
உலக மூத்த குடிமக்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் - 21 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மூத்த குடிமக்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்த நாளில் மூத்த குடிமக்கள் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் அவர்களின் அனுபவங்கள் ஏற்கப்பட்டு பாராட்டப்படுகின்றன.
விழிப்புணர்வு
முதியவர்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறிப்பாக வயது தொடர்பான குறைபாடுகள் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.
மூத்தக் குடிமக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதற்கு இந்த தினம் உதவுகிறது.
வரலாறு
இந்த நாள் முதன் முதலில் 1988 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் ஆகஸ்ட் 21ஆம் தேதி தேசிய மூத்த குடிமக்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், 1990 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இந்த நாளை உலக மூத்த குடிமக்கள் தினமாக அறிவித்தது.
இந்த நாளில் மூத்த குடி மக்களுக்கு மரியாதை செலுத்தவும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அவர்களை ஊக்குவித்து மகிழ்ச்சியான சூழலிலும் கவலை இல்லாமல் நிகழ்வுகள் செய்கின்றனர். மூத்த குடிமக்களின் ஆரோக்கியம் , நலனுக்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. முதியோர் இல்லங்களில் அன்றைய தினம் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆடல் பாடலுடன் பேச்சு பாட்டு என நடத்தி சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இன்றைய காலகட்டங்களில் முதியவர்களை பேணிக் காப்பதில் மிகவும் முக்கியமானதாக இருப்பது அவர்களின் மன நலமே.
அவர்களது உடல் நலத்தை அக்கறை காட்டும் முன் அவர்களது மனநலனை அதிக கருத்தில் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் முதியவர்களை சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்பதை அவர்களுக்கு அடிக்கடி நினைவூட்ட வேண்டும். அவர்கள் உடல் நலனை பாதுகாத்துக் கொள்வதில் குடும்ப உறுப்பினர்கள் முக்கிய அக்கறை காட்ட வேண்டும்.
குழந்தைகளை வளர்ப்பதில் வழிகாட்டுவது, வீட்டின் பராமரிப்பில் ஆலோசனை கேட்பது, சொந்த பந்தங்களை கவனித்துக் கொள்வதில் அக்கறையாட்டுவது, சமையல் ஆலோசனை இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நாம் அவர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதனால் அவர்கள் மனதளவில் மிகவும் புத்துணர்ச்சி அடைவார்கள் இன்றைய நாகரிக பழக்க வழக்கங்கள் மாறிவரும் சுற்றுசூழலில் முதியவர்களின் உடல் நிலையை இது இன்னும் மோசம் ஆக்குவது. இதனால் குடும்ப உறுப்பினர்கள் அவர்களிடம் கனிவாக பேசி உற்சாகப் படுத்தலாம். பேரன் பேத்திகள் வெளியில் சென்று வாக்கிங் கூட்டிச் சென்றால் மகிழ்ச்சி அடைவார்கள்.
வயது முதிர்ந்த முதியோர்களை குடும்பத்தில் உள்ளவர்கள் ஒதுக்காமல் அவர்களிடம் தினமும் பேசி அவர்களை ஒரு குழந்தை போல் பொக்கிஷமாக நினைத்து கொண்டாடலாம். இதனால் அவர்கள் மற்றவர்களிடம் இதனை பகிர்ந்து சந்தோஷம் அடைவார்கள்.
நம் பெற்றோர் என்பதையும், நாமும் பின்னாளில் இது மாதிரி முதிர்ந்த நிலை அடைவோம் என்பதை அறிந்து அவர்களை போற்றி துதியுங்கள்...வெறுக்காதீர்கள்.
முதியோரை காப்போம்!
முதியோரை வணங்குவோம் !
இந்த நாளில் அவர்களது அரிய பணியை நினைத்து கொண்டாடுவோம் !
உலக முதியோருக்கு வாழ்த்துக்கள்!