உலகில் சுமாராக 2700 வகையான பாம்புகள் உள்ளன. அதில் தற்போது இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் உயிர்வாழ்கின்றன. இவற்றில், 20 சதவீதத்துக்கும் குறைவான பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை கொண்டவையாக இனங்காணப்பட்டுள்ளன. “பாம்பை கண்டாலே படையே நடுங்கும்..” என்பார்கள். காரணம் பாம்பிடம் விஷத்தன்மையுள்ளது. பாம்பு கடித்தால் இறந்துவிடுவோமோ என்ற பயம் .
பெரும்பாலான நேரங்களில் பாம்புகள் மனித குலத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை. மனித நடமாட்டம் தெரிந்தால் பாம்புகள் அவ்விடத்தை விட்டு விலகத்தான் முயற்சிக்கும். நாம் தவறுதலாக அதனை மிதித்து விட்டால் அவை நம்மைத் தீண்டும். நம் இருப்பிடத்தை சுத்தமாக மற்றும் வெளிச்சமாக வைத்துக் கொண்டால் பாம்புகள் நடமாட்டத்தை தவிர்க்கலாம். வீட்டில் நாய்கள் மற்றும் கினிக்கோழிகளை வளர்த்தால் அவை பாம்புகளின் நடமாட்டத்தை நமக்கு ஒலி எழுப்பி தெரியப்படுத்தும்.
பொதுவாக கோடை காலத்தில் தான் நச்சுப் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி வருகின்றன என்கிறார்கள். பாம்புகள் எப்போதும் சுவர் ஓரங்களில் தான் தென்படும். எனவே பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், சுவர் ஓரங்களில் குழந்தைகள் படிப்பதை தவிர்க்கவும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், வீட்டிலோ அல்லது தொட்டிகளிலோ சில சிறப்பு செடிகளை வளர்த்தால் அந்த வாசனைக்கு பாம்பு காலநிலை மாற்றங்களின்போது வீட்டுக்குள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள். அந்த வகையில், எந்த மாதிரியான செடிகள் வீடுகளில் வளர்ப்பதினால் பாம்புகள் வராமல் தடுக்கலாம் என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்ப்பகந்தா மூலிகை செடி: சர்ப்பகந்தா மூலிகை செடியின் வாசனை மிகவும் வித்தியசமானவையாக இருக்கும். பாம்புகள் அதனை நுகர ஆரம்பித்தவுடன் ஓடிவிடுகிறது. இயற்கையான பண்புகள் நிறைந்த இந்த செடியின் வேர்கள் பார்ப்பதற்கு மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். இலைகள் பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் பாம்புகளால் செடி பக்கத்தில் கூட வர முடியாது.
பாம்பு செடிகளின் மகிமை: ஆப்பிரிக்காவின் பழங்காலக் கதைகளில், பாம்புச் செடி பாம்பு மற்றும் தீய சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு என கருதப்பட்டதுடன், வீட்டில் அமைதி மற்றும் நன்மை பெருக்கும் ஒரு சக்திவாய்ந்த செடியாகக் காணப்பட்டது. காற்றை சுத்திகரிக்கும் சக்தி பாம்புச் செடியின் முக்கியமான தன்மை. அதிக நன்மை தரும் பாம்புச் செடி வளர்ப்பதற்கு அதிக நேரம், அதிக வேலை, அதிக அனுபவம் எதுவும் தேவையில்லை. குறைந்த பராமரிப்பே போதும். இது காற்றை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. பாம்பு போன்ற விஷஜந்துகளையும் அண்ட விடாது.
சாமந்திப்பூ: வீடுகளில் மணம் மற்றும் அழகை அதிகரிக்க சாமந்தி பூக்களை நடுவார்கள். ஆனால் இதிலிருந்து வரும் வாசனையை பாம்புகளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அத்தகைய சூழ்நிலையில், பாம்புகள் அதன் நறுமணத்தை நுகர முடியாமல் ஓடி விடுகிறது.
புடலங்காய் செடி: புடலங்காய் செடியின் வாசனையை பாம்புகள் நுகர்ந்தவுடன் தங்கள் பாதையை மாற்றிக் கொள்ளும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் இந்த செடியை வீட்டு தோட்டம் மற்றும் முற்றம், பால்கனி அல்லது பிரதான வாயிலிலும் நடலாம்.
முள் கற்றாழை: பொதுவாக கற்றாழை செடிகளுக்கு காற்றை சுத்தப் படுத்துவதுடன், வீட்டில் விஷஜந்துகளையும் வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் உண்டு. அதிலும் குறிப்பாக முள் கற்றாழை செடி. பொதுவாக பாலைவனங்களில் காணப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, இது ஒரு அலங்கார செடியாகவே பார்க்கப்படுகிறது. முள் தன்மை காரணமாக, பாம்புகள் அதைச் சுற்றித் திரிவதை விரும்பாது. வீட்டு தோட்டங்களில் இதனை வளர்ப்பதால் பாம்பு அப்பக்கமே வராது என்கிறார்கள்.