
உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் கிளென் மாக்ஸ்வெல் அடித்த அதிரடி இரட்டை சதத்தின் மூலம் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானிடமிருந்து வெற்றியை தட்டிப் பறித்தது.
மாக்ஸ்வெல்லின் சிறப்பான ஆட்டத்துடன் அதிர்ஷ்டமும் சேர்ந்து கொண்டதால் அவர், 128 பந்துகளை சந்தித்து 201 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்த ஆஸ்திரேலியா 292 ரன்கள் எடுக்க மாக்ஸ்வெல் முக்கிய காரணமாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 12 புள்ளிகளுடன் அரையிறுதி போட்டியில் இருப்பதை உறுதிசெய்தது.
கிளென் மாக்ஸ்வெல் மற்றும் பாட் கம்மின்ஸ் இருவரும் கூட்டாக 202 ரன்கள் சேர்த்தனர். இதில் கேப்டன் கம்மின்ஸ் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், மாக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்துக்கு உறுதுணையாக இருந்தார்.
மாக்ஸ்வெல் அடித்த அதிரடி இரட்டை சதம், 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் கபில்தேவ், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 175 ரன்களை குவித்ததை நினைவுபடுத்தியது. மாக்ஸ்வெல் அடித்த 201 ரன்களில் 10 சிக்ஸர்களும், 21 பவுண்டரிகளும் அடங்கும். கால்களில் தசைப்பிடிப்பு இருந்த போதிலும் துணிச்சலுடன் ஆடி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கனவில் இருந்தது. ஆனால், மாக்ஸ்வெல் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆப்கானிஸ்தானின் கனவை தகர்த்துவிட்டார்.
இறுதியில் ஆஸ்திரேலியா 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களில் நவீன், ஓமர்சாய் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முஜிப் 1 ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
முன்னதாக டாஸ் ஜெயித்த ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்ய முன்வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மதுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜர்தான் இருவரும் களம் இறங்கினர்.
சிறந்த பேட்ஸ்மென் ஆன ரஹ்மதுல்லா 21 ரன்களில் ஹஸ்லேவுட் பந்துவீச்சில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இப்ராகிம் ஜர்தான் நின்று ஆடி 129 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.
ரஹ்மத் ஷா 30, ஹஸ்மதுல்லா 26, அஸ்மதுல்லா 22 ரன்களிலும் அவுட்டானார்கள். ரஷீத்கான் 35 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணியினர் விக்கெட் விழுந்துவிடக்கூடாது என்ற குறிக்கோளுடனேயே ஆடியதால் அணியில் ஸ்கோரை 300-க்கு மேல் கொண்டு செல்ல இயலவில்லை.
இறுதியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது.