உரிமைகள் என்னென்ன தெரியுமா? இணைய வழி வணிகத்தில் நுகர்வோர் இழப்பீடு பெற முடியுமா?

டிசம்பர் 24: இந்திய நுகர்வோர் உரிமைகள் நாள்!
Indian Consumer Rights Day
Indian Consumer Rights Day
Published on

இந்தியாவில் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. அதனடிப்படையில், இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 24 ஆம் நாளில் தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National Consumer Day) கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் படி, பகுதி 2 (1) (d) பிரிவின் படி யார் காசு கொடுத்து பொருளையோ, சேவையையோ வாங்குகிறார்களோ அவர்கள் நுகர்வோர்கள்.

  • காசு கொடுத்து பொருள் வாங்குகிறவர், நுகர்வோர்.

  • காசு கொடுத்து சேவையை அனுபவிக்கிறவர், நுகர்வோர்.

  • பொருளுக்கு விலை கொடுக்கப்பட்டிருந்தால், பொருளை ஆள்பவர், நுகர்வோர். உதாரணமாக குழந்தைக்கு, பால் பவுடர், தந்தை காசு கொடுத்து வாங்கினாலும், அதை அனுபவிக்கும் குழந்தைதான் நுகர்வோர்.

  • காசு கொடுத்து சேவையை வாங்காவிடினும், காசு கொடுத்தது எவராக இருந்தாலும், சேவையை அனுபவிப்பவர் நுகர்வோர். உதாரணமாக, மகன், மகளுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக, தந்தை பணம் கொடுத்தாலும், மருத்துவச் சிகிச்சை பெற்ற மகன், மகள் இருவரும் நுகர்வோர்களே. சுருங்கச் சொன்னால், பொருள், சேவை இரண்டிற்கும் காசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் படி நுகர்வோருக்கு ஆறு உரிமைகளை வழங்கப்பட்டிருக்கிறது.

  1. பொருட்களை தேர்வு செய்யும் முறை

  2. அனைத்து வகையான அபாயகரமான பொருட்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை

  3. அனைத்து வகையான பொருட்களின் தரம் மற்றும் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்வதற்கான உரிமை

  4. நுகர்வோர் நலன்கள் தொடர்பான அனைத்து முடிவெடுக்கும் நடைமுறைகளிலும் கேட்கப்படும் உரிமை

  5. நுகர்வோர் உரிமைகள் மீறப்படும் போது அதற்கு தீர்வு பெறுவதற்கான உரிமை

  6. நுகர்வோர் கல்வியை நிறைவு செய்வதற்கான உரிமை.

இந்தச் சட்டத்தின் கீழ் நுகர்வோர் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள், புகார்கள் இருந்தால் நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலம் இழப்பீடு பெற முடியும். எனவே, இந்நுகர்வோர் நாளில், அது குறித்த சில முக்கியமான தகவல்களை அறிந்து வைத்திருப்பது நல்லது.

  • பொருட்கள் என்றால், மொத்தமாக அல்லது சில்லறையாக கடைகளில் வாங்கப்படும் நிறைவு செய்யப்படும் பொருட்களின் ஏற்படும் குறைபாடு

  • சேவைகள் என்றால் போக்குவரத்து, மருத்துவம், வங்கி மற்றும் காப்பீடு சேவைகள் போன்று ஒரு தனி நபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ நுகர்வோர் கட்டணம் செலுத்திப் பெறும் சேவைகளைக் குறிப்பது.

  • ஒரு குறை எழுந்து இரண்டு ஆண்டுகள் வரை புகாரினைப் பதிவு செய்யலாம். இரண்டு ஆண்டுகளைக் கடந்த புகார்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.

  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 ன் கீழ் பதிவு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள் 90 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.

  • புகார் பதிவு செய்வதற்கு முன்பாக பாதிக்கப்பட்டவர் எதிர்தரப்புக்கு தங்களுடைய குறைகளையும், அதற்கு அவர்கள் கோரும் தீர்வுகளையும் விவரித்து அறிக்கை (Notice) ஒன்றினை அனுப்ப வேண்டும். நுகர்வோர் ஆணையத்திற்குச் செல்வதற்கு முன்பாக பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு பெறுவதற்கான முன் முயற்சி இது.

இதையும் படியுங்கள்:
உணவு, உடை மற்றும் மளிகைப்பொருட்கள் தொடர்பான நுகர்வோர் உரிமைகளை அறிவோமா?
Indian Consumer Rights Day
  • அந்த அறிக்கைக்குச் சரியான பதில் வரவில்லையென்றால், நுகர்வோர் சட்டத்தின் கீழ் உரிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் போதிய ஆதாரங்களுடன் புகாரினைப் பதிவு செய்யலாம்.

  • ரூ. 1 கோடி வரை இழப்பீடு கோரும் புகார்களை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். ரூ. 1 கோடியிலிருந்து 10 கோடி வரை இழப்பீடு கோரும் புகார்களை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். ரூ. 10 கோடிக்கும் மேல் இழப்பீடு கோரும் புகார்களை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

  • அதிகபட்ச சில்லரை விலை (MRP) குறிப்பிடாமல் பொருட்களை விற்பது, அதிகபட்ச சில்லரை விலைக்கு அதிகமாகப் பொருட்களை விற்பது, குறிப்பிட்ட சேவைகளை சரி வர வழங்காமல் இருப்பது, காப்பீடு நிறுவனங்கள் சரியாக காப்பீடு வழங்காமல் இருப்பது, தனியார் மருத்துவச் சேவைகளில் எழும் குறைகள், வங்கிப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் புகார்கள் எனப் பல தரப்பட்ட புகார்களுக்கு நிவாரணம் பெற முடியும்.

நுகர்வோர் இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள் தொடர்பாக மக்களிடையே போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. எவ்வளவு சிறிய தொகையிலிருந்து பெரிய தொகையாக இருந்தாலும் நுகர்வோர் இழப்பீடு பெற முடியும். உரிய ஆதாரங்களுடன் புகார் செய்தால் நிச்சயம் இழப்பீடு பெற முடியும். புகார் செய்பவரே இதில் தனக்காக வாதாடவும் முடியும். ஆனால், மக்களில் பெரும்பான்மையானவர்கள் இதில் ஈடுபாடு காட்டுவதில்லை. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்குரைஞர்கள் இல்லாமல், நுகர்வோர்களேத் தங்களது குறைகளுக்காக வாதாடி, அதற்கு உரிய இழப்பீடும் பெற்றிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நுகர்வோர் நீதிமன்றங்களை நாடுவதால் என்ன பயன்?
Indian Consumer Rights Day

அண்மைய காலத்தில், இணைய வழி வணிக நடவடிக்கைகளால் பல்வேறு தரப்பினர் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றனர். இணைய வழியிலான வணிகம் மூலம், தாங்கள் பெற்ற பொருட்களில் பல்வேறு குறைபாடுகள் இருப்பினும், அதனைக் கண்டு கொள்ளாமல், தாங்கள் ஏமாந்து விட்டோமென்று நினைத்துப் பேசாமல் இருந்து விடுகின்றனர். இதனால், அவர்கள் தங்களுக்கான நுகர்வோர் உரிமையினை இழந்து விடுகின்றனர். இதற்கான இழப்பீட்டை நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் வழியாகப் பெற முடியும் என்றாலும், நுகர்வோர்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமையால் வணிக நடவடிக்கைகளில் ஏமாற்றும் நிகழ்வுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட அளவிலான குறைதீர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேப் போன்று, தமிழ்நாட்டில் மாநில அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன் கிளை மதுரையிலும் செயல்பட்டு வருகின்றன. தேசிய அளவில் புதுடெல்லியில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
அதீதமாக காஸ்மெடிக் பொருட்களை வாங்கும் நுகர்வோர் கவனத்துக்கு!
Indian Consumer Rights Day

இந்நிலையில், இன்றைய தேசிய நுகர்வோர் நாளில், நுகர்வோர் உரிமைகள் குறித்தும், நுகர்வோருக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு இழப்பீடு பெறுவது குறித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்திட நுகர்வோர் அமைப்புகள் மட்டுமின்றி, சமூக அமைப்புகளும் முன்வர வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com