
2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி ஜோர்டான் நாட்டு அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று மார்ச் 25 ஆம் தேதி நடைபெற்ற கிரேக்க-ரோமன் மல்யுத்தத்தில் ஐந்து எடைப் பிரிவுகளில் கடுமையான போட்டி நிலவியது. இந்தியாவிற்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற சீனியர் போட்டியில் இந்தியா சார்பாக சுனில் குமாரும், தஜிகிஸ்தானின் சுக்ரோப் அப்துல்காயேவும் மோதினார்கள்.
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய சுனில் 10-1 என்ற கணக்கில் சுக்ரோப்பை தோற்கடித்தார். இரண்டாவது ஆட்டத்தில் சுனில், சீனாவின் ஜியாக்சின் ஹுவாங்குடன் மோதினார். சுனில் குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீனாவின் ஜியாஜ்சினை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
காலிறுதியில் வென்ற சுனில் குமார் அரையிறுதியில் ஈரானின் யாசின் அலியுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 1-3 என்ற கணக்கில் சுனில் குமார் பின் தங்கியதால் அவரது வெள்ளி பதக்க வாய்ப்பு நழுவியது. ஆயினும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவவின் பதக்கப் பட்டியலில் கணக்கை துவக்கினார்.
இது ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் அவர் வெல்லும் ஐந்தாவது சீனியர் பதக்கமாகும். அவர் 2019 ஆம் ஆண்டில் வெள்ளி பதக்கமும் 2020 இல் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். சுனில் 2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது கிரேக்க ரோமன் பிரிவில் அவர் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் 27 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரேக்க-ரோமன் மல்யுத்தத்தில் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.
2025 ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டிகளில் கிரேக்க-ரோமன் பிரிவில் கலந்து கொண்டுள்ள மற்ற நான்கு வீரர்களான நிதின், உமேஷ், சாகர் தக்ரன், பிரேம் ஆகியோர் பதக்கம் எதுவும் வெல்லாமல் தோல்வியடைந்தனர். மேலும் இந்திய மல்யுத்த வீரர்களான சுமித், நீரஜ், குல்தீப் மலக், ராகுல் மற்றும் நிதேஷ் ஆகியோர் அடங்கிய அடுத்த குழு இன்று போட்டிக்கு வரவுள்ளது. இந்திய மல்யுத்த அணியின் பெண்கள் குழு இந்த வார இறுதியில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.