
தற்போது உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகம் பெருகிவரும் நிலையில் உடற்பயிற்சிகளும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான இடத்தை பெறுகிறது யோகா ஆசனங்கள். வருடந்தோறும் ஒவ்வொரு கருப்பொருளுடன் யோகா தினத்தை ஜூன் 21 அன்று கொண்டாடி வருகிறோம். இந்த வருடம் கருப்பொருள் மற்றும் அதன் விளக்கங்களை இங்கு காண்போம்.
5000 வருட பாரம்பரிய மிக்க நமது இந்தியக் கலைகளுள் ஒன்றான யோகா, ஒருவரின் மன நலனுக்கு மட்டுமல்ல, அன்றாடம் உடல் இயங்கத் தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அத்துடன் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைத்து ஞானத்தை நோக்கி நகரும் ஒரு வழியாகவும் கண்டறியப்பட்டது.
இதன் சிறப்பைப் புரிந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச் சபையில் சர்வதேச யோகா தின யோசனையை செப்டம்பர் 2014ல் முதன்முதலில் முன்மொழிந்தார்.
பின்னர் அதிக சூரிய ஒளி கிடைக்கும் கோடைகால சங்கராந்தி தினமான ஜூன் 21ஐ தேர்வு செய்து சர்வதேச யோகா தினமாகக் கொண்டாட ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டு அதற்கு 177 நாடுகள் ஆதரவைப் பெற்றது. அதன்படி முதல் சர்வதேச யோகா தினம் ஜூன் 21, 2015 அன்று புதுதில்லியில் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினத்தின் இந்த வருட (2025) கருப்பொருளாக ஐ.நா சபையால் நிர்ணயிக்கப்பட்ட ( Yoga for One Earth One Health) 'ஒரே பூமி மற்றும் ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா ' என்பதன் கீழ் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தக் கருப்பொருளானது நமது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆரோக்கியமான நல் வாழ்விற்கும் அதன் மூலம் கட்டமைக்கப்படும் இந்த பூமியின் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம் 'ஒரு உலகம் ஒரு குடும்பம்' என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இதன்மூலம் தினசரி நம் நலனுக்காக யோகா செய்வது நமது உடலுக்கும் பூமிக்கும் நல்லது செய்யும் வகையில் ஆரோக்கிய வாழ்வை கடைப்பிடிக்க உதவுகிறது. மேலும் உலக மக்கள் இயற்கையை பராமரிக்கவும் யோகாவை அனுசரித்து சிறப்பாக வாழவும் அன்றாட வாழ்க்கையில் ஒரு சமநிலையான மகிழ்வை உணரவும் ஊக்குவிக்கும் ஒரு வழியாகத்தான் இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருப்பொருளை வெறும் உறுதிமொழியாக மட்டுமல்லாமல் இதை ஆழமாக சிந்தித்தால் ஒரு உண்மை நமக்கு கிடைக்கும். அதாவது நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஆரோக்கியமாகவும் சீராகவும் இல்லாவிட்டால் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியாது என்பதை இதன் மூலம் அறியலாம்.
உதாரணமாக நாம் சுவாசிக்கும் காற்று முதல் நாம் அருந்தும் நீர் மற்றும் நாம் உட்கொள்ளும் உணவு வரை அனைத்தும் இயற்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உலகம் அந்த இயற்கையின் வழி வருகிறது. இதில் வாழும் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உடல்நலம் பேணும் பயிற்சிகளை கடைபிடிக்க வேண்டும். ஆகவேதான் உடல் பயிற்சிகளில் சிறப்பு மிக்க யோகா இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்போதைய சூழலில் மன அழுத்த அளவுகள் அதிகரித்து நோய்களால் வாழ்க்கை முறைகள் பாதிக்கப்பட்டும் இயற்கையின் மாறிவரும் காலநிலைகள் கவலைப்படுத்தியும் வருவதை அறிவோம்.
இதை மாற்றி நாம் வாழும் இந்த உலகில் நமது ஆரோக்கியத்தையும் மகிழ்வையும் மீட்டெடுக்க யோகா ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக அமைகிறது என்பதையே இந்த கருப்பொருள் நமக்கு வலியுறுத்துகிறது.