ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் (Conjoined Twins) நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தவும், பஹ்ரைன், மொராக்கோ, கத்தார் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்த முயற்சியை சவூதி அரேபியா முன்மொழிந்தது. இதனை ஏற்றுக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, 2024 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 24 ஆம் நாளில் 'உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் நாள்' கொண்ட்டாடப்படும் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 24) முதலாவது ‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் நாள்’ (World Conjoined Twins Day) கொண்டாடப்படுகிறது.
ஒட்டிப் பிறந்த இரட்டையர் (Conjoined Twins) என்போர் கருவிலேயே உடல்கள் ஒட்டிப் பிறந்த இரட்டையர் ஆவர். இது ஒரு அரிய நிகழ்வு ஆகும். 50,000 முதல் 1,00,000 வரையிலான குழந்தைப் பிறப்புகளில் ஒரு பிறப்பில் மட்டுமே இவ்வாறு நிகழும் வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இத்தகைய பிறப்புகளின் எண்ணிக்கை சற்றுக் கூடுதலாகக் காணப்படுகிறது. இவ்வாறு பிறப்போரில் கிட்டத்தட்ட பாதி பேர் இறந்து பிறக்கிறார்கள். ஒரு சிலர் உயிரோடு பிறந்தாலும் தொடர்ந்து வாழ்வதற்கு உரிய உடல்நிலையில் இருப்பதில்லை. ஒட்டிப் பிறந்த இரட்டையரின் ஒட்டு மொத்தப் பிழைத்திருக்கும் விகிதம் 25 % என்றே இருக்கிறது. இந்நிலை 3:1 என்ற விகிதத்தில் பெண்களிலேயே கூடுதலாகக் காணப்படுகிறது.
ஒட்டிப் பிறந்த இரட்டையர் உருவாகும் விதம் குறித்து ஒன்றுக்கு ஒன்று முரணான இரண்டு தேற்றங்கள் உள்ளன. காலத்தால் முந்திய தேற்றம், கருவுற்ற முட்டை பகுதியாக பிளப்பதால் இந்நிலை வரலாம் என்று கருதியது. அண்மைய தேற்றமோ கருவுற்ற முட்டை முற்றிலுமாக பிளந்தாலும், இரட்டையர்களில் உள்ள குருத்தணுக்கள் ஒத்த அணுக்களை நாடிக் கூடுவதால் இரட்டையர்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொள்ளலாம் என்கிறது. இத்தேற்றமே பரவலான ஏற்பு பெற்றுள்ளது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் இருவருக்கும் பொதுவாக ஒரே கரு வெளியுறை, சூல்வித்தகம், பனிக்குடப்பையைக் கொண்டுள்ளார்கள் என்றாலும் ஒற்றைக்கருவணு உடைய ஒட்டிப் பிறக்காத இரட்டையரும் கூட இந்த அமைப்புகளைப் பகிர்ந்து கொள்பவர்கள் தாம் என்பது குறிப்பிடத்தக்கது.
1990 ஆம் ஆண்டு ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பிரிப்பதற்கான இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, சவூதி அரேபியா இத்துறையில் உலகில் முன்னணி வகிக்கக் கூடிய நாடாக இருந்து வருகிறது. சவூதி அரேபியா, 26 நாடுகளைச் சேரந்த 139 இரட்டையர்களை பரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளதோடு 61 ஜோடி இரட்டையர்களை வெற்றிகரமாகப் பிரித்தும் உள்ளது. சவூதி ரோயல் கோர்ட்டின் ஆலோசகராகவும், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSrelief) மேற்பார்வையாளர் ஜெனரலும், புகழ்பெற்ற குழந்தை அறுவை சிகிச்சை நிபுணருமான வைத்தியர் அப்துல்லா அல் ரபீஹ் அவர்களே சவூதி அரேபிய இணைந்த இரட்டையர் திட்டத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
உலக ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் நாளின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தும் வகையில், சவூதி அரேபியா, 2024 ஆண்டு நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 என்று இரு நாட்கள் ரியாத் நகரில் முதல் முறையாகப் பன்னாட்டு ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டில் 'இணைந்த இரட்டையர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களில் பிரிவினையின் பன்முகத் தாக்கத்தை ஆராய்தல்' என்ற தலைப்பில் ஒரு குழுக் கலந்துரையாடல் இடம் பெறுகிறது. இது பிரிவினை அறுவை சிகிச்சையின் உடலியல், உளவியல் மற்றும் சமூக விளைவுகளை ஆராயும் விதத்தலும் அமையும் என்கின்றனர்.
ஒட்டிப் பிறந்த இரட்டையரிலேயே மிகவும் புகழ் பெற்றோர் சாங்கு மற்றும் இங்கு பங்கர் (Chang and Eng Bunker) ஆவர். தற்போது, தாய்லாந்து என்று அறியப்படுகிற சயாமில் பிறந்தவர்கள். பி.தெ. பார்னமின் வட்டரங்குடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்த இவர்கள் சயாமிய இரட்டையர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் இருவரும் உடலின் முண்டப் பகுதியில் உள்ள சதை, குருத்தெலும்பு, ஒன்றிணைந்த கல்லீரல்களால் பிணைக்கப்பட்டிருந்தனர். நவீன மருத்துவ வசதிகள் உள்ள இக்காலத்தில் ஒரு கத்தரிக்கோல் கொண்டே கூட இவர்களைப் பிரித்து இருக்கலாம். நாளடைவில் இவர்கள் பெற்ற புகழாலும் அரிதான உடல் நிலையாலும் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்றாலே சயாமிய இரட்டையர்கள் என்று அழைக்கும் நிலை வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.