
ஒரு நாட்டின் சாதாரண குடிமகன் முதல் நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் வரை யாராக இருந்தாலும் ஒருவரிடம் பணம் கொடுத்து ஒரு பொருளையோ,சேவையையோ தன் சொந்த தேவைக்காக பெறுகின்ற அனைவரும் நுகர்வோர் தான். நுகர்வோர் உரிமை என்பது மனிதரின் அடிப்படை உரிமையாகும். ஒரு நுகர்வோர் என்ற வகையில் நமது கடமைகள் மற்றும் உரிமைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
உரிய விலையை செலுத்திய பிறகும் கூட ஒரு தயாரிப்பு அல்லது சேவை திருப்திகரமாக இல்லாமல் இருந்தாலோ அல்லது அதன் தரம் குறிப்பிட்ட அளவு இல்லாமல் இருந்தாலோ அது பற்றி புகார் கூறி இன்று நிவாரணம் பெறலாம். இதற்கு காரணமாக இருந்தவர் ரால்ஃப் நாடார் எனும் அமெரிக்க வழக்கறிஞர். அவரின் சொந்த அனுபவமே 1962 ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி நுகர்வோருக்கான நான்கு அடிப்படை உரிமைகளை பிரகடனப்படுத்த காரணமாயிற்று. அதன் நினைவாக அந்நாளே உலக நுகர்வோர் தினமாகியது.
1) பொருட்களை தேர்ந்தெடுக்கும் உரிமை
2)பொருட்களின் பயன்பாட்டில் பாதுகாப்பிற்கான உரிமை
3) பொருட்களின் சேவைகள் குறித்த தகவல்களை பெறும் உரிமை.
4) வாடிக்கையாளர் கருத்துக்களை மற்றும் குறைகள் கேட்கப்படுகிற உரிமை.
மார்ச் 15, 1962 அன்று, ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி அமெரிக்க காங்கிரசில் உரையாற்றி நுகர்வோர் உரிமைகள் குறித்து பேசினார். அவரது உரையில் “நுகர்வோர் என்பதற்கான வரையறைக்குள் நாம் அனைவரும் அடங்குவோம். அரசும் தனியாரும் மேற்கொள்ளும் ஒவ்வொரு பொருளாதார முடிவாலும் பாதிக்கப்படுவது நுகர்வோர்தான். ஆனால், நுகர்வோரின் கருத்துகள் பெரும்பாலும் அரசு, தனியார் அமைப்புகள் காதில் வாங்கிக் கொள்வதில்லை” என்று கென்னடி அந்த உரையில் பேசினார். நுகர்வோர் உரிமைகள் குறித்துச் சர்வதேச அளவில் ஒரு அரசுசார் தலைவர் பேசியது அதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
1983 ஆம் ஆண்டில், முதல் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து, ஐக்கிய நாடுகள் சபை இந்த தினக் கொண்டாட்டத்தை பிரபலப்படுத்தியது. ஜான் எஃப் கென்னடி பிரகடனப்படுத்திய அடிப்படை நுகர்வோர் உரிமைகளுடன் மேலும் 4 உரிமைகளை ஐ.நா சபை அறிவித்தது. அவைகள்
1) குறைகள் தீர்க்கப்பட அல்லது நிவாரணம் பெறும் உரிமை.
2) தூய்மையான சுற்றுச்சூழலுக்கான உரிமை
3) அடிப்படைகளுக்கான உரிமை
4) நுகர்வோர் கல்விக்கான உரிமை.
ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அனைத்தும் அந்த நுகர்வோர் உரிமைகளை தங்கள் நாட்டு மக்களுக்கு அளித்து பின்பற்ற துவங்கியது.1986ம் ஆண்டு நுகர்வோர் நலனுக்காக இந்திய பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. நீதிமன்றம் என்றால் மக்கள் தயங்குவார்கள் என்பதற்காக நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் என பெயரிட்டு வழக்கறிஞர்கள் எவரின் உதவியின்றி எந்த விதமான கட்டணமும் இன்றி நுகர்வோர் தங்கள் குறைகளை முறையிட சட்டம் இயற்றப்பட்டது. மாவட்ட, மாநில, தேசிய அளவில் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் அமைக்கப்பட்டன.
நுகர்வோரின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல குறைதீர்க்கும் வழக்கு மன்றம் உள்ளது. நீங்கள் வழக்கு மன்றத்தில் பணம் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இவைகள் தான். எந்தப் பொருட்கள் வாங்கினாலும் அதற்கான பில் வாங்குங்கள். அதில் பொருட்கள் தயாரித்த நாள் மற்றும் காலாவதியாகும் நாள் இருப்பதை உறுதி செய்யுங்கள். பொருளின் எடை சரியாக உள்ளதா என உறுதி செய்யுங்கள்.
வாங்கிய பொருட்கள் அல்லது சேவைகளில் குறைகள் இருந்தால், பொறுப்பானவர்களுக்கு எழுத்து மூலமாக புகார் தெரிவிப்பதோடு அதன் நகலை பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏமாறக்கூடாது, ஏமாற்றக் கூடாது. வாங்கிய பொருட்கள் அல்லது சேவைகள் சரியாக இல்லாவிட்டால் தயங்காமல் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் செல்லுங்கள், அநியாயங்களை தட்டிக்கேட்க தவறினால் அநியாயம் நியாயமாக்கப்பட்டு விடும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15-ம்தேதி நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது. மோசடி, பாகுபாடு மற்றும் பிற இதுபோன்ற நடைமுறைகளுக்கு எதிராக அனைத்து நுகர்வோரின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.