில், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டம் 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் நிகழ்ந்தது. 1833-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் குழந்தைகளை தொழிலாளர்களாக வேலை செய்வதை கட்டுப்படுத்தும் சட்டங்களை கொண்டுவந்தது. 20ஆம் நூற்றாண்டில் இந்த பிரச்சனை உலகளாவிய கவனத்தை பெற்றது. 1919ல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தொழிலாளர் அமைப்பு (ILO) குழந்தை தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான முறைமைகளை உருவாக்கியது.

புள்ளிவிவரங்கள்:

2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலக அளவில் 5-17 வயதுக்குட்பட்ட சுமார் 160 மில்லியன் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக இருந்தநிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் 8.4 மில்லியன்  அதிகரித்துள்ளது. குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் விவசாயத் துறையில் தான் 70% வரை அதிகமாக உள்ளது. அதிக அளவிலான எண்ணிக்கை என்பது ஆசியா மற்றும் பசிபிக், அப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பகுதிகளில் தான்.

குழந்தை தொழிலாளர் உருவாக்கப்படுவதற்கான காரணங்கள்:

குழந்தைகள் வேலை செய்ய முக்கிய காரணங்களில் ஒன்று வறுமை. பல குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் குழந்தைகளை அன்றாட கூலி வேலைக்கு அனுப்புகின்றனர். அதே சமயம், கல்வி வசதி இல்லாமை மற்றும் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வேலை செய்ய அனுப்பப்படுகின்றனர்.

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் முக்கியத்துவம்:

இந்த தினம் குழந்தை தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அரசாங்கங்கள், மனிதஉரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இணைந்து குழந்தை தொழிலாளர்களின் அவலத்தை முடிவுக்கு கொண்டு வரவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், எதிர்காலத்தை சிறப்பாக மாற்றவும் பணியாற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
’விழி’த்திடுவோம்!
World Child Labor Day

உலகம் முழுவதும் நடந்துவரும் முயற்சிகள்:

விவசாயம், சுரங்கப்பணி, தொழிற்சாலைப் பணிகள் போன்றவைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், கல்வியை ஊக்குவிக்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சிகளில் சில முக்கியமானவைகள்:

  1. உலக கல்வி திட்டம்

  2. சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமைப்பு (IPEC)

  3. குழந்தை தொழிலாளர்களின் பங்கேற்பை தடுக்கும் நோக்கத்துடன் செயல்படும் ILO அமைப்பு.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நாம் என்ன செய்யலாம்?:

  1. குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்குதல்.

  2. குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல்.

  3. குழந்தைகள் பணி செய்யும் நிறுவனங்களை புறக்கணித்தல்.

  4. குழந்தை தொழிலாளர்களின் அவலத்தைப் பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் நம் ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் கல்வி கற்கவும், சுதந்திரமாக வளரவும் உரிமை உள்ளதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துகிறது. குழந்தைகள் வேலை செய்யாமல், அவர்களின் வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்கும் வகையில் நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com