ஆகஸ்ட் 21 - உலக மூத்த குடிமக்கள் தினம்
முதுமையை வெல்ல முடியாது, ஆனால் இப்பருவத்தை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து முதுமையை தள்ளிப் போடலாம். ‘முதுமையில் இளமை’ ஐம்பது வயதில் ஆரம்பமாகிறது. முதுமையில் நலமாக வாழ சில பயனுள்ள குறிப்புகளை வழங்குகிறார் டாக்டர் வி.எஸ். நடராஜன்.
வருமுன் காக்க:
ஐம்பது வயதிற்குமேல் பலருக்கு உடல் பல நோய்களின் மேய்ச்சல் காடாக இருக்கிறது. பல நோய்கள் எவ்விதத் தொல்லையுமின்றி மறைந்திருக்கும். ஆ ண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மறைந்திருக்கும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை அளிக்கலாம். அப்படிச் செய்தால், நோயினால் துன்பப்பட வேண்டியதும் இல்லை. பணமும் விரயம் ஆகாது.
முதியவர்களுக்கும் தடுப்பு ஊசி உண்டு:
முதியவர்கள் இறப்பிற்கு முக்கிய காரணம் நுரையீரல் சார்ந்த நோய்களாகும். வைரஸ் மற்றும் பொக்டீரியா கிருமிகள் மூலம் மார்பில் களிகட்டி பலர் இறக்கவும் காரணமாகிறார்கள். இதற்கு பக்க விளைவுகள் இல்லாத தடுப்பூசிகள் உள்ளன. உ.ம். நிமோனியாவிற்கு ஒரே ஒரு தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆயுட்காலம் முழுவதற்கும் இந்நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். முதியவர்கள் டெட்டனஸ் தடுப்பூசியும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டுக் கொள்வது நல்லது. இதைப் போலவே ஆண்டுக்கு ஒருமுறை ஃப்ளூ தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நல்லது. டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
உணவில் கவனம் தேவை:
வயதான காலத்தில் உண்ணும் உணவின் அளவு குறைவாக இருந்தாலும் அது நிறைவான சத்துள்ள உணவாக இருக்க வேண்டும்; எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், விரைவில் செரிக்கக் கூடியதாகவும், சற்று மலிவாகவும் இருந்தால் மி,கவும் நல்லது.
வயதான காலத்தில் புரதச்சத்து அதிகமுள்ள கொத்துக்கடலை, பட்டாணிமுட்டையின் வெள்ளைக்கரு, சோயா மற்றும் காளான்களை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசியைக் குறைத்துக் கொண்டு கேழ்வரகு, சிறு தானியங்கள் மற்றும் கோதுமையை சற்று அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள கிழங்கு வகைகளையும் குறைத்தல் நல்லது. ஏன் என்றால், இது எடையை அதிகரிக்கும்.
எலும்பினை உறுதி செய்ய:
எலும்பு, நாற்பது வயதிற்கு மேல் தன் வலிமையை இழப்பதனால் முதியவர்கள் சற்று கீழே விழுந் தாலும் எலும்பு முறிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க பால், கேழ்வர்கு, முருங்கைக் கீரை, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, கறிவேப்பிலை போன்ற சுண்ணாம்புச் சத்துள்ள உணவுகளைச் சற்று அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
மலச்சிக்கலைத் தவிர்க்க:
வயதான காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து அதிகம் உள்ள வாழைத்தண்டு, முட்டைக் கோஸ், காலி ஃபிளவர், புடலங்காய், பாகற்காய், பேரீச்சம் பழம், மாம்பழம், அத்திப்பழம், கொய்யாப்பழம், மிளகு, கொத்துமல்லி, மிளகாய், ஓமம், வெந்தயம், சுண்டைக் காய் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு தாகம் இல்லாவிட்டாலும் நீர், பழச்சாறு மற்ற திரவப் பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உப்பில் கவனம் தேவை:
உப்பின் அளவை அதிகமாக உண்ணும் முதியவர்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், சீறுநீரக பாதிப்பும் வர வாய்ப்பு உண்டு. ஆகையால், சிறிது உப்பின் அளவை குறைத்து உண்பது நல்லது. ஊறுகாய், அப்பளம், வடகம், சால்ட் பிஸ்கெட், போன்று உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கலாம். அதே சமயத்தில் உப்பை அதிகமாகக் குறைத்தல் கூடாது.
முதுமைக்கேற்ற உடற்பயிற்சி:
முதியவர்கள் வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளை யாடுவது போன்ற உடற்பயிற்சிகளை முப்பதிலிருந்து நாற்பத்து ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம். நாள்தோறும் மூன்றிலிருந்து ஐந்து கி.மீ. தூரம் வரை நடப்பது நல்லது அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் சுமார் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் இடைவெளி விட்டு பத்து நிமிடங்கள் என நாளொன்றுக்கு மூன்று முறை உடற்பயிற்சி செய்யலாம்.
தனிமையைத் தவிர்க்கவும்:
முதுமையின் விரோதி தனிமை. எப்பாடுபட்டாவது தனிமையைத் தவிர்க்கவேண்டும். முதுமையில் தனிமையில் முடங்கிக் கிடப்பவர்களுக்கு மூப்பின் விளைவு ஆறு மடங்கு அதிகமாக ஏற்படக்கூடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. நடுத்தர வயதிலிருந்தே முதுமைக் காலத்திற்காக நல்ல பொழுதுபோக்கு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
மனநலம் காக்க தியானம்:
தியானத்தால் மனம் அமைதி அடைகிறது. தெளிவான சிந்தனை கிடைக்கிறது. மனோபலம், சகிப்புத்தன்மை, போன்ற நற்குணங்கள் கிடைக்கின்றன. முறைப்பபடி தியானம் செய்து வந்தால் நல்ல மனநலமும் உடல்நலமும் கிடைக்கும்.
புலம்புவதைத் தவிர்த்தல்:
மற்றவர்களிடம் புலம்புவதை முடிந்தளவுக்கு தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பிரச்னைகள் இல்லாத மனிதர்கள் யாருமில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். நோய்களுக்கு வருந்தாதீர்கள். நோய்கள் வராமல் இருந்தால் நல்லது. வந்துவிட்டால், அதை நினைத்து புலம்புவதை விடுத்து அதற்கு தக்க சிகிச்சை எடுத்தால் போச்சு என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சொந்தக்காலில் நிற்கவும்:
நடுத்தர வயதில் இருந்தே உங்கள் தேவைகளை யாரையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்காமல் நீங்களே செய்து பழகிக் கொள்ள வேண்டும்.
பற்றற்ற வாழ்வு:
வயது ஆக ஆக மனதளவில் பந்த, பாசங்களை குறைத்துக்கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக பாசவலையிலிருந்து மீண்டு, தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீரைப்போல வாழக் கற்றுக் கொள்வது முதியவர்களுக்கு நல்லது. சொல்வது எளிது. அதன்படி செயல்படுவது சற்று கடினம். முயற்சி செய்துதான் பாருங்களேன்!
அதற்காக, உறவுகளை வெட்டிவிட வேண்டாம். வெட்டி விட்ட உறவு கூட ஒரு சமயத்தில் கை கொடுக்கும். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர் களை உயிருக்கு உயிராக நேசியுங்கள். உறவுகள் கைவிட்ட காலத்தில் நட்புதான் உங்களுக்கு கைகொடுக்கும்.
அளவான நிதி அவசியம்:
நடுத்தர வயதிலிருந்தே முதுமைக் காலத்திற்காக ஓரு கட்டாய சேமிப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பணம் கையிலிருந்தால் உற்றார் உறவினர்கள் ஓரளவிற்கு முகம் சுளிக்காமல் நமக்கு உதவ முன் வருவார்கள். முதியவர்கள் தன் சொத்துக்களை முழுமையாகத் தன் வாரிசுகளுக்குக் கொடுத்து விடக்கூடாது. தனக்கு என்று வைத்துக்கொண்டுதான் பிறருக்கு உதவிசெய்ய வேண்டும்.
முதுமையில் வசந்தம் வீச மேற்கண்ட வழிமுறைகளை தொடர்ந்து கடை பிடித்து வாருங்கள். முதுமை என்பது ஒரு புயலல்ல அது ஒரு பூங்காற்று என்பதை நீங்களே உணர்வீர்கள்.
(அக்டோபர் 1 - 15, 2015 தேதியிட்ட மங்கையர் மலர் இதழிலிருந்து ...)