
உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியா இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) லக்னெளவில் ஏகனா ஸ்டேடியத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்தியா தொடர் வெற்றிகளை பெற்றுவரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் முனைப்பில் இங்கிலாந்து அணி மும்முரமாக உள்ளது. எனினும் இங்கிலாந்து அணியை வென்று வரலாறு படைக்கும் முனைப்பில் இந்தியா உள்ளது. எனவே லக்னெவில் நடைபெறும் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் சக்திவாய்ந்த பேட்ஸ்மென்களில் ஒருவரான விராட் கோலி, உலக கோப்பை போட்டியில் அதிரடி காட்டி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் சாதனை படைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா அதிக போட்டியில் வென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக அதிரடி காட்டி விளையாடிய வீரர்களில் இப்போது விராட் கோலியும் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 35 போட்டிகளில் விராட் கோலி 1340 ரன்கள் எடுத்துள்ளார். இவற்றில் 3 சதங்களும் 9 அரை சதங்களும் அடங்கும். இந்த பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 48 போட்டிகளில் பங்கேற்று 1546 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் 10 அரை சதங்களும் அடங்கும். இந்த பட்டியலில் 37 போட்டிகள் மூலம் 1523 ரன்கள் எடுத்து யுவராஜ் சிங் இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னாள் பிரபல ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 37 போட்டிகளில் பங்கேற்று 1455 ரன்கள் எடுத்துள்ளார். அவர் மொத்தம் 3 சதம் மற்றும் 9 அரை சதங்களை அடித்துள்ளார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் 25 போட்டிகளில் 38 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ரவீந்தரன் அஸ்வின் 3 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை எடுத்து பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்தியா இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வென்று 10 புள்ளிகளை பெற்றுள்ளது. இங்கிலாந்து நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வென்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இந்தியா தொடர்ந்து வெற்றியை தக்கவைக்குமா அல்லது இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்யுமா என்பது நாளை தெரிந்துவிடும்.