உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வலிமையான இந்திய அணியை எதிர்கொள்வதில் பெருமைப்படுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். எனினும் இந்திய அணியை எதிர்கொள்ளுவதர்கான திட்டம் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாதில் நடைபெற உள்ளது. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.
ஐந்துமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, லீக் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களிலும் வென்ற இந்திய அணியுடன் மோதுகிறது. உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் ஆஸ்திரேலியா 2003 உலக கோப்பைப் போட்டியில் செளரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியை வென்றது. அதேபோல இந்த ஆண்டு, அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் இந்திய அணியை வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திடம் இந்திய அணியின் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, “ இது ஒரு நல்ல கேள்வி, இந்திய அணி உண்மையிலேயே சிறப்பாக விளையாடி வருகின்றனர். உலக கோப்பை லீக் போட்டிகள் அனைத்திலும் இந்தியா வெற்றிவாகை சூடியுள்ளது. அவர்கள் உண்மையிலேயே முதல்தர ஆட்டக்காரர்களாக உள்ளனர். ஆமதாபாதில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியைக் நேரில்காண ஒரு லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த போட்டியை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
உலக கோப்பை போட்டியின் உச்சத்தில் இருக்கும் இந்திய அணியை எப்படி சந்திக்கப் போகிறீர்கள். அதற்கான உங்கள் திட்டம் என்ன என்று ஸ்மித்திடம் கேட்டதற்கு, இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் அனைத்திலும் முன்னிலையில் உள்ளது. அந்த அணியுடன் மோதுவதில் பெருமைப்படுகிறோம் என்று கூறிய ஸ்மித், அதற்கு மேல் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
எனினும் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இருவரும் நல்ல ஆட்டத்தை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஸ்மித் இருக்கிறார். மேலும் கிளாஸன் மற்றும் ஜான்சென் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் திறமையை வெளிப்படுத்துவார் என்றும் ஸ்மித் கருதுகிறார்.